Ad

திங்கள், 29 நவம்பர், 2021

ஊக்கம், உற்சாகம் - 1: விடாது பெய்த மழையும், தேங்கிய நீரும் நமக்குக் கற்றுத்தந்த 4 பாடங்கள்!

கொட்டித் தீர்க்கிறது மழை. இதனால் பல பாதிப்புகள். வீட்டுக்குள் தண்ணீர் வந்திருக்கலாம். வணிகம் பாதிக்கப்பட்டிருக்கலாம். போக வேண்டிய இடத்துக்கு போக முடியாமல் போய் இருந்திருக்கலாம். இந்தப் பாதிப்பு வராமல் இருக்க சில நடவடிக்கைகளை நாம் எடுப்போம்தான். எனினும் மனதளவில் இவற்றை எப்படி எதிர்கொள்வது?
நண்பர்கள்

நட்பு வட்டத்தை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்

கீழ்தளத்தில் மழை நீர் உள்ளே புக, அங்கு இருந்தவர்களை மேல் மாடியில் வசிப்பவர்கள் அன்புடன் வரவழைத்து மழையின் பாதிப்பு நீங்கும் வரை தங்க வைத்துக் கொண்டனர். மழையில் ஒரு பகுதியில் உள்ள பல கடைகள் மூடப்பட்டிருக்க நண்பர் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டதும் அந்தப் பொருளை அவர் வாங்கி வந்து கொடுக்கிறார். அடுத்த நாள் வெளியூர் செல்வதாக இருக்கும் நிலையில் தெரிந்தவர் ஒருவர் அந்தப் பகுதியில் கடும் மழை பொழிய வாய்ப்பு உண்டு என்று கூறி எச்சரிக்கிறார். இதெல்லாம் எப்படி சாத்தியம் என்று யோசித்துப் பாருங்கள். நட்பு வட்டத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளுங்கள். அப்போது அனைத்தும் சாத்தியமாகும்.

முன்னெச்சரிக்கை வேறு, பீதி வேறு!

சில ஆண்டுகளுக்கு முன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது பலவித சிக்கல்களை அனுபவித்தவர்கள் உண்டு. எனவே கடும் மழை பெய்யும் என்று எச்சரிக்கை வந்தவுடன் மின்னணுப் பொருள்களை மின் தொடர்பில் இருந்து நீக்குதல், முக்கியமான ஆவணங்களை பீரோவின் கீழ்ப்பகுதியில் இருந்து மேல் பகுதிக்கு மாற்றுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவது நல்லதுதான்.

மழைக்காலம்

ஆனால் உடல் நடுங்க 'ஐயோ போனமுறை இதையெல்லாம் அனுபவித்தோமே' என்று துன்பங்களை மனதில் ரீவைண்ட் செய்து கொண்டு நெஞ்சை பிடித்துக் கொண்டு உட்கார்ந்தால் டாக்டரிடம் சென்று வரும் அவஸ்தை வேறு. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்வோம். அதே நேரம் மனதில் துணிவை வளர்த்துக் கொள்வோம்.

மாற்றங்களை ரசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்

எந்தச் சூழலிலுமே ரசிப்பதற்கான விஷயங்கள் இருக்கும். இயற்கைப் பேரிடர்கள் நடக்கும்போது சில நாள்களுக்காவது வாழ்க்கை முறை மாறும். நீங்கள் எதிர்பாராத மாற்றங்கள். இவற்றில் ரசிப்பதற்கான கோணங்கள் என்னென்ன உள்ளன என்பதில் கவனம் செலுத்துவதில் தவறில்லை. ஒரு ஊரில் மழை நீரின் அளவு தொடர்ந்து அதிகரிக்க இரண்டு சிறுவர்கள் அங்கிருந்த மரத்தின் மேலே ஏறி உட்கார்ந்து மழை சற்று வடிந்ததும் கீழே இறங்கினார்கள். இந்தக் காட்சி தொலைக்காட்சியில் இடம்பெற்ற போது பார்த்துக்கொண்டிருந்த ஒரு சிறுமி 'நாம் மரங்களை காப்பாற்றினால் மரங்கள் நம்மை காப்பாற்றும்' என்றாள்.

உதவி

பிறருக்கு உதவுவதற்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன!

நம் அனைவருக்கும் மனிதாபிமானம் இல்லாமல் இருக்காது. ஆனால் அவற்றை செயல் வடிவில் காட்டுகிறோமா? இதற்கான ஒரு நல்ல வாய்ப்பாக கடும் மழை மற்றும் வெள்ள காலங்கள் இருக்கக்கூடும். பல அடுக்குமாடிக் குடியிருப்புகளில் சமீபத்திய கடும் மழைக் காலத்தில் தங்கள் குடியிருப்பில் பராமரிப்பு பணிசெய்த ஊழியர்கள் மற்றும் செக்யூரிட்டி ஆள்களுக்கு வேளாவேளைக்கு உணவு அளித்ததைக் காணமுடிந்தது. கடும் மழையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைப் பற்றி கேள்விப்பட்டவுடன் ஆதரவற்றவர்களுக்கான அமைப்புகளுக்கு நன்கொடை அனுப்பியவர்கள் உண்டு.

ஆக, அண்டை வீட்டினருக்குச் செய்யும் உதவியிலிருந்து, தொலைவில் உள்ளவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவதுவரை மனிதாபிமானத்தைக் காட்ட உதவிய காலகட்டம் இது.



source https://www.vikatan.com/lifestyle/miscellaneous/how-to-overcome-the-stress-of-rainy-days

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக