நெல்லை மாநகர காவல்துறை ஆணையாளர் செந்தாமரை கண்ணனிடம் சில தினங்களுக்கு முன்பு ஜோசப் ராஜ் என்பவர் புகார் அளித்தார். அதில், தன் மகள் விஜிலாராணியை திருமணம் செய்த திசையன்விளை சுவிஷேசபுரத்தை சேர்ந்த வின்சென்ட் பாஸ்கர் என்பவர் பணம் நகையை எடுத்துக் கொண்டு தலைமறைவாகி ஏமாற்றி விட்டதாகத் தெரிவித்திருந்தார்.
நெல்லை மாநகர மகளிர் காவல்நிலையத்தில் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்தது. வின்சென்ட் பாஸ்கரின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால் அவர் இருக்குமிடம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினார்கள். திருமணத்தின்போது, வின்சென்ட் பாஸ்கரின் தாய் எனத் தெரிவித்த பிளாரன்ஸ் சித்தியான தாமரைச்செல்வி ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
போலீஸ் விசாரணையில், தாய், சித்தியாக இருவரும் போலியாக நடித்தது தெரியவந்தது. இந்த திருமணத்தின் புரோக்கராக செயல்பட்ட இன்பராஜ் என்பவர் தலைமறைவானார். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியில் தலைமறைவாக இருந்த வின்சென்ட் பாஸ்கர் அப்பகுதியில் பெண் பார்க்கும் படலத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது சந்தேகம் அடைந்த சிலர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து போலீஸ் பிடியில் வின்சென்ட் பாஸ்கர் சிக்கினார்.
அவரிடம் விசாரித்தபோது கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு பணகுடி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்ததாகவும் பின்னர் அடுத்தடுத்து ஆறு பெண்களை திருமணம் செய்ததாகவும் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். ஒவ்வொரு பெண்ணிடமும் இருந்து வரதட்சணையாக பணம், நகைகளை மூன்று மாதங்களில் வாங்கிக் கொண்டு தலைமறைவாகி விடுவதை வழக்கமாக வைத்திருந்து போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
ஆறாவதாக திருமணம் செய்த விஜிலாராணியிடம் 40 சவரன் நகை, மூன்று லட்சம் ரொக்கப் பணத்தை வரதட்சணையாகப் பெற்ற அவர், மூன்று மாதங்களுக்குப் பின்னர் வியாபாரத்துக்குத் தேவை என அவற்றை வாங்கியுள்ளார். அதைத் தொடர்ந்து தலைமறைவான நிலையில், ஏழாவது திருமணம் செய்வதற்கு கயத்தாறு பகுதியில் பெண் தேடிக்கொண்டிருந்தபோது போலீஸ் பிடியில் சிக்கியிருக்கிறார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் சிறையில் அடைத்தனர்.
source https://www.vikatan.com/news/crime/man-who-married-six-ladies-and-try-to-marry-seventh-time-got-arrested
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக