Ad

ஞாயிறு, 28 நவம்பர், 2021

சர்வைவர் 77: பாட்டு பஞ்சாயத்தால் கண்கலங்கிய ஐஸ்வர்யா; சமாதானப்படுத்திய அர்ஜுன்!

‘இம்யூனிட்டி சவாலில்’ விஜி சிறப்பாக செயல்பட்டு வென்றதுதான் நேற்றைய எபிசோடின் ஹைலைட். வேடர்களின் கை இப்போது ஓங்கியிருக்கும் நிலையில் விஜிக்கும் இனிகோவிற்கும் இது குறித்த நெருக்கடி நிச்சயம் இருந்திருக்கும். எனவே அவர்கள்தான் முதல் மற்றும் இரண்டாம் இடத்தைப் பெற்றார்கள். இனிகோ டிரைபல் பஞ்சாயத்தில் குறிப்பிட்ட 'கேரக்டர்’ என்ற வார்த்தையை ஐஸ்வர்யா தவறாகப் புரிந்து கொண்டார் என்பது வெளிப்படை. ‘ஒழுக்கம்’ என்கிற பொருளில் இனிகோ சொன்னதாக எடுத்துக் கொண்டார் போலிருக்கிறது. 'ஆட்டத்தின் போது கத்துவது, சரணையும் தன்னையும் ஒப்பிட்டது’ போன்ற காரணங்களால் ஐஸ்வர்யாவை பிடிக்கவில்லை என்கிற பொருளில்தான் இனிகோ சொல்லியிருக்கிறார்.

‘கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்’ என்கிற பாடலை பாடுவதற்கு ஐஸ்வர்யா மிகவும் தயங்கினார். அர்ஜூன் வற்புறுத்திய பிறகுதான் பாடினார். எனில் இதை இனிகோ புகாராக சொல்கிறார் எனில் அவர் புகார் சொல்வதற்கு காரணம் தேடுகிறார் என்றுதான் பொருள். அவரும்தான் முன்னர் ஒரு சவால் பாடலைப் பாடினார். அதன் பொருள் என்ன?

சர்வைவர் 77

ஓலை வந்தது. குடும்ப வீடியோ செய்தி இனிகோ மற்றும் நாராயணன் ஆகியோருக்கு மட்டும் இன்னமும் கிடைக்கவில்லை. ஒரு சவாலில் ஜெயித்தால் அவர்களால் இந்த ரிவார்டை பெற முடியும் என்று ஓலை சொல்லியது. அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு வேளை சமைக்க வேண்டும். அவ்வளவுதான். வீடியோ செய்தியை அவர்களுக்கு தர இதுவொரு சாக்கு. அவ்வளவே. இது மட்டுமல்லாமல், இவர்கள் இருவரும் இதுவரை சமையல் பணியின் பக்கமே வரவில்லையாம். ஒருவர் வீட்டில் இப்படி இருப்பதே தவறு. சர்வைவர் போன்ற கடினமான சூழலில் கூட ஒருவர் சமையல் பணியின் பக்கம் வராமலிருப்பது மிகவும் தவறு. இதை சர்வைவர் டீம் குறித்து வைத்திருக்கலாம். எனவே இந்த டாஸ்க்கை தந்திருக்கிறார்கள் போல.

இதில் ஒரு முக்கியமான கட்டளை இருந்தது. இந்த இருவருக்கும் சமையலில் எவரும் எந்தவகையிலும் உதவவே கூடாது. "அவங்க சொன்னா கூட நான் வர மாட்டேன். சமைக்கட்டும். அப்பதான் தெரியும்” என்று ஜாலியாக ஒதுங்கிக் கொண்டார் விஜி.

சர்வைவர் நிகழ்ச்சியில் சமையல் பொருட்கள் கூட எளிதில் கிடைக்காது. தரப்பட்டிருக்கும் க்ளுவை வைத்துக் கொண்டு இருவரும் தேடிச் செல்ல வேண்டும். அவை இருக்கும் இடத்தை க்ளூ காண்பித்தது. அலையாத்தி காடுகள் என்பது அரிய வகை மரங்களின் தொகுப்பு. சுனாமியைக் கூட இவை தடுத்து நிறுத்தும் ஆற்றல் பெற்றதாம். தமிழகத்தில் ‘பிச்சாவரம்’ பகுதியில் இருப்பதைப் போன்று அந்தத் தீவிலும் இப்படியொரு பகுதி இருக்கிறதாம். அந்தக் காட்டின் அருகில் ஒரு பெரிய மரத்தின் கீழே சமையல் பொருட்கள் கிடைக்குமாம். “நான்-வெஜ்ஜா இருந்தா நான் சமைக்கறேன். வெஜ்ஜா இருந்தா நீ பண்ணு” என்று இனிகோ சொல்ல, தலையாட்டிக் கொண்டார் நாராயணன்.

இருவரும் சென்று பொருட்களை எப்படியோ தேடிக் கண்டுபிடித்தார்கள். சிக்கன், தக்காளி என்று ஐந்து பேர் சற்று சாப்பிடும் அளவிற்கு பொருட்கள் இருந்தன. எந்தச் சவாலையும் மேற்கொள்ளாமல் இவர்களுக்கு கிடைத்த லாட்டரி பரிசுதான் இது. “நான் பெப்பர் சிக்கன் செய்யறேன்” என்று இனிகோ சொல்ல, “ஓகே, நான் பிரெட். தக்காளி தொக்கு செய்யறேன்” என்றார் நாராயணன்.
நாராயணன்

இருவரும் தத்தக்கா பித்தக்கா என்று சமையலை ஆரம்பித்தார்கள். இவர்கள் செய்யும் கூத்தை எட்டிப் பார்த்த அம்ஜத் உதவி செய்ய முன்வந்தார். பூண்டை வெட்டுவதற்காக அரிவாளை ஓங்கிய நாராயணனை தடுத்து நிறுத்திய அம்ஜத் “ஏன் இந்தக் கொலைவெறி? கையால நசுக்கினாலே வந்துடும்” என்று செய்து காட்டிய பிறகு “ஓகே... நான் போய் விறகு எடுத்துட்டு வரேன்” என்று கிளம்பினார். “அவங்களைப் பார்க்க கஷ்டமா இருந்துச்சு. அதான் ஹெல்ப் பண்ண போனேன்” என்று விளக்கம் தந்தார் அம்ஜத். இன்னொரு காரணமும் இருக்கலாம். “அபூர்வமா சிக்கன் கிடைச்சிருக்கு. இவங்க ஏதாவது தப்பா செஞ்சு அதை சொதப்பிடப் போறாங்க” என்று கூட அவர் நினைத்திருக்கலாம்.

“பூண்டை வெட்ட அரிவாளை தூக்கறாரு நாராயணன். இனிகோ இப்பதான் ஃபிளிண்டையே (நெருப்புக்கருவி) பார்க்கறாரு” என்று விஜியிடம் சொல்லி சிரித்தார் அம்ஜத். ‘பெப்பர் சிக்கன்’ அடிக்கடி சாப்பிட்டிருப்பதால் அந்தப் பழக்கத்தில் தனது சமையலை எப்படியோ முடித்தார் இனிகோ. நாராயணனும் தன் சமையலை முடித்து விட்டார். மற்ற போட்டியாளர்கள் வந்து சாப்பிட்டுப் பார்த்து “வாவ். செமயா இருக்கு” என்று இருவரையும் பாராட்டினார்கள். சைவப்பழக்கம் உள்ள ஐஸ்வர்யா கூட சிக்கன் தொக்கை எடுத்து சுவைத்து ‘நைஸ்’ என்றார்.

‘அப்புறம். என்ன… இவர்களுக்கு ரிவார்ட் தரவேண்டியதுதானே? ஆனால் சர்வைவர் டீம் காட்டமாக மறுப்பு ஓலை அனுப்பியிருந்தது. “நாங்க படிச்சு படிச்சு சொன்னோம். யாரும் உதவிக்கு வரக்கூடாதுன்னு. எங்க விதியை மதிக்கலைன்னா என்ன அர்த்தம்? ரிவார்டு கிடையாது” என்றிருந்த ஓலையைப் பார்த்து இனிகோ மிகவும் நொந்து விட்டார். அப்பட்டமான ஏமாற்றம் அவருடைய முகத்தில் தெரிந்தது. ‘இதுக்கா இத்தனை கஷ்டப்பட்டோம்” என்று வேதனையுடன் சொன்னார் நாராயணன். எனில் இவர்கள் அம்ஜத்தின் உதவியை அப்போதே கறாராக மறுத்திருக்க வேண்டும். இருவரும் ஏமாற்றத்துடன் அமர்ந்த காட்சி பரிதாபத்தை ஏற்படுத்தியது.

“நான் செஞ்சது மிக சாதாரண உதவி. இதுக்குப் போயா இப்படிப் பண்ணுவாங்க. கோபமா வருது” என்ற அம்ஜத், இருவரிடமும் மன்னிப்பு கேட்டார்.
அர்ஜுன்

"களத்துக்கு வாங்க” என்ற வரவேற்ற அர்ஜூன், கூலிங்கிளாஸ் அணிந்து பந்தாவாக நின்றிருந்தார். அவர் மட்டுமல்ல, இம்யூனிட்டி சவால் நடக்கும் இடத்தின் பின்னணி கூட பார்ப்பதற்கே அத்தனை அருமையாக இருந்தது. “கடைசியா வனேசா இம்யூனிட்டி ஜெயிச்சாங்க. இன்னிக்கு யாருன்னு பார்க்கலாம்” என்ற அர்ஜூன் குடும்ப வீடியோ வந்த விஷயத்தை விசாரித்தார். ‘இனிகோ மற்றும் நாராயணனுக்கு நடந்த அநீதி பற்றி அம்ஜத் புகார் செய்ய “ஓகே. நீங்க மூணு பேரும் சொன்னா அவங்களுக்கும் கொடுத்துடலாம்” என்று அர்ஜூன் சொல்ல, மூவரும் சந்தோஷமாக சம்மதித்தார்கள். நாராயணன் இந்த வெகுமதியை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டார். ஆனால் இனிகோ ஏற்க மறுத்து விட்டார். “குடும்பத்தைப் பார்த்தா போகணும்னு தோணிடும்” என்பது அவர் சொன்ன காரணம். எனில் முன்னர் காட்டிய ஆவல், ஏமாற்றம் போன்வற்றின் பொருள் என்ன? எதற்கு இந்த வீராப்பு?

இனிகோ

“தம்பிக்காக ஏதோ பாட்டு வெச்சிருக்கீங்களாமே?” என்று இனிகோவின் வாயைக் கிளறினார் அர்ஜூன். ‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே. இருட்டினில் நீதி மறையட்டுமே’ என்கிற பாடலைப் பாடிய இனிகோ, “தம்பிங்க.. திரும்பி வருவாங்கன்றதுக்காக பாடினது” என்றார். இதிலிருந்த உள்குத்து வேடர்களுக்குப் புரியாமலா இருக்கும்? நீதி மறைந்த விஷயம் எப்போது நடந்தது? என்றாலும் அவர்கள் இதை ஸ்போர்டிவ்வாக எடுத்துக் கொண்டார்கள்.

“ஐஸ்வர்யா. நீங்க அந்த எதிர்பாட்டைப் பாடுங்க. மூன்றாம் உலகத்தில் இருந்து அவங்க ஜெயிச்சு வர்றப்போ இந்தப் பாட்டைப் பாடினாங்க” என்று சிரித்துக் கொண்டே சொன்னார் அர்ஜூன். ஐஸ்வர்யா இதைப் பாடுவதற்கு மிகவும் தயங்கினார். இது சரியான சூழல் அல்ல என்பது அவருக்கு தெரியும். அதனால் வந்த தயக்கம் இது. ஆனால் அவரைப் போன்றே செய்து காட்டிய அர்ஜூன், “பாடு.. ஐஸ்வர்யா..” என்று கிண்டலடித்து விட்டு “நீங்க மாத்திப் போட்ட வரிகள் நிச்சயம் வரணும்” என்று வலியுறுத்தவே “அந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்” என்கிற வரிகளை சேர்த்து பாடினார் ஐஸ்வர்யா. விஜி மற்றும் இனிகோவின் முகங்கள் மாறின. “இதோட உள்அர்த்தம் புரிஞ்சது” என்றார் விஜி. “இதுக்கு அர்த்தம் ஏதும் எடுத்துக்காதீங்க” என்று அர்ஜூன் சொன்னது அங்கு எடுபடவில்லை.

நாராயணன்

“ஓகே. இம்யூனிட்டி சவால் பத்தி பார்ப்போம். உங்களுக்கு தரப்பட்டிருக்கும் சின்னத்தின் பலகையில் இரண்டு பக்கமும் கயிறுகள் கட்ட வேண்டும். அந்த இரண்டு கயிறுகளும் சந்திக்கும் புள்ளியில், மணலின் அடியில் புதிர்ப்பலகையின் துண்டுகள் அடங்கிய பை இருக்கும். அதை எடுத்துக் கொண்டு போய் புதிரை அவிழ்த்தால் இரண்டாவது புதிருக்கான க்ளூ கிடைக்கும். அதையும் முடித்த பிறகு ‘IMMUNITY’ என்ற ஆங்கில எழுத்துக்களின் துண்டுகள் கிடைக்கும். இந்த கடைசிப் புதிரை யார் முதலில் அமைக்கிறாரோ, அவரே வெற்றியாளர்” என்று இதன் கான்சப்டை விளக்கினார் அர்ஜூன்.

“இதுல நாங்க எப்படியும் ஜெயிச்சாகணும்” என்று மனதில் உறுதியை ஏற்படுத்திக் கொண்டார் விஜி. “எனக்கு puzzle வராது. இருந்தாலும் அந்த நினைப்பை தூக்கியெறிஞ்சுட்டேன்” என்றார் ஐஸ்வர்யா. போட்டி ஆரம்பித்தது. ஐவரும் ஓடிச் சென்று தங்களின் சின்னங்களில் இரண்டு பக்கமும் குறுக்கும் நெடுக்குமாக கயிறு கட்டி, அவை சந்திக்கும் இடத்தில் மணலைத் தோண்டினார்கள். இனிகோவிற்கு முதலில் துண்டுகள் கிடைக்க, அவர் எடுத்துக் கொண்டு ஓடினார். இரண்டாவதாக ஐஸ்வர்யாவும் மூன்றாவதாக நாராயணனும் நான்காவதாக விஜியும் சென்றனர். ஆனால் அம்ஜத்திற்கு பயங்கர சோதனை ஏற்பட்டது. அவர் மண்ணை ஆவேசமாக தோண்டியும் புதிர்க்கட்டைகள் கிடைக்கவில்லை. “அவரு தோண்டினதைப் பார்த்தா அடில இருந்து தண்ணியே வந்திருக்கும் போல” என்றார் இனிகோ. “இங்க இல்ல சார்” என்று அம்ஜத் கத்த “நீங்க கயிறை சரியாப் போட்டிருக்க மாட்டீங்க. நிச்சயம் இருக்கும் பாருங்க” என்று அர்ஜூன் வலியுறுத்தினார்.

ஐஸ்வர்யா

புதிர் கையாள்வதில் விஜி எப்போதும் கில்லி. எனவே முதல் நிலையை முடித்து விட்டு அடுத்த வட்டத்திற்கு ஓடினார். அதிசயமாக நாராயணனும் தன் பங்கை முடித்து இரண்டாவது நிலைக்கு ஓடினார். “ஒரு பீஸ் மிஸ் ஆகுது சார்” என்று ஐஸ்வர்யா கத்த, “பைல இருக்கா. பாருங்க” என்றார் அர்ஜூன். ஐஸ்வர்யா தேடிய போது அது பையிலேயே கிடந்தது. இதை இவரே ஒழுங்காகப் பார்த்திருக்கலாம். இந்த ஒரு துண்டு இல்லாமல் நிறைய நேரத்தை வீணாக்கிக் கொண்டிருந்தார்.

விஜி இரண்டாவது பையையும் கண்டுபிடித்து கொண்டு வந்து அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்தார். ஒருவழியாக அம்ஜத்திற்கு இப்போதுதான் முதல் பை கிடைத்தது. அவர் தேடிய இடம் தவறு. ஐஸ்வர்யாவும் இனிகோவும் முதல் புதிரை தீர்க்க மிகவும் தடுமாறினார்கள். நாராயணன் இரண்டாவது பையை எடுத்து வர ஓடினார். இனிகோவும் ஐஸ்வர்யாவும் முதல் நிலையை ஒருவழியாக முடித்து விட்டு இரண்டாவது பைக்காக ஓடினார்கள். அம்ஜத் மிக தாமதமாக வந்து இணைந்து கொண்டதால் முதல் நிலையிலேயே மிகவும் தடுமாறிக் கொண்டிருந்தார்.

விஜி இரண்டாவது நிலையை முடித்து விட்டு மூன்றாவது பையை எடுத்து வர ஓடினார். நாராயணனும் அதே நிலையில் இருந்ததால் போட்டி என்பது விஜி vs நாராயணன் என்பதாக மாறியது. விஜி மூன்றாவது பையையும் கண்டுபிடித்து இறுதிக் கட்டத்திற்கு நகர்ந்தார். விஜிக்கு நெருக்கடி தர வேண்டிய நாராயணன், தன் மூன்றாவது பையை தோண்டி எடுக்க முடியாமல் நிறைய தடுமாறினார். அவர் கயிற்றை இறுக்கமாக கட்டாமல், தளர்வாக கட்டியிருந்ததால் தோண்டும் இடம் தவறாக காட்டியது.

விஜயலட்சுமி
ஆச்சர்யமாக இனிகோ மூன்றாவது பையை எடுத்து வந்தார். எனக்கு ‘puzzle’ வராது என்று சொல்லிக் கொண்டிருந்த இனிகோவிடம் இப்போது கணிசமான முன்னேற்றம். முதல் நிலையை முடிக்காமலேயே இரண்டாவது பையை எடுக்க ஓடினார் அம்ஜத். சுற்றியிருந்தவர்கள் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் அழுத்தம் அம்ஜத்தின் முகத்தில் தெரிந்தது.

“மொதல்ல பெரிய பீஸை செட் பண்ணிட்டோம்னா, அத வெச்சு பாக்கியிருக்கும் துண்டுகளை வெச்சு அடுக்கிடலாம்’ என்பது விஜியின் திட்டம். இது அவருக்கு கை கொடுத்தது. இறுதிக் கட்டத்தையும் அவர் வெற்றிகரமாக முடித்து விட “விஜி வெற்றியாளர்” என்று அறிவித்தார் அர்ஜூன். ‘ஹப்பாடா’! என்று மற்றவர்கள் ஆட்டத்தை நிறுத்தினார்கள்.

வெற்றியை அறிவிக்கும் இடைவெளியில் விஜியிடம் தனியாக பேசிக் கொண்டிருந்தார் இனிகோ "அவங்க நல்லா இருக்கும் போது இந்தப் பாட்டை பாடியிருந்தா கூட ஓகே. இப்ப அவங்களுக்கு உடம்பு சரியில்ல. இப்பப் போய் பாடலாமா? என்றார். விக்ராந்த், உமாபதி, வனேசா ஆகியோர் மருத்துவ சிகிச்சைக்கு சென்றிருக்கும் விஷயம், மூன்றாம் உலகத்தில் இருந்த ஐஸ்வர்யாவிற்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. அப்போது பாடிய சவால் பாடல் அது. இப்போது அவர் பாடியதும் கூட அர்ஜூன் வலியுறுத்திய பிறகுதான்.

‘இருட்டினில் நீதி மறையட்டுமே’ என்று இனிகோ கூட சர்காஸ்டிக்காக பாடினார். இதை ஒரு பிரச்சினையாக இனிகோவும் விஜியும் எடுப்பது முறையானதல்ல. “அவங்க திரும்பி வர்ற வரைக்கும் நாம எப்படியாவது தாக்குப் பிடிக்கணும்” என்று விஜி சொல்ல “தாக்குப் பிடிக்கணும்ன்றதுக்காக இவங்க செய்யற மாதிரில்லாம் செய்ய முடியாது. யாரையும் கெஞ்ச முடியாது. நம்ம திறமை மூலம்தான் இவ்ள தூரம் வந்திருக்கோம்” என்றெல்லாம் வீர வசனம் பேசிக் கொண்டிருந்தார் இனிகோ. அது மட்டுமல்லாமல் “ஆள் இல்லாத ஊரில் கிழவன் துள்ளிக் குதிச்சானாம்’ என்கிற பழமொழியைச் சொல்லி ஐஸ்வர்யாவின் பாட்டைக் கிண்டலடித்தார். இதெல்லாம் இனிகோவின் அநாகரிகமாக செயல்பாட்டைத்தான் காட்டுகிறது. காடர்களின் கை ஓங்கியிருக்கும் போது, வேடர்களின் கூடாரம் காலியான போது, இவர் கூடத்தான் பயங்கரமாக சிரித்து குதித்துக் கொண்டிருந்தார்.

விஜயலட்சுமி

விஜியின் வெற்றியை அறிவித்த அர்ஜூன் “இனிகோ… நீங்க பாட்டை இன்னமும் முடிக்கலையாமே” என்று வாயைக் கிளற ஆரம்பித்தார். எனில் விஜியும் இனிகோவும் தனியாக பேசிக் கொண்டிருந்த விஷயத்தை சர்வைவர் டீம் கவனித்து அர்ஜூனை விசாரிக்கச் சொல்லியிருக்க வேண்டும். “ஐஸ்வர்யா மூன்றாம் உலகத்தில் இருந்த போது பாடியது ஓகே. இப்ப மத்தவங்களுக்கு உடம்பு சரியில்லாதப்ப பாடியது மனசுக்கு ஒரு மாதிரி இருந்தது” என்றார். “இதுல எனக்கு ஒண்ணும் தப்பா தெரியல” என்று விஜி பிறகு சொன்னது நேர்மையான விஷயம். ஆனால் அந்தச் சமயத்தில் “இனிகோவிற்கு மனசு கஷ்டமாயிடுச்சாம்” என்று எடுத்துக் கொடுத்தார்.

“என்னாச்சு ஐஸ்வர்யா?” என்று அவரின் ஆட்ட பின்னடைவைப் பற்றி அர்ஜூன் விசாரிக்க ஆரம்பித்த போது ஐஸ்வர்யாவால் தன் பேச்சை தொடர முடியவில்லை. அழ ஆரம்பித்து விட்டார். “நான் அந்த அர்த்தத்துல பாடலை சார். பாட வேணாம்னுதான் நெனச்சேன். ஹர்ட் பண்ணியிருந்தா ஸாரி” என்று அழுகையின் இடையில் தெரிவித்தார். “அச்சச்சோ. இதெல்லாம் சாதாரண விஷயம்” என்று அவரைத் தேற்றினார் விஜி.

ஆனால் இனிகோவின் பேச்சிற்கு பதிலடி ஏதாவது தந்தாக வேண்டும் என்று ஐஸ்வர்யாவிற்குள் தோன்றியிருக்கலாம். "முன்னாடி கூட ஐஸ்வர்யாவோட கரெக்டர் பிடிக்கலைன்னு காரணம் சொல்லி எனக்கு எதிரா ஓட்டு போட்டதா இனிகோ சொன்னார்" என்று நேரடியாக குற்றம் சாட்டினார். இதற்கு ஏதோ விளக்கம் அளிக்க ஆரம்பித்த இனிகோ "நான் அந்த வார்த்தையைச் சொன்னதே இல்லை" என்று சாதித்தார். "நீங்க சொன்னீங்க பிரதர்" என்று அம்ஜத் இப்போது சாட்சிக்கு வர, இனிகோவின் கோபம் அவரின் மீது பாய்ந்தது. "நீங்க கூடத்தான் ஐஸ்வர்யா பத்தி சொல்லியிருக்கீங்க" என்று சபையில் அம்ஜத்தை போட்டுக் கொடுக்க முயன்றார்.

"அது என்னன்னு இப்ப சொல்லுங்களேன். நான் விளக்கம் தர்றேன்” என்று அம்ஜத் பதில் சொன்னாலும் இனிகோ மெளனம் சாதித்தார். “ஐஸ்வர்யா துறுதுறுன்னு இருப்பாங்க. ஆட்டத்தின் நடுவுல பேசுவாங்க” அப்படித்தான் சொல்லியிருப்பேன்” என்பது அம்ஜத்தின் விளக்கம். ஆனால் காடர்கள் அணியில் இருந்த போது ஐஸ்வர்யா பற்றிய கிண்டலுக்கு அம்ஜத்தும்தான் இணைந்து சிரித்தார். அது அப்போதைய நிலைமை.

சர்வைவர் 77

“அம்ஜத்திற்கு நான் பதில் சொல்லியிருப்பேன். ஆனால் உரையாடல் இன்னமும் மோசமாயிடுமேன்னு சும்மா இருந்தேன்” என்று பிறகு விளக்கம் அளித்தார் இனிகோ. கட்டுரையின் துவக்கத்தில் சொன்னபடி “கேரக்டர்’ என்கிற வார்த்தையை ஐஸ்வர்யா தவறான கோணத்தில் புரிந்து கொண்டிருக்கிறார். இதை அர்ஜூனும் விளக்கி ஐஸ்வர்யாவை சமாதானப்படுத்தி “இந்த விஷயத்தையெல்லாம் பெரிசு படுத்தாதீங்க” என்று நிகழ்ச்சியை முடித்தார்.

இம்யூனிட்டி சவாலில் விஜி வென்றிருப்பதால் அவருக்கு இந்த வாரம் பாதுகாப்பு கிடைக்கும். ஆனால் இனிகோவின் கதி என்னவாகும்?



source https://cinema.vikatan.com/television/survivor-reality-show-episode-77-review

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக