சிறுவயதில் நாம் விரும்பி சாப்பிட்ட தின்பண்டங்களில் கண்டிப்பாக போண்டா, பஜ்ஜி, வடை என பலகாரங்களுக்கு தனி இடமே இருக்கும். இப்போதும் கூட வீட்டில் இருக்கும் விடுமுறை நாட்களிலோ அல்லது உறவினர்கள் வந்தாலோ திடுமென அவர்களை உபசரிக்க நம் அம்மாக்கள் எடுக்கும் ஒரே ஆயுதம் இந்த பலகார வகைகள்தான். இந்த பலகாரங்களில் போண்டாவிற்கு என தனி ரசிகர் பட்டாளமே உண்டு. உருளைக்கிழங்கு மசாலா, வெங்காயம், காய்கறிகள், தற்போது இறைச்சி மசாலா வரை பல வகைகளை கடலை மாவில் முக்கி எடுத்து, எண்ணையில் பொரித்து எடுத்து கொடுக்க சுவையில் கண்டிப்பாக சில பல போண்டாக்கள் உள்ளே செல்லும். அதிலும் முட்டை போண்டாவை ருசித்தவர்கள், மறுமுறை அதனை சுவைக்காமல் இருந்தால்தான் ஆச்சரியம். வெளியே மொறு மொறுவென கிறிஸ்ப்பியும், உள்ளே மெதுவான மாவும், அதனுடன் வேக வைத்த முட்டையும் என போண்டா வகைகளில முட்டை போண்டாவின் சுவை வேற லெவல்தான். அப்படி தன் கடையில் முட்ட போண்டாவை சுவைத்தவர்களை அதனின் செய்முறையாலும் சுவையாலும் திரும்பி தேடி வர வைக்கிறார் திருச்சியில் உள்ள பெஸ்ட் முட்டை போண்டா கடையை சேர்ந்த சுரேஷ் பாபு.
"எல்லா இடத்துலயும் இது போல போண்டா கிடைக்குறது இல்லன்னு, நம்ம கடையை தேடி வரவங்க சொல்லுவாங்க. மக்களை திருப்திபடுத்துறது தான் எங்களோட நோக்கம்ங்கிறனால அவங்க விரும்புற முட்டை போண்டா மட்டும் தான் விக்குறோம். வேற பலகாரம்லாம் போடுறது கூட இல்ல. முசிறி பக்கம் வீடு இருந்தாலும், வீட்ல இருக்குற பிரச்சனைனால பட்டணத்துக்கு வந்தவரு பெரியப்பா, ஆரம்பத்துல கடலை வியாபாரம் பண்ணுனவர், தொடர்ந்து முட்டை போண்டா போடா ஆரம்பிச்சாரு. அப்படி அவர் இருக்குற காலத்துல இருந்த கஸ்டமர்லாம் இப்போ வர இருக்காங்க" என்கிறார்.
தொடர்ந்து சுரேஷ் பாபுவிடம் பேசிய பின் போண்டாவை சாப்பிட தயாரானோம். மேகம் தூறிக்கொண்டே இருந்தாலும், நாம் சென்றிருந்த அந்த நேரத்திலும் இளைஞர்கள், பெரியவர்கள் என திருச்சி பெரியக்கடை வீதியில் தமிழ் சங்கம் கட்டிடத்திற்கு எதிரில் சிறிய தள்ளுவண்டி கடையான இங்கு ஆஜராகி கொண்டிருந்தனர். கடையின் ஒருபக்கம் முட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்க, மறுப்பக்கம் அணையாமல் எரிந்து கொண்டே இருக்கிறது அடுப்பு. அதில் சுட சுட ரெடியாகி கொண்டிருந்த போண்டாவில் இரண்டை வாங்கி பொடியுடன் சாப்பிட, வெளியில் இருக்கும் குளிர்ச்சிக்கு போண்டா இதமாக கரைந்தது. போண்டாவின் இந்த வித்தியாச சுவைக்கு காரணமாக சுரேஷ் பாபு கூறுவது, அவர் பயன்படுத்தும் எண்ணையையும் செய்முறையையும் போண்டாவில் போடப்படும் பொடியும்தானாம்.
ரொம்பவே எளிதாக அவர் கூறும் செய்முறையில் செக்கில் எடுக்கப்பட்ட கடலெண்ணெயை அடுப்பில் காயவிட்டு, எந்த செயற்கை மசாலாவும் செயற்கை நிறமூட்டிகளும் இல்லாமல் வீட்டில் வாங்கிய கடலை பருப்பை அரைத்து எடுத்த மாவில், சிறிது உப்பு காரம் கலந்து தினமும் பண்ணையில் இருந்து எடுக்கும் முட்டையை வேக வைத்து இட்டு பொரித்து எடுத்து தருகின்றார். கூடவே பொரித்த முட்டை போண்டாவில் போட்டுதரும் பொடி தான் இங்கு ரொம்பவே ஸ்பெஷல் என்பவர், அதனை எப்படி செய்வது என்பதையும் கூறுகிறார். சீரகம், சோம்பு, மிளகு, பெருங்காயம் போன்றவற்றை நிழலில் உலர்த்தி தேங்காய் எண்ணையில் வறுத்து எடுத்து பின்பு அதனை பொடி செய்ய வேண்டும் என்கிறார். உடலின் செரிமான பிரச்சனைக்கு இவையனைத்தும் தீர்வாக இருப்பதால் அவற்றை சாப்பிடும்போதும் எந்த வயிற்று பிரச்னையும் ஏற்படுவதில்லை என்கிறார்.
Also Read: திருச்சி ருசி : திணை அல்வா; சுழியம்; மொடகத்தான் தோசை அசத்தும் ` ஆப்பிள் மில்லட் ரெஸ்டாரென்ட்'!
இந்த மாதிரி ஆரோக்கியமான முறையில் செய்வதால் தன் பெரியப்பா காலத்தில் இங்கு வந்து சாப்பிட்டு சென்றவர்கள் அவர்களின் பேரக்குழந்தைகளுடன் தற்போதும் இங்கு வந்து அவர்களுக்கு வாங்கி கொடுப்பதாக கூறுகிறார் சுரேஷ் பாபு. தொடர்ந்து இவர்களின் கடை போண்டாவின் ருசி அறிந்தவர்கள் மற்றவர்களுக்கும் சொல்ல மேற்கு வங்கம், ஆந்திரா, கேரளா என திருச்சி வரும் பலர் இவர் கடையில் ஆஜராகிவிட்டே செல்கின்றனர். மாலை நான்கு மணியில் ஆரம்பித்து, இரவு பதினோரு மணி வரை இயங்கும் இவர் கடையில் இவருடன் ஒருவர் மட்டுமே உதவிக்கு இருக்கிறார். காலையில் இருந்து, பொடி அரைப்பது, கடலை பருப்பை அரைத்து மாவாக்குவது, பண்ணைக்கு சென்று முட்டை எடுப்பது, அதனை சுத்தம் செய்து வேக வைப்பது என வேலை ஆரம்பித்துவிடுகிறது.
எண்ணெய் பலகாரங்களை தவிர்க்க நினைத்தாலும், என்றாவது ஒரு நாள் சாப்பிடுவோமே என தோன்றும் நேரத்தில் இதுபோன்ற ஆரோக்கியத்தில் அக்கறை காட்டும் கடைகளை தேடி செல்லலாம்.
எப்படியும் ஒருமுறை ருசித்தால் மீண்டும் மீண்டும் உங்களை தானாகவே வரவைத்துவிடும் 'பெஸ்ட் முட்டை போண்டா'வின் சுவை!
source https://www.vikatan.com/food/food/trichy-best-muttai-bonda-shops-healthy-and-mouth-watering-bondas
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக