மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு விடுதலைப்புலிகள்தான் காரணம் என ஒரு தரப்பினரும், இல்லை என மறுத்து இன்னொரு தரப்பினரும் பல ஆண்டுகளாக கருத்துதெரிவித்து வருகின்றனர். இந்திய அரசின் தரப்பில் விடுதலைப்புலிகள் மீதுதான் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. இதில், கொலைக் குற்றவாளிகளை விசாரித்த சி.பி.ஐ அதிகாரிகள் பலரும் ராஜீவ் படுகொலை தொடர்பாக, முழுமையான விசாரணை நடத்தப்படவில்லை, அனைத்துகோணங்களிலிருந்தும் விசாரணை கொண்டுசெல்லப்படவில்லை என பகிரங்கமாக குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக, கொலை சம்பவம் குறித்து விசாரித்த வர்மா கமிஷன், ஜெயின் கமிஷன் போன்ற விசாரணை குழுக்களும் விடுதலைப்புலிகளை தாண்டி பின்புலத்தில் உலகளாவிய புள்ளிகள் இருப்பதற்கான முகாந்திரமும், இந்திய அரசியல் புள்ளிகள் சம்பந்தப்பட்டிருப்பதற்கான சந்தேகங்களையும் எழுப்பி விசாரணை முடிவுகளை முன்வைத்தன.
ஆனால், அந்த சந்தேக நோக்கில் எந்த விசாரணையும் நடத்தப்படாமல் இறுதிவரை கிடப்பில் போடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், மர்மங்கள் நிறைந்த ராஜீவ் காந்தியின் படுகொலை சம்பவத்துக்கு காரணம் விடுதலைப் புலிகள் அமைப்புதான் என்ற கருத்துகளே தற்போதுவரை பொதுவெளியில் நீடிக்கிறது. இந்தச்சூழலில், ராஜீவ் காந்தி கொலைக்கு காரணமாக சொல்லப்படும் விடுதலைப்புலிகள் அமைப்பின் விளக்கம் குறித்தும், முக்கியமாக விடுதலைப் புலிகளின் தலைவர் என்ன கூறினார் என்பதைப் பற்றியும் விவரிக்கிறது இந்த கட்டுரைத்தொகுப்பு.
பத்திரிகையாளர் சந்திப்பு, கிளிநொச்சி, ஏப்ரல் 10, 2002:-
2002, ஏப்ரல் 10-ம் நாள் விடுதலைப் புலிகளின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஏற்று உலகின் பல நாடுகளிலிருந்து சுமார் 400-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் புலிகள் கட்டுப்பாட்டிலிருந்த கிளிநொச்சியில் கூடியிருந்தார்கள். இதற்கு முன்பாக சிறிய சிறிய பேட்டிகள் கொடுத்திருந்தாலும் இதுதான் புலிகளின், முதல் அதிகாரப்பூர்வமான மிகப்பெரிய ஊடக சந்திப்பாக இருந்தது. அதில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம், அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட தளபதிகள் கலந்துகொண்டனர். அதுவரை துப்பாக்கித் தோட்டாக்களையும், ஏவுகணை குண்டுகளையும் எதிர்கொண்டு வந்த புலிகள், முதல்முறையாக பத்திரிகையாளர்களின் கேள்விகளை எதிர்கொண்டனர்.
அந்த ஊடக சந்திப்பில், ராஜீவ்காந்தி படுகொலை குறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு பிரபாகரன், ஆன்டன் பாலசிங்கம் அளித்த பதில்களையும் உள்ளது உள்ளபடி உண்மை மாறாமல் அப்படியே இங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
(குறிப்பு: சில கேள்வி பதில்கள் ஆங்கிலம் தமிழ் என கலந்து இருந்ததால், ஆங்கிலத்தில் உள்ளவை மட்டும் இங்கு தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.)
பத்திரிகையாளர்களின் கேள்வி Vs விடுதலைப்புலிகளின் பதில்:
1). ராஜீவ்காந்தி படுகொலையில் நீங்கள் குற்றம் சாட்டப்பட்டிருப்பது பற்றி?
பிரபாகரன்: இந்த கேஸ் வழக்கிலிருக்கும் வரைக்கும், நாம் இதைப்பற்றி ஒரு கருத்தை கூற முடியாதவர்களாக இருக்கிறோம்.
Also Read: ''ராஜீவ் காந்தி கொலையாளிகளை நீதிமன்றம் எப்படி மன்னிக்க முடியும்?''- கே.எஸ்.அழகிரி கேள்வி!
2). ராஜீவ் காந்தி படுகொலையில் நீங்கள் சம்பந்தப் படுத்தப்படுவதை மறுக்கிறீர்களா?
பிரபாகரன்: இது பத்து வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு துன்பியலான சம்பவம். மேலும், இதைப்பற்றி நாங்கள் கருத்துகளை தெரிவிக்க விரும்பவில்லை. நாம் இப்போது ஒரு சமாதான முயற்சியில், வெளிநாட்டு அனுசரணையுடன் ஈடுபட்டிருப்பதால், மேற்கொண்டு இதுபோன்ற தற்கொலை தாக்குதல்கள் பற்றி பேச விரும்பவில்லை.
3). குற்றச்சாட்டுகள் குறித்து நீங்கள் சொல்லவரும் கருத்து?
ஆன்டன் பாலசிங்கம்: இது மிகவும் "உணர்வுப்பூர்வமான முக்கிய பிரச்னை” (sensitive issue) என்பது எனக்குத் தெரியும். உங்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் அப்படித்தான் தான். நாங்கள் இந்தியாவுடன் நட்புறவை மேற்கொள்ள விரும்புகிறோம். நீங்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சிக்கலை எழுப்புகிறீர்கள். அதைத்தான் திரு.பிரபாகரன் சொல்கிறார், தயவுகூர்ந்து கவனியுங்கள், இது ஒரு துன்பியல் சம்பவம். எனவே, இந்த கட்டத்தில் இதுகுறித்து எந்தக் கருத்தையும் கூறும் நிலையில் நாங்கள் இல்லை.
4) ராஜீவ்காந்தி படுகொலையில் சம்பந்தப்படுத்த பட்டதனால் தான், போதிய ஆதரவு தமிழகத்திலும், இந்தியாவிலும் இன்றைக்கு குறைந்திருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?
ஆன்டன் பாலசிங்கம்: ``சமாதான முன்னெடுப்புகள் நடந்து கொண்டிருக்கும் ஒரு சூழலில் நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள். இப்போது ஒரு சமாதான சூழல் இங்கு நிலவுகிறது. எதிர்காலத்தில் ஒரு ஒளிமயமான எதிர்காலம் எங்கள் மக்களுக்கு வரவேண்டும். நீங்கள் இந்த பழைய, இறந்தகால பிரச்னைகளைத் தோண்டிக்கொண்டு இருக்கின்றீர்கள். நாங்களே சொல்லிவிட்டோம், இது ஒரு துன்பியல் சம்பவம். இது ஒரு துன்பகரமான சம்பவம். இது ஒரு அவலமான சம்பவம்! எனவே, இறந்தகாலத்தை தோண்டாதீர்கள்.”
இவ்வாறாக, ராஜீவ்காந்தி படுகொலை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும், அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கமும் பதிலளித்தனர்.
அதேபோல இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நடப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னதாக, ஓர் ஆங்கில ஊடகவியலாளர் பிரபாகரனிடம் கண்ட தனிப்பட்ட பேட்டியில், Q) It does in my question for circumstantial evidence, the tiger was responsible for assassination of rajiv gandhi ? extremely strong! என ராஜீவ்காந்தி படுகொலை குறித்து கேட்கிறார். அதற்கு
பிரபாகரன் தமிழில் அளித்த பதில்: ``நாங்கள் ஆரம்பத்திலேயே எங்களுடைய கருத்தை தெரிவித்திருக்கிறோம். எங்களைப் பொருத்தவரைக்கும், இந்தக்கொலை எங்கள் மீது சுமத்தப்பட்ட ஒரு அபாண்டமான குற்றச்சாட்டாகவே கருதுகிறோம்!” என்றார்.
அடுத்ததாக 2018-ம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பானது, ``ராஜீவ்காந்தியின் கொலைக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என மீண்டும் ஓர் அறிக்கையை வெளியிட்டு விளக்கமளித்தது.
விடுதலைப்புலிகள் வெளியிட்ட அறிக்கை - 2018:
``நாங்கள் பலமுறை தன்னிலை விளக்கம் அளித்தும், ஆதாரங்கள் பலவற்றை எடுத்துரைத்தும், மீண்டும் மீண்டும் புலிகள்தான் ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்ற ஆதாரமில்லாத தவறான கருத்து தொடர்ந்து திணிக்கப்பட்டுவருகிறது. தொடர்கின்ற இதுபோன்ற தவறான பிரசாரத்தால், எங்கள் மக்கள் கையறுநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
மேலும், இந்தியத் தலைமையைச் சீர்குலைக்கும் திட்டமோ, இந்தியாவைத் தாக்கும் திட்டமோ ஒருபோதும் புலிகளிடம் இருந்ததில்லை. இலங்கையைச் சாராத எந்தவொரு நபருக்கோ, தலைவருக்கோ, எதிராக நாங்கள் ஒருபோதும் ஆயுதம் ஏந்தவில்லை. குறிப்பாக எந்தவொரு இந்திய தேசியத் தலைவருக்கும் எதிராகச் செயல்பட எப்பொழுதும் நினைத்ததில்லை. தொடர்ந்து அழிந்து கொண்டிருக்கும் எம் மக்கள்மீது, இதுபோன்ற அபாண்டமான குற்றச்சாட்டுகளை இனியும் பதிய வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
'ராஜீவ் காந்தி படுகொலைக்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை' என முன்பே பலமுறை விடுதலைப் புலிகள் இயக்கம் கூறி இருக்கிறது. அதேபோல, ‘ராஜீவ் காந்தி படுகொலையில் எங்கள் இயக்கத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லை எனத் தெளிவாகக் கூறினார் பிரபாகரன். விடுதலைப் புலிகள் ஏற்பாடுசெய்திருந்த உலக இதழியலாளர் சந்திப்பின்போதுகூட, ‘ராஜீவ் காந்தி படுகொலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்' எனக் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, ‘அது ஒரு துன்பியல் சம்பவம்' என்று பிரபாகரன் பதிலளித்திருந்தார்.
Also Read: இலங்கை: பிரபாகரன் மரணம் குறித்த கருத்து! - அதிபர் கோத்தபய ராஜபக்சேவைச் சுற்றும் சர்ச்சை
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, விடுதலைப் புலிகளோடு ரகசிய உறவைப் பேணி வந்திருக்கிறார். இந்திய அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே இருக்கும் உறவைத் தகர்த்தெறியும் உள்நோக்கோடு ஸ்ரீலங்கா அரசும், அந்நிய சக்திகளும் இணைந்து மேற்கொண்ட சூழ்ச்சியின் விளைவே, ராஜீவ் காந்தியின் படுகொலையென உறுதியாகக் கருதுகிறோம்.” என விடுதலைப்புலிகள் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கின் பின்னணி:
1991, மே 21-ம் தேதி தேர்தல் பிரசாரத்திற்காக சென்னை ஶ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டத்துக்கு வந்த ராஜீவ்காந்தி, மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்படுகிறார். பின்னர், இந்த படுகொலையை நிகழ்த்தியது, தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு என்று குற்றம்சாட்டப்பட்டு, அதன் தலைவர் பிரபாகரன், உளவுப்பிரிவு தளபதி பொட்டு அம்மான் உள்ளிட்டோரை தேடப்படும் குற்றவாளிகளாக இந்திய அரசாங்கம் அறிவித்தது. மேலும், இந்தியாவில் விடுதலைப்புலிகள் அமைப்பு செயல்படவும் தடை விதித்தது. ஆரம்பத்தில், ராஜீவ்காந்தி கொலை தொடர்பாக 26 பேர் கைதுசெய்யப்பட்டனர். பின்னர் அதில் 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். மீதமுள்ள 7 பேருக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டது.
கடந்த 30 ஆண்டுகளாக பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏழுபேர் ராஜீவ்காந்தி கொலைவழக்கு தொடர்பாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். இவர்களின் விடுதலைக்காக தமிழக அரசு சட்டப்போராட்டங்களையும், தமிழ் அரசியல் அமைப்புகள் களப்போராட்டங்களையும் நடத்தி வருகின்றன. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஏழுபேர் விடுதலை தொடர்பாக குடியரசுத்தலைவருக்கும், ஆளுநருக்கும் கடிதம் மூலம் கோரிக்கை வைத்து வருகிறார்.
Also Read: ``நான் சாகசவாதியல்ல, மக்களுக்காகப் போராடும் விடுதலைப் போராளி!''- பிரபாகரன் பிறந்த தினப் பகிர்வு
source https://www.vikatan.com/government-and-politics/politics/what-ltte-prabhakaran-spoke-about-rajiv-gandhi-assassination
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக