Ad

சனி, 27 நவம்பர், 2021

வாட்ஸ்அப் கலாட்டாக்களும் ஃபார்வேர்ட் பரிதாபங்களும்!

வம்பை தந்தி வேகத்தில் பரவ விட்டால் அதுதான் வதந்தி. முன்பெல்லாம் ஒரு ரகசியத்தைச் சொன்னால் மறுநாள் அது செய்தியாகி விடும் என்று கிண்டல் அடிப்பார்கள். இப்போது அந்த வேலை வாட்ஸ்அப் வசம் வந்து விட்டது.

நாம் ஒருவரை நேரில் சந்தித்து அளவளாவிய பிறகு அப்புறம்... என்று இழுத்து வேறென்ன விசேஷம் என்று ஆரம்பித்தால் வம்புக்கு ரெடி என்று அர்த்தம். Whatsapp என்ற சமூக வலைத்தளச் செயலி what's up என்ற (என்னா நடக்குது?) ஆங்கில வார்த்தை யிலிருந்து தான் தோன்றியது. இதையே 'என்னாடா நடக்குது இங்க?' என்று சுருதிஹாசன் குரலில் கோபத்துடன் கேட்க வைத்து விட்டார்கள் நம் மக்கள்.

சமீபத்தில் சமூக ஊடகங்களின் மும்மூர்த்திகளான ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் சில மணி நேரம் செயலிழந்து போன போது உங்களுக்கும் எனக்கும் என்ன நஷ்டம் ஏற்பட்டது? நான் அனுப்பிய சில குட்நைட் மெசேஜ்கள் மறுநாள் காலை தான் போய் சேர்ந்தது. யாரும் அதை பற்றிக் கவலைப்படவில்லை. எனக்கு அன்று வரவேண்டிய பல வாட்ஸ்அப் குப்பைகள் தாமதமாக மறுநாள் வண்டிவண்டியாக வந்து சேர்ந்தது. மற்றபடி எனக்கும் உங்களுக்கும் எந்த நஷ்டமும் இல்லை. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் செயலிகளின் உரிமையாளர் மார்க் ஜுக்கர்பெர்க் அடைந்த நஷ்டம் 51 ஆயிரம் கோடி ரூபாயாம்.

Whatsapp

உலகிலேயே பொய் தகவல்களை சமூக ஊடகங்களில் அதிகம் பரப்பும் நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது என்று புள்ளி விவரம் சொல்கிறது. ஆரம்பத்தில், புதிதாக வெளியிடப்பட்ட 500 ரூபாய் நோட்டில் வைக்கப்பட்டுள்ள ட்ராக்கிங் சிப், மீனாட்சி அம்மன் கோவிலை பார்த்து வியந்துபோன நாசா, சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு கீழே இருக்கும் சுரங்கத்தில் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள அணுஆயுத கட்டமைப்பு என்று டிசைன் டிசைனாக வாட்ஸ்அப் பதிவுகள் வந்து நம்மை திக்குமுக்காடச் செய்தன.

சமீபத்தில் வாட்ஸ்அப்பில் வலம் வந்த 'நம் பாரத பிரதமர் மோடி தனது இளம்வயதில் செய்யும் யோகா பயிற்சியின் அரிய காட்சி' என்று கழுத்துக்கு மேலே காலை சுற்றி யோகா செய்யும் ஒரு பிரபல யோகா நிபுணரின் பழைய கருப்பு வெள்ளை காணொளியும் ஒரு உதாரணம்.

கொரோனா காலகட்டத்தில் வாட்ஸ் அப்பில் வெளிவந்த கை வைத்தியங்களை எல்லாம் திரட்டி எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு ஒரு புத்தகமாக வெளியிட்டால் அதை மட்டும் படித்து முடிக்கவே ஐந்து வருடங்கள் ஆகிவிடும்.

இந்த வாட்ஸ்அப் என்னும் அற்புதமான சமூக வலைதளச் செயலி நம்மால் எப்படி படுமோசமான விதத்தில் துர்பிரயோகம் செய்யப்படுகிறது என்று என் அனுபவத்தில் சில.


நான் இருக்கும் ஒரு வாட்ஸ்அப் குரூப் அதிகாலை நான்கு மணிக்கே கல்லா கட்டி விடும். வயதான தூக்கம் வராத இரண்டு பெருசுகள் அதிகாலை (சில சமயம் 3 மணி) எழுந்து மற்றவர்கள் தூக்கத்தை கெடுப்பது என்று முடிவெடுத்து குட் மார்னிங் மெஸ்சேஜ் அனுப்புவார்கள். ஒருவர் அனுப்பியதை மீண்டும் இன்னொருவர் பார்வார்டு செய்வார். இப்படியாக தொடங்கும் இவர்களது காலைநேர வீர விளையாட்டில் என் செல்போன் போடும் "டொங் டொங்' சத்தத்தில் என் மற்றும் குடும்பத்தார் தூக்கம் காலி. காலையில் எழுந்து கொள்ள எங்களுக்கு அலாரமே தேவையில்லை.

ஐந்து வருடங்களாக என்னை ஒரு முறை கூட பார்க்காத, ஒரு தடவை கூட போன் செய்து பேசாத ஒரு பால்ய நண்பன் தினமும் காலையில் பூக்களின் படங்களுடன் குட் மார்னிங் மெசேஜ் மற்றும் ஒளிப்படங்கள் அனுப்புகிறான். இதற்கு நான் சூப்பர்.. அருமை என்று பதில் வேறு தர வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். இல்லையென்றால் கோபித்துக்கொள்கிறான்.

ஒரு நண்பனிடம் நான் சொன்ன ஒரு செய்தியை ஒரு மணி நேரம் மறுத்து விவாதித்தான். அடுத்த வாரம் அதே செய்தியை ஃபார்வேர்ட் செய்து ஏதோ எனக்கு ஒரு புதிய விஷயம் சொன்னது போலவும் அதை மேலும் பலருக்கு ஷேர் பண்ணவும் கைகூப்பி வேண்டுகிறான். இன்னொரு பிரகஸ்பதி தான் அனுப்பிய வீடியோ படத்துக்கு தானே கட்டை விரல் உயர்த்திக்காட்டி ரொம்ப நல்ல மெஸ்ஸேஜ் என்று கீழே பதிலும் தருகிறார். வேறென்ன? இரண்டுமே ஃபார்வேர்ட் மெசேஜ் தான். சங்கரன் போட்ட 'ஹாப்பி மதர்ஸ் டே' வாழ்த்திற்கு கண்ணப்பன் 'சேம் டு யூ' என்கிறார்.

ஒரு பள்ளிக்கூட பேருந்து விபத்துக்குள்ளாகி பல மாணவர்களின் உயிர்கள் ஆபத்தில் இருப்பதாகவும் உடனே பல பாட்டில்கள் ரத்தம் தேவை என்ற ஒரே செய்தி இன்றளவும் என் செல் போனில் மாதம் ஒருமுறை வாட்சப்பில் உலா வருகிறது. முன்பெல்லாம் தபால் கார்டில் வரும்...

'இந்த படத்தை உடனடியாக ஏழு பேருக்கு அனுப்ப உங்களுக்கு 24 மணி நேரத்தில் ஒரு நல்ல செய்தி வரும், தவறினால்..' என்பது போன்ற மிரட்டல்கள் எல்லாம் இப்போது வாட்ஸ்அப்பில். மற்றும் கர்நாடகா செல்லும் வழியில் ஒரு குக்கிராமத்தில் உள்ள வைத்தியரிடம் கேன்சருக்கு உத்திரவாத மருந்து கிடைப்பது குறித்த தகவல்கள்…

இப்படி வரும் எல்லாவற்றையும் உடனடியாக எதுக்கு வம்பு, காசா, பணமா.. ஃபிரீ தானே எனறு பயந்தும் பரிதாபப்பட்டும் தங்கள் கருணாமனோபாவத்தை வெளிப்படுத்தவும் தங்கள் மேதா விலாசத்தை சபையோர்க்கு காட்டிக்கொள்ளவும் சகட்டுமேனிக்கு ஃபார்வார்ட் செய்கிறார்கள் நம் மக்கள்.

கலைவாணர் சொன்ன ஒரு பட்டன தட்டிவிட்டா தட்டுல ரெண்டு இட்டிலியும் தொட்டுக்கொள்ள சட்டினியும் இன்னும் வரவில்லை. ஆனால் ஒரு பட்டனை கட்டைவிரலால் தொட்டாலே நம் செல்போனில் வந்த குப்பைகளை பல பேர் செல்போன்களுக்கு அடுத்த நொடியில் அனுப்ப முடிகிறது. ஏதோ நம்மால் முடிந்த சமூக சேவை என்பது போல.

வாட்ஸ்அப் செயலியில் ஏன் இப்படிபட்ட செய்திகளும் வதந்திகளும் பேயாட்டம் போடுகிறது? ஒரே முக்கிய காரணம் இது இன்னும் இலவசம் என்பதே. நாம் பெறும் வாட்ஸப் செய்திகளில் 99 விழுக்காடு ஃபார்வேர்ட் செய்திகள் என்பது தான் உண்மை. தாங்களாகவே தட்டச்சி உருவாக்கப்படும் செய்திகளை அனுப்பும் பயனாளிகள் மிகமிக குறைவே. யாரோ கஷ்டப்பட்டு சிந்தித்து உருவாக்கிய ஆக்கங்களையெல்லாம் 'ஜஸ்ட் லைக் தட்' வாட்ஸ் அப்பில் ஃபார்வர்டு செய்து அனுப்ப... இதற்கு பலரும் 'கலக்கிட்ட... சூப்பர். அருமை.' என்றெல்லாம் பாராட்டவும் செய்வார்கள். ஃபார்வர்ட் செய்தவரும் காலரைத் தூக்கி விட்டபடி கைகூப்பி நன்றி சொல்வார். இதைத்தான் தமிழில் 'நோகாம நொங்கு தின்றது' என்பார்கள். இப்படிப்பட்ட குட் மார்னிங் மற்றும் ஃபார்வார்டு குறுஞ்செய்திகளுக்கு கட்டணமாக குறைந்த பட்சம் ஐம்பது பைசா என்று நிர்ணயித்தாலே இத்தகைய வாட்ஸ்அப் ஜாம்பவான்கள் பவ்யமா ஒதுங்கி விடுவார்கள். வாட்ஸ்அப் என்ற இந்த அற்புதமான சமூக வலைதள தொடர்பு செயலியை பீடித்த வதந்திகள் மற்றும் சங்கடங்கள் ஒழிய இதைத்தவிர பல்வேறு சட்ட பூர்வமான வழிமுறைகள் பலன் தரும் என்று தோன்றவில்லை.

whatsapp

கூடுதலாக ஒரு விஷயம்.. நம் தமிழ் மக்கள் பயன்படுத்தும் இந்த கை கூப்பும் வாட்ஸ் அப் இமோஜிக்கு என்னவெல்லாம் அர்த்தம் இருக்கிறது என்பது மிகவும் ஆச்சரியமான ஒரு விஷயம். 'வணக்கம், ஸாரி, நன்றி, சிறப்பு, ஆள விடு, நான் இந்த ஆட்டத்துக்கு வரல, கும்பிடு', அப்புறம் கையைக் கூப்பி நீங்க சொல்றது கேட்குது.. 'இத்தோட நிறுத்திக்கோ' அதானே!

- சசி



source https://www.vikatan.com/technology/humoursatire/whatsapp-forward-galatta

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக