Ad

செவ்வாய், 30 நவம்பர், 2021

சாங்தேவின் தொடர் முயற்சி, கேப்டன் தாபாவின் வின்னிங் ஷாட்! சென்னையின் FC இரண்டாவது வெற்றி

இந்தியன் சூப்பர் லீக் சீசன் 8-ன் நேற்றைய போட்டியில் சென்னையின் FC அணியும் நார்த்ஈஸ்ட் யுனைடட் அணியும் மோதியிருந்தன. இந்த போட்டியை சென்னையின் FC அணி 2-1 என வென்றுள்ளது. கடந்த சீசனில் சுமாராக ஆடியிருந்த சென்னையின், இந்த சீசனில் ஆடிய முதல் இரண்டு போட்டிகளையுமே வென்றிருக்கிறது.

நார்த்ஈஸ்ட் யுனைடட் அணிக்கு இது மூன்றாவது போட்டி. ஏற்கனவே ஆடியிருக்கும் இரண்டு போட்டிகளில் ஒன்றில் தோல்வியடைந்திருக்கும் நார்த்ஈஸ்ட், மற்றொரு போட்டியை டிரா செய்திருந்தது. இந்த சீசனின் முதல் வெற்றியை பதிவு செய்தே ஆக வேண்டும் என்ற உத்வேகத்துடன் நார்த்ஈஸ்ட் களமிறங்கியது.

சென்னை அணி தனது முதல் போட்டியிலேயே ஹைதரபாத் அணியை வீழ்த்தியிருந்தாலும், அதை ஒரு திருப்திகரமான வெற்றியாக சென்னையின் FC பார்க்கவில்லை. ஆட்டம் முழுவதும் ஹைதராபாத் அணியே ஆதிக்கம் செலுத்தியிருந்தது. ஒரு பெனால்டி வாய்ப்பில் கோலை அடித்து சென்னை போட்டியை வென்றுவிட்டது. இதனால், முழுமையாக ஆதிக்கம் செலுத்தி இந்த போட்டியை வெல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் சென்னையின் FC களமிறங்கியது.

நார்த்ஈஸ்ட் 4-3-3 ஃபார்மேஷனோடும் சென்னையின் FC 4-2-3-1 ஃபார்மேஷனோடும் களமிறங்கின. நார்த்ஈஸ்ட்டில் கயேகோ, மசூர் போன்றவர்களுக்கு காலித் ஜமில் தொடக்க லெவனில் இடம் கொடுத்திருந்தார். சென்னை அணியில் கடந்த போட்டியில் ஆடாத ஜெர்ரிக்கு தொடக்க லெவனில் இடம் கிடைத்தது.

தொடக்கத்திலிருந்தே இரண்டு அணிகளும் சரிசமமாகவே Possession வைத்திருந்தனர். தொடக்கத்திலேயே பெரிதாக அட்டாக் செய்யாமல், மிட் ஃபீல்டர்களுக்குள்ளேயே பந்தை சுற்ற விட்டுக்கொண்டிருந்தனர். மெதுவாக நார்த்ஈஸ்ட் அட்டாக்கை தொடங்க, 9-வது நிமிடத்தில் ஒரு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. கெய்கோ அடித்த அந்த கார்னர் கிக்கை பாக்ஸுக்குள் சரியாக ஃபினிஷ் செய்யாமல் மசூர் தடுமாற, முதல் கோல் வாய்ப்பு விரயமானது.

கயேகோ முதல் 24 நிமிடங்கள் மட்டுமே களத்தில் இருந்தார். ஆனால், இருந்தவரைக்கும் அவரை சுற்றிதான் ஆட்டம் சுழன்று கொண்டிருந்தது. ஆடிய கொஞ்ச நேரத்தில் நிறைய கோல் வாய்ப்புகளை உருவாக்கியிருந்தார். அட்டகாசமான பாஸ்கள் மற்றும் செட் பீஸ் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்து கலக்கினார்.

அவர் பங்களிப்பின் மூலம் எந்த நொடியிலும் நார்த்ஈஸ்ட் கோல் அடித்துவிடும் என்ற நிலையில், துரதிர்ஷ்டவசமாக அவர் காயமடைந்தார். டிரிபிள் செய்து வந்த போது அவரை டேக்கிள் செய்ய நாராயண் தாஸ் குறுக்கே பாய்ந்திருப்பார். இதில் கயேகோவின் முட்டி மடங்கிவிடவே அவர் மேலும் ஆட முடியாத சூழல் இருந்தது.

கயேகோ

அவர் விட்டு சென்ற இடத்தை நிரப்பும் வகையில் விபி சுஹேர், ஹெர்னன் போன்றோர் கூடுதல் உத்வேகத்துடன் ஆடினர். 37-வது நிமிடத்தில் மசூரின் த்ரோ இன்னை சுஹேர் கச்சிதமாக தலையால் முட்டி கோலாக்க முயன்றிருப்பார். விஷால் கெய்த் அதை சிறப்பாக தடுத்து முட்டுக்கட்டை போட்டிருந்தார். 39 வது நிமிடத்திலேயே ஹெர்னன் இன்னொரு கோல் வாய்ப்பை உருவாக்க, அது ஜஸ்ட் மிஸ் ஆகியிருந்தது.

கடந்த போட்டியளவுக்கு மோசம் இல்லை என்றாலும், இந்த போட்டியிலும் சென்னை கொஞ்சம் தடுமாறிக்கொண்டே இருந்தது. நார்த்ஈஸ்ட்டே ஆட்டத்தை முன்னெடுத்து சென்று கொண்டிருந்தது. ஆனாலும் கடந்த போட்டியை போல முதல் கோலை அடித்தது என்னவோ சென்னைதான்.

சாங்தே
41 வது நிமிடத்தில் வலப்பக்கத்திலிருந்து ட்ரிப்பிள் செய்து நார்த்ஈஸ்ட்டின் டிஃபன்ஸை உடைத்து சாங்தே ஒரு கோலை அடித்தார். சென்னை 1-0 முன்னிலை பெற்றது.

இதற்கு முன்பே இரண்டு முறை இப்படி வலது பக்கத்திலிருந்து பாக்ஸுக்குள் வந்து சாங்தே இரண்டு முறை முயன்றிருப்பார். இடதுகால் வீரரான சாங்தேவுக்கு வசமாக அமைந்த வாய்ப்புகள் அவை. அவற்றை கோட்டை விட்டிருந்தாலும் மூன்றாவது வாய்ப்பில் அட்டகாசமான கோலை அடித்து முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.

சுஹைர்

முதல் பாதியில் சென்னை அணி 1-0 என முடித்திருந்தது. இரண்டாம் பாதியின் தொடக்கத்திலேயே நார்த்ஈஸ்ட் யுனைடட் பதிலடி கொடுத்தது. 50-வது நிமிடத்தில் ஒரு லாங் த்ரோ இன்னை தலையால் முட்டியே சுஹைர் கோலாக்கினார். சென்னையின் கோல் கீப்பர் விஷால் கெய்த் கோல் போஸ்ட்டில் இருந்து முன்னால் வராமல் இருந்திருந்தாலே இதை தடுத்திருக்க முடியும். ஆனால், பந்தை பறிக்க வெளியே வந்து, அதையும் செய்ய முடியாமல் கோலையும் தடுக்க முடியாமல் ஏமாற்றமளித்தார். போட்டி 1-1 என சமநிலைக்கு வந்தது. இந்த கோலுக்கு பிறகு தொடர்ச்சியாக சில வாய்ப்புகளை உருவாக்கி நார்த்ஈஸ்ட் முன்னிலை எடுக்க முயன்றாலும் நூலிழையில் எல்லாம் மிஸ் ஆனது.

61 வது நிமிடத்தில் மிர்லான் முர்சேவ் நார்த்ஈஸ்ட்டின் டிஃபண்டர்களை அழகாக சமாளித்து உள்ளே வந்து ஒரு கோலை போட்டிருப்பார். ஆனால், அது ஆஃப் சைடாக மாறி சென்னைக்கு இன்னும் அழுத்தத்தை கூட்டியது.

74 வது நிமிடத்தில் இதே மிர்லான் முர்சேவ் கொடுத்த ஒரு பாஸை கச்சிதமாக வாங்கி அணியின் கேப்டனான அனிருத் தாபா கோலாக்கினார். இதன்மூலம் சென்னை அணி 2-1 என முன்னிலை பெற்றது.
அனிருத் தாபா

இதன்பிறகு, ஆட்டத்தை ஓரளவுக்கு சென்னை அணி கட்டுக்குள் வைத்திருந்தது. கூடுதல் நேரத்திலும் நார்த்ஈஸ்ட் யுனைடடுக்கு செட் பீஸ் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், அவர்களால் போட்டியை சமனாக்கும் அந்த ஒரு கோலை அடிக்கவே முடியவில்லை. சென்னை 2-1 என போட்டியை வென்றது.

ஹைதராபாத் அணிக்கு எதிராக திணறிய அளவுக்கு நார்த்ஈஸ்ட்டுக்கு எதிராக திணறாவிட்டாலும், சென்னை அணி சில தவறுகளை செய்திருக்கவே செய்கிறது. குறிப்பாக, நார்த்ஈஸ்ட் அடித்த அந்த ஒரு கோலை விஷால் கெய்த் தவறவிட்ட விதம் மற்றும் சில கோல் வாய்ப்புகளை சென்னை விரயம் செய்த விதம் ஆகியவற்றை குறிப்பிடலாம். போட்டியில் ஆதிக்கம் செலுத்தாவிட்டாலும் வெற்றிக்கு தேவையான கோல்களை அடிக்கும் வித்தை மட்டும் இந்த சென்னைக்கு அத்துப்படியாக இருக்கிறது.



source https://sports.vikatan.com/football/chennai-fc-won-their-second-match-of-the-season-against-northeast-united

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக