பொதுவாக தமிழ் சினிமாவில் நடிகர்கள் தங்களுடைய நூறாவது படம் என்றால், இயக்குநர், கதை, வசனகர்த்தா, இசையமைப்பாளர் இதர பணியாளர்கள் என பார்த்து பார்த்து தெரிவு செய்வார்கள். தமிழில் முன்னணி நட்சத்திரமாக இருந்தவர்களில் கமல்ஹாசன் தனது நூறாவது படமாக ராஜபார்வை, ரஜினிகாந்த் தனது நூறாவது படமாக ராகவேந்திரா, பிரபு தனது நூறாவது படமாக நடித்த ராஜகுமாரன் ஆகிய படங்களில் நடிக்க, நடிகர் விஜயகாந்த் தன்னுடைய நூறாவது படமாக கேப்டன் பிரபாகரன் படத்தில் நடித்தார்.
ஏனைய நடிகர்களின் நூறாவது படத்தை விட விஜய்காந்தின் நூறாவது படமான கேப்டன் பிரபாகரன் தமிழகமெங்கும் வெற்றிகரமாக ஓடி வெள்ளி விழா கண்டது. படத்தில் வீரபத்ரனை பிடிக்க சத்தியமங்கலம் செல்வதாக புறப்படும் விஜய்காந்ததை வீரபத்ரனாக நடித்த மன்சூர் அலிகான் வரும் வழியிலேயே கொல்ல வேண்டுமென தனது சகாக்களிடம் கூற, ரயில் வண்டியில் வரும் விஜய்காந்த்தை வழியிலேயே மறித்துக் கொல்ல முற்படுவதாக சண்டைக்காட்சி வரும். அந்த சண்டைக்காட்சியில் வரும் ரயில் வண்டி மதுரையில் இருந்து போடி செல்லும் ரயில்.
தனது நூறாவது படம் பயங்கர ஹிட்டாக அமைய, விஜய்காந்த் தனது 125 படமான உளவுத்துறை படத்திலும் இதே ரயிலில் ஒரு சண்டைக்காட்சியை எடுத்திருப்பார். அதன் பின்பு இயக்குநர் பாலா இயக்கிய பிதாமகன் படத்தில் நடிகர் சூர்யா, நடிகை லைலா இந்த ரயிலில் நடிக்க எடுக்கப்பட்டது பலராலும் ரசிக்கப் பட்ட நகைச்சுவை காட்சிகள்.
சரியாக ஒரு மீட்டர் அகலத்தில் மீட்டர்கேஜ் பாதையாக இருந்த இருந்த மதுரை- போடி ரயில் பாதை அகல ரயில் பாதையாக மாற்ற வேண்டி அகற்ற பட்டது. பக்கத்து மாவட்டங்களான திண்டுக்கல், மதுரையில் ரயில்வே வசதி இருக்க, தேனி மாவட்ட மக்களுக்கு இன்று வரை, ரயில் வண்டி எட்டாத ஒன்றாகவே உள்ளது.
ஆங்கிலேயர் காலத்தில் அவர்கள் இந்திய வெப்பச் சூழல் தாங்க இயலாது தங்களுடைய வசதிக்காக இங்கிலாந்தில் இருந்து கப்பல்களில் கொண்டு வரப்பட்ட ஐஸ் கட்டிகளைப் பாதுகாக்க மெரீனா கடற்கரையில் காற்றோட்ட வசதிகள் இல்லாத வகையில் கட்டிய ஐஸ் ஹவுஸ் என அழைக்கப்படும் கட்டிடத்தில் ஐஸ் கட்டிகளைப் பாதுகாப்பாக வைத்து பயன்படுத்தினர். பின்னாளில் அந்த ஐஸ் ஹவுஸ் கட்டிடத்தில் விவேகானந்தர் வந்து சில நாட்கள் தங்கியிருந்தமையால் இன்றும் ஐஸ்ஹவுஸ், விவேகானந்தர் இல்லமாக அழைக்கப்படுகிறது.
இப்படியாக ஐஸ்ஹவுஸ் கட்டி ஐஸ் கட்டிகளை பத்திரமாக வைத்த ஆங்கிலேயர்தாம் உதக மண்டலம், கொடைக்கானல் என குளிர் பிரதேச பகுதிகளை கண்டறிந்து வசிப்பிடங்களை அமைத்தனர். இன்றும் உலகின் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக யுனெஸ்கோவால் சான்றளிக்கப்பட்டு கொண்டாடப்படும் உதகை மலை ரயில் பாதையை அமைத்தவர்கள்தான் இந்த மதுரை-போடி ரயில் பாதையை அமைத்து ரயில் வண்டியை ஓட விட்டவர்கள்.
ஆங்கிலேயர்கள் உதகையிலுள்ள தங்களுடைய வசிப்பிடங்களுக்கு செல்வதற்காக மலை ரயில் பாதையை அமைத்தனர், எதன் பொருட்டு இந்த மதுரை-போடி இடையிலான ரயில் பாதையை அமைத்து ரயில் வண்டியை விட வேண்டுமென்ற கேள்வி நம்மில் பலருக்கும் எழலாம். போடி நகரம் இன்று நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க வேண்டுமென நிற்கும் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள நகரம். இடுக்கி, குரங்கனி என மலைக்கிராமங்கள் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் விளைவித்த ஏலக்காயை போடி கொண்டு வந்து மேற்கத்திய நாடுகளுக்கு கொண்டு செல்வதற்காக என முழுக்க முழுக்க வணிக ரீதியான பயன் பாட்டிற்காக அமைக்கப்பட்டதே மதுரை-போடி இடையிலான ரயில் வசதி.
இன்றைய தேதியில் தேனி மாவட்டத்தின் பழமையான கல்லூரியாக போடியில் உள்ள CDPA கல்லூரி Cardamom Planters' Association College என்பதே ஆகும். மேற்கு தொடர்ச்சி மலையில் விளைவித்த ஏலக்காயை போடியில் கொண்டு வந்து ஆங்கிலேயர் வசம் ஒப்படைக்கும் நபர்களின் கூட்டமைப்பின் சார்பாக ஆரம்பிக்க பட்டதே, இந்த கல்லூரி. "மேற்கு தொடர்ச்சி மலை" படத்தில் கூட இந்த ஏலக்காயை கொண்டு வருவதை அடிப்படையாக கொண்டே கதையமைத்து இருப்பார்கள்.
மதுரை மாவட்டத்துடன் ஒருங்கிணைந்து இருந்த தேனி 1997-ம் ஆண்டில் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட, அன்றைய காலகட்டத்தில் மாவட்டங்களின் பெயர்களோடு தலைவர்கள் பெயரோடு இணைத்தே அழைக்கப்பட்ட நிலையில், புதிதாக உருவாக்கப்பட்ட தேனி மாவட்டத்தின் பெயர் வீரன் அழகு முத்துக் கோன் மாவட்டம் என அழைக்கப்பட்டது. மதுரை நகரில் தனது சிலம்பை வீசி நியாயம் கேட்ட கண்ணகி தேனி வழியாக மேற்கு தொடர்ச்சி மலையில் ஏறி விண்ணுலகம் சென்றதாக சிலப்பதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு இன்றும் கண்ணகி தேவி கோவில் என்ற பெயரிலான கோவிலை வழிபட்டு வர, கேரள அரச சிறப்பு அனுமதி வழங்கி வருகிறது. அதை அடிப்படையாகக் கொண்டு தேனி மாவட்டத்தின் பெயரை கண்ணகி மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென சிலர் கேட்க, பின்னர் தமிழக மாவட்டங்களின் பெயர்கள், அந்தந்த ஊர்களின் பெயரிலான அடிப்படையிலேயே அழைக்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.
அன்றைய காலகட்டத்தில் ஆண்டிபட்டி, வைகை நதிக்கரை விவசாயிகள் பலரும் ரயில் வண்டியின் சப்தத்தை கேட்டே மணி இத்தனை என்று கூறிடும் அளவிற்கு மக்களின் உணர்வுகளில் கலந்த ஒன்றாக இந்த ரயில் வண்டி இருந்தது.
விரைவில் வந்துவிடும் என அகல ரயில் பாதை ரயில் வண்டியின் வருகையை ஆவலுடன் தேனி மாவட்டமே எதிர்பார்த்து காத்து கிடக்கிறது. அப்படி ஓடினால் தேனியில் இருந்து மதுரை செல்லும் ரயில் மற்றுமொரு 'கிழக்கே போகும் ரயில்' ஆக இருக்கும்.
- வீ.வைகை சுரேஷ்
source https://www.vikatan.com/lifestyle/travel/return-of-theni-rail
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக