Ad

ஞாயிறு, 28 நவம்பர், 2021

பிக்பாஸ் சீசன் 5: ரம்யா கிருஷ்ணனை வெட்கப்பட வைத்த அபிஷேக்; காப்பாற்றப்பட்ட பிரியங்கா!

பிக்பாஸ் தமிழ் சீசன் வரலாற்றில் கமலைத் தவிர்த்து இன்னொருவர் நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தது இதுவே முதன்முறை. ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியைக் கையாண்டது எவ்வாறு இருந்தது? அவர் முழுவதுமாக ஏமாற்றவில்லை என்பதே ஆறுதல். நன்றாகவே சமாளித்தார். ஆனால், சில சமயங்களில் ஒரு பார்வையாளரைப் போலவே பாரபட்சமாக நடந்து கொண்டார் என்று தோன்றாமல் இல்லை. குறிப்பாக அக்ஷராவை ‘பாதிக்கப்பட்டவராக’ காட்டும் திசையிலேயே தன் விசாரணையைக் கொண்டு சென்றது ‘வெளிப்படையாக’ தெரிந்தது. இதைத் தவிர்த்திருக்கலாம்.

கமலாக இருந்திருந்தால் “இந்த வார்டன் டாஸ்க் பண்ணியிருந்தீங்க இல்லையா? ‘நம்மவர்’ படத்துல இப்படி ஒரு கேரக்டர் பண்ணியிருப்பேன்...” என்று சுய புராணத்தை ஆரம்பித்திருக்கக்கூடும். நிகழ்ச்சி தொடர்பானவற்றை மட்டும் ரம்யா பேசியது சிறப்பு. இது மற்ற ரியாலிட்டி ஷோக்கள் மாதிரி ஜாலியானதல்ல. மனிதர்களின் உணர்ச்சிகளை நடுநிலைமையோடு கையாள வேண்டிய நிகழ்ச்சி. இந்த ஏரியாவில் தான் கில்லி என்பதை கமல் பலமுறை நிரூபித்திருக்கிறார். எனவே அவரின் வருகை விரைவில் நிகழட்டும் என்று காத்திருப்போம்.

Kamal Haasan | கமல்ஹாசன்

எபிசோட் 56-ல் என்ன நடந்தது?

‘ஒரு முக்கிய அறிவிப்பு’ என்கிற பிக்பாஸ் குரலோடு நிகழ்ச்சி ஆரம்பித்தது. ‘கமலுக்கு கொரானோ தொற்று ஏற்பட்டிருக்கிறது’ என்று அறிவிக்கப்பட்டதும், போட்டியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். அபிஷேக் தலையில் கை வைத்துக் கொண்டார். தாமரை பிரார்த்தனையை முணுமுணுக்க ஆரம்பித்தார். ‘கவலைப்படத் தேவையில்லை’ என்றதும்தான் அவர்களுக்கு சற்று ஆசுவாசம் ஏற்பட்டது. பிக்பாஸ் போட்டியாளர்கள் என்றல்ல, கமலுக்கு உடல்நலக்குறைவு என்கிற செய்தியைக் கேட்டவுடன் தமிழக மக்களுக்கே ஜெர்க் ஆகியிருக்கும். அப்படியொரு மகத்தான கலைஞன் அவர்.

Kamal Haasan | கமல்ஹாசன்
மருத்துவமனையில் இருந்து வீடியோ வழியாக தோன்றினார் கமல். அவர் சற்று சோர்வாக இருந்ததும் தெரிந்தது. “கோவிட் தொற்று இன்னமும் நம்மை விட்டு அகலவில்லை. அதைச் சொல்வதற்காகத்தான் மெனக்கெட்டு வந்தேன்” என்பதை சுற்றிச் சுற்றி சொன்னார் கமல். “மேல்தட்டு மக்களையும் கொரானோ விட்டு வைக்காது” என்று அவர் சொன்னது சிறப்பு. ‘கட்டிப்பிடி வைத்தியம்லாம் இந்தச் சமயத்தில் உதவாது. தள்ளியேதான் நின்னாகணும்’ என்றது வழக்கமான குறும்பு.

“நிகழ்ச்சி தொய்வின்றி நடப்பதற்காக என் தோழியை உதவி கேட்டிருக்கிறேன். அவர் வந்து தொடர்வார்” என்று கமல் சொன்னதும் ‘கமலுக்கு ஏகப்பட்ட தோழிகள் ஆயிற்றே?’ என்று மக்கள் டெலிபோன் டைரக்டரியை எடுத்து ஆராயத் துவங்கினார்கள். ‘ரம்யா கிருஷ்ணன் தான் அவர்’ என்பதை முதன்முதலில் கண்டுபிடித்தவர் சஞ்சீவி. ‘விஜய் டிவி தொடர்பாக யார் சீனியர்?’ என்று அவர் யோசித்திருப்பார். பிரியங்காவும் இதைச் சரியாக யூகித்ததில் ஆச்சரியமில்லை.

“வாங்க தோழி” என்று கமல் அழைத்ததும் நிதானமான, அழகான நடையில் வந்தார் ரம்யா கிருஷ்ணன். “உங்களை மாதிரி என்னால நடத்த முடியாது” என்று கமலிடம் அவர் சம்பிரதாயத்திற்காக சொன்னது போல் தெரியவில்லை. உள்ளத்தில் இருந்துதான் சொல்லியிருக்க வேண்டும். ‘குரு வணக்க’ சடங்கு முடிந்ததும், “புத்தகப் பரிந்துரையை சொல்லிட்டு போயிடுங்களேன்” என்றார் ரம்யா. ஏன், ரம்யாவிற்கு புத்தக வாசிப்பு பழக்கம் இல்லையா? கமல் இந்த வாரம் பரிந்துரைத்த நூல், Samuel Charles Hill எழுதிய Yusuf Khan; The Rebel Commandant. மருதநாயகம் என்கிற போர் வீரர் பற்றி நமக்குத் தெரியும். இளமையில் மதம் மாற்றப்பட்டு ‘யூசுப்கான்’ என்கிற அடையாளத்துடன், இந்திய மண்ணில் பிரிட்டிஷ் படைகளுக்கு பல வெற்றிகளைத் தேடித்தந்தவர். பின்னர் பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராக செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு தூக்கில் இடப்பட்டார். இந்த நூல் வழியாக தான் அறிந்த ‘மருதநாயகம்', தனக்கு நெருக்கமான நபராக மாறி விட்டதை கமல் பரவசத்துடன் சொன்னார்.

ரம்யா கிருஷ்ணன் | Ramya Krishnan
ரம்யாவிற்கு வாழ்த்து சொல்லி கமல் விலகிய பிறகு “நான் ஷூட்டிங் இடைவெளில கூட கமலுக்கு போன் பண்ணி “இந்த வாரம் யார் எலிமினேட்’ன்னு கேட்டு நச்சரிப்பேன். அந்த அளவிற்கு பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்ப்பேன்” என ஆர்வத்தை வெளிப்படுத்தினார் ரம்யா.

‘வாங்க, வெள்ளிக்கிழமை நிகழ்வுகளை பார்க்கலாம்’ என்று அழைத்துச் சென்றார் ரம்யா. “இந்தப் பிரியங்கா இருக்காங்களே.. அவங்களுக்கு பேசவே தெரியல... சப்போர்ட்டுக்கு ஆளு இருக்குன்னு என்னத்தையாவது பேசிடறது” என்று ஐக்கியிடம் விமர்சனம் வைத்துக் கொண்டிருந்தார் அண்ணாச்சி.

ராஜுவின் விவகாரமான கேள்விக்குப் பிறகு பாவனியிடமிருந்து அபினய் சற்று விலகியிருக்கிறார். ஆனால் அந்த இடத்திற்கு அமீர் போட்டி போடுகிறார் போல. “வெளில இருந்து பார்த்தீங்கள்லே… பிக்பாஸ் போட்டியாளர்களில் யாரை உங்களுக்குப் பிடிச்சது?” என்று பாவனி கேட்டபோது “உங்களைத்தான் பிடிக்கும். அமைதியா இருப்பீங்க. பிரச்னை வந்தா வெடிப்பீங்க. அப்புறம் மறந்துடுவீங்க” என்று அமீர் சொன்னதும், அவரை அடித்து பேசுமளவிற்கு பாவனி நெருக்கமாகி விட்டார். “இதையெல்லாம் நான் பண்ணதே இல்லையே..” என்று உள்ளுக்குள் காண்டாகி அமீரை பாவனையாக பாராட்டினார் அபினய்.

பிக் பாஸ் 5 | Bigg Boss

“ஒருவரைப் பார்த்து வியந்த விஷயம். ஆனா சம்பந்தப்பட்டவருக்கு இப்போதுதான் தெரியும். அதைச் சொல்லுங்க பார்க்கலாம்..” என்கிற விளையாட்டை ஆரம்பித்தார் வருண். முன்பு பிரியங்காவை விமர்சித்த இமான் இப்போது “அந்தக் குழந்தையே நீங்கதான்” என்கிற அளவில் பாராட்டினார். நிரூப்பிடம் அப்பாவித்தனம் உள்ளதை எப்படியோ கண்டுபிடித்து வியந்தார் ராஜு. “புருஸ்லீ அளவிற்கு தாமரையக்காவால் ஸ்டண்ட் செய்ய முடியும்” என புதிய கோணத்தில் பார்த்தார் பிரியங்கா. ‘'உன் மேல அன்பு காட்டுவேன். ஆனா அது எனக்கு மட்டும் தெரிஞ்சா போதும்ன்னு ஒரு கேரெக்டர் இங்க வாழுது. அது நிரூப்” என்று கண்டுபிடித்துச் சொன்னார் அமீர். (அடடே... இப்படியொரு கேரெக்டரை வெச்சே திரைக்கதை எழுதலாம் போலயே!).

பிக் பாஸ் 5 | Bigg Boss
“வெளில கழுவி ஊத்தறாங்க” என்று ‘Truth or dare’-ல் வெளிப்பட்ட அமீரின் கமெண்ட், நிரூப்பை பாதித்திருக்க வேண்டும். “அமைதியா இருந்தாலும் தப்பு, அராஜகமா இருந்தாலும் தப்புன்னா.. என்னதான் பண்றது?” என்று காமிராவைப் பார்த்து அனத்திக் கொண்டிருந்தார். கடந்த வாரம் அவர் விளிம்பில் தப்பித்ததாலோ என்னவோ, ‘ஸ்கூல்’ டாஸ்க்கில் ரொம்பவே அடக்கி வாசித்தார் போல. ஆனால் நிரூப்பை ஒரு வலிமையான போட்டியாளராகவே மக்கள் பார்க்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது. நிரூப் செய்த பிழைகளை பிறகு அவரிடம் பட்டியல் போட்டு சொல்லிக் கொண்டிருந்தார் பிரியங்கா.

‘வார்டனாக’ சிபி ஓவராக நடந்து கொண்டார் என்பது அக்ஷராவின் குற்றச்சாட்டு. ஆனால் ‘Best Performer’ ஆக தேர்வானவர் சிபிதான். இதிலிருந்தே அக்ஷராவிற்கு ஏதாவது புரிந்திருக்க வேண்டும். அந்த வீட்டிலேயே சிபியின் நடவடிக்கைகளை ஆதரிக்கிறார்கள் என்றால், மக்களில் பலரும் அப்படி நினைப்பார்கள் என்றாவது யோசித்திருக்க வேண்டும். இப்படி ‘பொசுக் பொசுக்’ என்று தான் அழுவது மக்களை எரிச்சல் படுத்தக்கூடும் என்றாவது அக்ஷரா உணர வேண்டும்.

அமீரிடம் பேசிக் கொண்டிருந்தார் பிரியங்கா. “அபிஷேக் இருந்தப்பவும் சரி, போய் திரும்பி வந்தப்பவும் சரி. நான் ஒரே மாதிரிதான் இருக்கிறேன். என்னிடம் மாற்றமில்லை. (ஆஹான்!). ஆனா நிரூப் கிட்ட இப்ப மாற்றம் தெரியுது” என்று ஆராய்ச்சி நடத்திக் கொண்டிருந்தார் பிரியங்கா. நிரூப் குழம்பிப் போயிருப்பது உண்மைதான்.

பிக் பாஸ் 5 | Bigg Boss

பிக் பாஸ் 5 | Bigg Bossமேக்கப் பொருட்களுக்கான போட்டி நடந்தது. மேக்கப் சாமான்கள் என்றால் பெண்கள் பாய்ந்து எடுப்பார்கள் என்பதில் ஆச்சரியமில்லை. அபினய்யை முண்டியடித்து பாய்ந்து எடுத்து ஒப்பனைப் பொருட்களை கைப்பற்றினார் ஐக்கி. தாமரையும் ஓடி சம்பாதித்தார். இதைப் போலவே பாவனியும் ஒன்று எடுத்தார். ‘குரல் கேட்டவுடன் வந்து அமரும் இடம்’ என்று லிவ்விங் ரூமை சூசகமாக சொன்னார் பிக்பாஸ். ‘குறளுக்கும் அக்ஷராவிற்கும்தான் எப்போதும் ஆகாதே?!' எனவே அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதில் அணி B வெற்றி பெற்றது.

ரம்யா என்ட்ரி 'அகம் டிவி வழியே...' என்று ஆரம்பித்து “இதை அவர் சொன்னாதான் நல்லாயிருக்கும்” என்று நிறுத்தி “வீட்டுக்குள்ள போகலாமா?” என்று ரம்யா இயல்பாக கேட்டது சிறப்பு. இன்னொருவரின் பாணியை காப்பியடித்தால் நீண்ட நாள் நிலைக்க முடியாது. “மேடம் நீங்க அளகா இருக்கீங்க” என்று வந்தவுடனேயே ஐஸ் வைத்தார் பிரியங்கா. “அமீர். சஞ்சீவ். நீங்களும் புதுசு... நானும் இங்க புதுசு. சேர்ந்து ஜமாய்க்கலாம்” என்று தன் வருகையை இயல்பாக ரம்யா பதிவு செய்தது நன்று. “தாமரை.. நான் உங்க பெரிய ஃபேன்” என்று வாய் கொள்ளாத சிரிப்புடன் ஆரம்பித்தார் ரம்யா. ஒரு சராசரி பார்வையாளரைப் போல ஒரு தொகுப்பாளர் இப்படி பேசக்கூடாது என்பது பாலபாடம்.

பிக் பாஸ் 5 | Bigg Boss

“ஒவ்வொருத்தரைப் பத்தியும் சொல்லட்டுமா.. கோச்சுக்க மாட்டீங்கள்லே?” என்று ரம்யா ஆரம்பிக்க “நீங்க என்ன வேணா சொல்லுங்க மேடம். நிச்சயம் அது கவிதையாகத்தான் இருக்கும்” என்பது போல் அசடு வழிந்தார் அமீர். (அபினய்க்கு நல்ல போட்டியா வருவார் போலயே!). “மெழுகு பொம்மை மாதிரி அத்தனை அழகா இருக்கீங்க” என்று ரம்யா பாராட்டியவுடன் சைனா பொம்மை மாதிரி மலர்ச்சியாகச் சிரித்தார் அக்ஷரா. பிறகு ஒவ்வொருவரின் நிறைகுறைகளைப் பட்டியலிடத் துவங்கினார் ரம்யா.

‘அழுமுஞ்சி’ அக்ஷரா, ‘புயல்’ வருண், என்று அடுக்கிய ரம்யாவிடம் “கமல் சார் வர்ற அன்னிக்கு பதற்றமாயிடும்” என்று தாமரை சொன்ன போது “என் கிட்ட அந்தப் பதற்றம் வேணாம். நல்லாப் பேசுங்க” என்று ரம்யா சொன்னதும் சற்று நெருடல்தான். நிகழ்ச்சி தொகுப்பாளர் கனிவோடு சற்று கண்டிப்பும் காட்ட வேண்டும்.

“நான் வெளியில் இருந்து இவர்களைக் கவனிப்பதற்கும் உள்ளே வந்து கவனிப்பதற்கும் நிச்சயம் நிறைய வித்தியாசம் இருக்கு. எனவே நான் தாமதமாக வந்தது disadvantageதான். ஆனா இவங்க என்னை சந்தோஷமா வெச்சுக்கிட்டாங்க” என்று சஞ்சீவ் சொன்ன போது அவரை இடைமறித்து “அது கொஞ்ச நாள்தான் இருக்கும்” என்று முதல் பவுன்சரை ரம்யா வீசியது சிறப்பு. “வெளில இருந்து பார்க்கும் போது தாமரை சண்டைக்காரியா தெரிஞ்சாங்க. உள்ளே வந்து பார்த்தாதான் தெரியுது. அவங்க ஒரு குழந்தை” என்று சஞ்சீவ் சொன்னதைக் கேட்டு தாமரையாக மலர்ந்தார் தாமரை.

பிக் பாஸ் 5 | Bigg Boss
‘மீட்டர் ராஜூ’ என்று குறிப்பிட்ட ரம்யா. ‘நகைச்சுவையைத் தாண்டி பல சுவைகளும் வெளியே வரணும்” என்று ராஜூவிடம் சொன்னது நல்ல கமெண்ட். “ஏன் அஞ்சு குறள்?” என்று ரம்யா கேட்ட போது ‘இது அஞ்சாவது சீசன். அதான்” என்று டைமிங்கில் பின்னினார் ராஜூ. “ஸ்கூல் யூனிபார்ம்ல நீங்க க்யூட்டா இருந்தீங்க” என்று அண்ணாச்சியை ரம்யா புகழ்ந்தது நிச்சயம் சர்காஸ்டிக்காகத்தான் இருக்க வேண்டும். “கொஞ்சம் சிரிங்க சிபி. அப்ப இன்னமும் அழகா இருப்பீங்க”: என்று ரம்யா சொன்னவுடன் சிரிப்பு போன்றதொரு விபரீதமான முயற்சியை செய்து காட்டினார் சிபி.

“பிக்பாஸ் வீட்டுக்குள்ள வந்தா ஒருத்தரோட ஒரிஜினல் நிறம் வந்துடும்”ன்னு சொல்லுவாங்க என்று ஐக்கியை முன்னிட்டு ரம்யா சொன்ன வசனம் இரண்டாவது பவுன்சர். “இந்தியர்களின் சிகை நிறம் கறுப்பு. உங்களுக்கு இது அழகா இருக்கு” என்று ரம்யா சொன்னதைத்தான் பெரும்பாலான பார்வையாளர்களும் நினைத்திருப்பார்கள். ஆனால் ஐக்கியின் தனிப்பட்ட தேர்வில் நாம் தலையிட முடியாது. நாமொன்றும் பிக்பாஸ் போல் கொடுமைக்காரர்கள் அல்ல.

“அமீர்.. வேக்அப் பாட்டுக்கு மட்டும் வர்றீங்க. அப்புறம் உங்களைத் தட்டி எழுப்ப வேண்டியதா இருக்கே?” என்று அமீரை சரியாகத் தட்டி எழுப்பினார் ரம்யா. “உங்க சிரிப்பிற்கு நான் பெரிய ரசிகை” என்று அடுத்தபடியாக பிரியங்காவிடம் சென்றார் ரம்யா. அண்ணாச்சியின் யூனிபார்ம் போல இதுவும் சர்காஸ்டிக்கான கமெண்ட் ஆகத்தான் இருக்க வேண்டும்.

பிக் பாஸ் 5 | Bigg Boss 5
“அபிஷேக். எல்லாத்துக்கும் உவமை தந்து பேசி உவமைக்கவிஞரா இருக்கீங்களே. என்னைப் பத்தி ஏதாவது சொல்லுங்க” என்று ரம்யா கேட்டவுடன் “ஊர்ல ஆயிரம் ராஜா இருந்தாலும் ஒரு ராணிக்கு முன்னால அவங்கள்லாம் தேவையில்லாத ஆணி. அந்த மகாராணி நீங்கதான்” என்று அபிஷேக் ஒரு ஐஸ் கிடங்கையே தூக்கி தலை மேல் வைக்க ‘மயங்கிட்டேன்’ என்று ஸ்தம்பித்து நின்றார் ரம்யா. (அபிஷேக் பாகுபலி படத்தை பத்து முறை பார்த்திருப்பார் போலிருக்கிறது).

‘விளிம்பு வரைக்கும் வந்து தப்பிடச்சிடறீங்க. இன்னமும் மேல வாங்க” என்று அபினய்யை உற்சாகப்படுத்தினார் ரம்யா. (பாவனி கிட்ட இருந்து தள்ளி வந்துட்டாருல்லயா. இனிமே உருப்பட்டுடுவாரு!). “பாவனி. உங்க கொஞ்சு தமிழ் இம்ப்ரூவ் ஆயிட்டே வருது” என்று பாவனியின் தமிழ் உச்சரிப்பு மேம்படுதலை ரம்யா பாராட்டிய போது “வெளில வந்து கிளாஸ் எடுக்கலாம்னு இருக்கேன்” என்று அறிவித்து தமிழ் சமூகத்திற்கு அதிர்ச்சி தந்தார் பாவனி. (ஆனால் வகுப்பில் கூட்டம் அம்மும் என்பது வேறு விஷயம்).

பிக் பாஸ் 5 | Bigg Boss

“ஓகே.. ஸ்கூல் டாஸ்க் பத்தி பேசலாமா?” என்று அடுத்த சப்ஜெக்ட்டிற்கு நகர்ந்த ரம்யா டீச்சர் “டாஸ்க் விதிகளை சரியா புரிஞ்சுக்கிட்டீங்களா?” என்று ஆரம்பித்தார். “சேட்டை மாணவர்கள்னு போட்டிருந்தது” என்று அபினய் ஆரம்பிக்க “அதை முதன்முதல்ல நான்தான் புரிஞ்சுக்கிட்டு நல்லா சேட்டை பண்ணேன்” என்று பிரியங்கா சொல்லவும் “நான்தான். நான்தான்” என்று போட்டிக்கு வந்தார் இமான். “அதிகமா தண்டனை வாங்கினது நான்தான்” என்று பெருமிதம் குறையாமல் சொன்னார் பிரியங்கா. (‘நான்தான் முடிச்சவிக்கி. நான்தான் மொள்ளமாறி” என்கிற கவுண்டமணி – செந்தில் காமெடிதான் நினைவிற்கு வந்தது).

பிக் பாஸ் 5 | Bigg Boss 5

“மெடிடேஷனை ஒரு தண்டனையா கொடுத்து நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை” என்று முதல் அம்பை சிபியை நோக்கி வீசிய ரம்யா, அடுத்து அக்ஷரா பேச அனுமதி தந்தார். “எங்களுக்கு ஸ்பேஸே தரலை மேடம். அதிக வேலையைக் கொடுத்தாங்க” என்று அக்ஷரா புகார் சொல்ல “அந்த ஸ்பேஸை நீங்கதான் உருவாக்கணும்” என்று ரம்யா சொன்ன கவுன்ட்டர் சரியானது.

“சிபி .. நீங்க சொல்லுங்க. ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா போயிட்டீங்களோ?” என்று ரம்யா கேள்வி எழுப்ப “மாணவர்களிடம் கடமை, கண்ணியம், ஒழுக்கத்தை நிலைநாட்டுவது எனக்கு தரப்பட்ட பணி. ‘மன்னிப்பு’ன்றது எனக்குப் பிடிக்காத வார்த்தை’ன்னு சொல்லியிருந்தாங்க.” என்று விளக்கம் அளித்த சிபி “மாணவர்கள் எதையும் பண்ண விடாம பார்த்துக்கணும்” என்று வார்த்தையை விட்டு விட அதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் ரம்யா. “அப்ப நீங்க யாரையும் எதையும் செய்ய விடலையா?” என்று கேள்வி எழுப்ப, “ஆமாம் மேடம், வார்டன் எங்க கிட்ட ஓவரா பண்ணார்” என்று மக்கள் கூட்டாக புகார் சொன்னார்கள். (அப்ப best performer ஏன் தரணும்?!) அக்ஷராவிடம் மட்டுமல்லாமல் அனைவரிடமும் சிபி கண்டிப்பாக நடந்து கொண்டார் என்பதற்கு இந்தக் கூட்டு புகாரே சாட்சி.

பிக் பாஸ் 5 | Bigg Boss 5

பிக்பாஸ் தன்னை அழைத்து சொன்ன விஷயத்தையும் சொன்ன சிபி “அதுக்குப் பிறகு தண்டனை தர ஆரம்பித்தேன்” என்று விளக்கம் அளிக்க “தப்பு பண்ணவங்களுக்குத்தானே தண்டனை தரணும்?” என்று சூசகமாக ஆரம்பித்த ரம்யா, “நீங்க சொல்லுங்க அக்ஷரா” என்று எடுத்துக் கொடுத்தார். “தண்ணி கூட குடிக்க விடலை யுவர் ஆனர்” என்று அனுதாப அலையை உருவாக்க அக்ஷரா முயல “நானா.. அப்படி செஞ்சேன்?” என்று திகைப்பானார் சிபி.

“வேணுமின்னே பண்ண மாதிரி தோணுச்சா.. நீங்க டார்கெட் செய்யப்பட்டதா உணர்ந்தீங்களா?” என்று அக்ஷராவிற்கு மேலும் எடுத்துக் கொடுத்தார் ரம்யா. அக்ஷரா இதை ஒரு மாதிரியாக ஆமோதிக்க, சாட்சிக்கு இமானை அழைத்தார் ரம்யா. “அஞ்சு குறளை சொல்றது கஷ்டம்தான் மேடம்” என்று அவரும் ராஜூவை முறைத்தபடி சாட்சி சொன்னார்.
பிக் பாஸ் 5 | Bigg Boss

“சிபி... நீங்க வார்டனா இருக்கிற ஸ்கூல்ல நிச்சயம் நான் சேர மாட்டேன்” என்றெல்லாம் ஒரு பார்வையாளரைப் போல் ரம்யா பேசியது அபத்தமானது. எனில் இந்தக் கண்டிப்பை காட்டச் சொன்ன பிக்பாஸைத்தான் அவர் முதலில் கேள்வி கேட்க வேண்டும். செய்வாரா? அடுத்ததாக ரம்யா போட்ட ‘குறும்படம்’ எதற்கு என்பதே புரியவில்லை. தான் அறிமுகமாகும் வாரத்தில் ஏதாவது பரபரப்பாக செய்ய வேண்டும் என்கிற ஆசையைத்தான் அது காட்டியது. மற்றபடி அந்தக் குறும்படத்தால் ஒரு உபயோகமும் இல்லை. “குறும்படம் போடுங்க மேடம்” என்று சிபி சொன்ன போது “நான் உங்க பர்மிஷன் கேட்கலை” என்று முகத்தில் அடித்தது போல் ரம்யா சொன்ன போது அவர் சில முன்தீர்மானங்களுடன் வந்திருக்கிறார் என்பதை அம்பலப்படுத்தியது.

“அக்ஷராவை டார்கெட் செய்ய வேண்டும் என்று நான் சத்தியமாக நினைக்கவில்லை. என் கேரெக்டரைத்தான் செய்தேன்” என்று அழாதகுறையாக சொன்ன சிபி, மன்னிப்பு கேட்கவும் தயாரானார். “அதிகாரம் என்பது கடுமையாக பயன்படுத்தப்படுவதற்காக மட்டும் அல்ல. கனிவாகவும் பயன்படுத்தி தவறு செய்பவர்களைத் திருத்துவது” என்று ரம்யா அளித்த விளக்கம் சிறப்பு.

சிபியை தேவையான அளவிற்கு வறுத்த பின்னர் அக்ஷரா பக்கம் வந்த ரம்யா “நீங்களும் ரொம்ப சென்சிட்டிவ்வா இருக்கீங்க. பொருட்களைத் தூக்கி எறிவதை விடவும் உங்களின் கோபத்தை தூக்கி எறிவது சிறந்தது” என்று ரைமிங்காக சொன்ன அட்வைஸ் திருவாசகம்.

பிக் பாஸ் 5 | Bigg Boss

“என்னங்கடா நாம இப்படி கொடூரமா தெரியறோம். தரைல பண்ணதெல்லாம் திரையில வருது. கொடுத்த வேலையைத்தானே செஞ்சோம்” என்று விசாரணை இடைவேளையில் சிபியும் ராஜூவும் திகைத்தார்கள். இவர்களை கண்டிப்பாக நடக்கச் சொன்ன பிக்பாஸ், கள்ளமெளனத்தில் இருந்தார். பாவம் ஒருபக்கம், பழி ஒருபக்கம். எந்தவொரு நிறுவனத்திலும் இப்படி பலியாடுகளை தியாகம் செய்து விட்டு தலைமை மட்டும் பாதுகாப்பாக தப்பித்துக் கொள்வது வழக்கமான வரலாறுதான்.

ஓர் இடைவேளைக்குப் பின்பு திரும்பி வந்த ரம்யா “ஏன் இப்படி ஸ்கூல் பசங்க மாதிரி பொசுக்கு பொசுக்குன்னு எழுந்துக்கறீங்க.. உட்காருங்க” என்று சொன்னது சிறப்பு. பகுத்தறிவை வலியுறுத்தும் கமலும் இதை கறாராக பின்பற்றலாம். “நாமினேஷன் ஆனவங்க நடுவுல வந்து உக்காருங்க” என்றார் ரம்யா.
பிக் பாஸ் 5 | Bigg Boss

“இதுல இருந்து ஒருத்தரை காப்பாத்தணும்னா யாரு.. வரிசையா சொல்லுங்க” என்ற ரம்யா “இப்பவும் அக்ஷரா பக்கத்துல சீட் பிடிச்சிருக்காங்களா? என்று வருணைக் கலாய்த்தது சுவாரஸ்யமான தருணம். அக்ஷரா ஐக்கியையும், அமீர் மற்றும் சிபி இமானையும், வருண் மற்றும் அபிஷேக் தாமரையையும் ராஜூ மற்றும் அபினய் பிரியங்காவையும் காப்பாற்ற விரும்புவர்களாகத் தெரிவித்தனர்.

பிக் பாஸ் 5 | Bigg Boss

இறுதியில் ‘பிரியங்கா’ காப்பாற்றப்பட்டதை அறிவித்த ரம்யா, மற்றவர்களின் நிலைமையை நாளை தெரிவிப்பதாக விடைபெற்றார். இந்த வாரத்தில் ஐக்கி எலிமினேட் ஆகியிருக்கிறார் என்கிற தகவல் கசிந்திருக்கிறது. அங்கு இருப்பதிலேயே நல்ல உள்ளம் ஐக்கிதான். இவர்களைப் போன்றவர்கள் பிக்பாஸ் வீட்டில் நீடிப்பது சிரமம்தான்.

ரம்யா கிருஷ்ணனின் நிகழ்ச்சித் தொகுப்பு உங்களுக்குப் பிடித்திருந்ததா? கமெண்ட் பாக்ஸில் வந்து உங்களின் கருத்துகளைச் சொல்லுங்களேன்.


source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/bigg-boss-season-5-abishek-makes-ramya-krishnan-blush-priyanka-saved

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக