ராஜஸ்தானில் சமீபத்தில் அதிருப்தியாளர்களைச் சரிக்கட்ட அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. புதிய அரசில் அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் ராஜேந்திர சிங் குதா தன் தொகுதி மக்களின் குறைகளைக் கேட்டுக்கொண்டிருந்தார். அவரிடம் மக்கள் தங்களது பகுதியில் சாலைகள் சரியில்லை என்று குறை கூறினர். அப்போது, ராஜேந்திர சிங் குதா தன் அருகில் நின்ற பொதுப்பணித்துறை தலைமை பொறியாளரிடம், ``என் தொகுதியில் சாலைகள் ஹேமா மாலினியின் கன்னம் போன்று இருக்கவேண்டும். ஆனால் அவருக்கு வயதாகிவிட்டதால் சாலைகள் நடிகை கத்ரீனா கைஃப் கன்னங்கள் போன்றாவது இருக்கவேண்டும்!" என்று கூறினார். அமைச்சரின் கருத்து அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அமைச்சரின் இந்த கருத்துக்கு பா.ஜ.க இதற்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
இது தொடர்பாக பா.ஜ.க செய்தி தொடர்பாளர் ராம்லால் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போது, ``பெண்கள் குறித்து அநாகரீகமாகப் பேசிய அமைச்சர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று கூறினார். அமைச்சரின் இந்த சர்ச்சை கருத்துக்கு முதல்வர் அசோக் கெலாட் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். குஜராத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்த அசோக் கெலாட், ``அமைச்சர் என்ன சொன்னார் என்று எனக்குத் தெரியாது. என்ன பேசினார் என்று கண்டுபிடிப்போம். ஆனால் ஒவ்வொருவரும் கண்ணியத்துடன் நடந்து கொள்ளவேண்டும். மாநில அமைச்சர்களின் ஒழுக்கம் மற்றும் கண்ணியம் எல்லைக்குள் இருக்கவேண்டும். அளவுக்கு மீறி அரசியல் செய்தால் யாருக்கும் பிடிக்காது" என்று எச்சரித்தார்.
இதற்கு முன்பு சாலைகளை நடிகைகளின் கன்னத்தோடு வேறு அரசியல்வாதிகளும் ஒப்பிட்டிருக்கின்றனர். ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் 2005-ம் ஆண்டு பீகார் சாலைகள் விரைவில் நடிகை ஹேமா மாலினியின் கன்னம் போல் மாறும் என்று கூறியிருந்தார். அதேபோல, 2013-ம் உத்தரப்பிரதேச அமைச்சர் ராஜாராம் பாண்டே அளித்த பேட்டியில், தன் தொகுதியில் சாலைகள் ஹேமா மாலினி, மாதுரி தீட்ஷித் ஆகியோரின் கன்னங்கள் போன்று மாற்றுவேன் என்று தெரிவித்திருந்தார்.
Also Read: முன்னாள் பிரதமர் நேரு குறித்து ராஜஸ்தான் பா.ஜ.க எம்.எல்.ஏ-வின் சர்ச்சை பேச்சு!
source https://www.vikatan.com/government-and-politics/politics/controversy-over-rajasthan-ministers-controversial-speech
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக