Ad

சனி, 27 நவம்பர், 2021

Doctor Vikatan: பனிக்காலத்தில் படுத்தும் பாதவெடிப்பு; நிரந்தர தீர்வு கிடையாதா?

என் வயது 35, உள்ளங்கைகளிலும் பாதங்களிலும் வெடிப்பு அதிகமாக உள்ளது. ஏதேதோ ஆயின்மென்ட்டுகள் உபயோகித்துப் பார்த்தும் பலனில்லை. குளிர்காலம் வந்தால் வெடிப்பு அதிகமாகி, ரத்தம் வரும். இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடையாதா?

- சுமித் (விகடன் இணையத்திலிருந்து)

சரும மருத்துவர் கிருத்திகா ரவீந்திரன்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் கிருத்திகா ரவீந்திரன்.

``நம் உடல் சருமத்தைவிட உள்ளங்கை மற்றும் பாதங்களில் உள்ள சருமம் சற்று அழுத்தமாக இருக்கும். தரையில் நடக்கவும், கைகளை உபயோகித்து வேலைகள் செய்யவும் ஏற்றவகையில் இயற்கையே அப்படி அந்தப் பகுதிகளில் தடித்த சருமத்தைக் கொடுத்திருக்கிறது. பொதுவாக சருமத்தின் இறந்த செல்கள் 28 நாள்களுக்கு ஒருமுறை உதிர்ந்து, புதிய செல்கள் உருவாகும்.

பாதங்களிலும் இப்படித்தான். பாதங்களில் உள்ள சருமம் சற்று தடிமனானது என்பதால் அங்குள்ள செல்களும் சற்று தடித்தே உருவாகும். அதற்குப் பெயர் கேலஸ் (Callus). பொதுவாகவே சருமத்தை வறண்டுபோகவிடாமல் ஈரப்பதத்துடன் வைத்திருக்க வேண்டும். உள்ளங்கைகள் மற்றும் பாதங்களில் உள்ள சருமமும் அப்படித்தான்.

Also Read: Doctor Vikatan: மழைக்காலத்தில் பழங்கள் சாப்பிடலாமா?

இந்தப் பகுதியில் உள்ள சருமம் தடிமனாக இருப்பதால், சருமம் வறண்டு போனாலோ, வானிலையில் ஏற்படும் மாற்றங்களாலோ, வேறு மருத்துவ சிகிச்சைகள் காரணமாகவோ, வெறும் கால்களில் நடந்தாலோ, சருமத்தைச் சரியாகப் பராமரிக்காவிட்டாலோ கைகளும் பாதங்களும் அழுத்தப்படும்போது அந்தப் பகுதி சருமம் வெடிக்கும். அதனால் இன்ஃபெக்ஷன் வரலாம். ரத்தம் கசியலாம். சருமத்தின் அதீத வறட்சியும் பராமரிப்பின்மையுமே பிரதான காரணங்கள்.

குளிர்காலத்தில் சருமம் வறண்டுபோகும். தாகம் எடுக்காது என்பதால் அதிகம் தண்ணீர் குடிக்க மாட்டோம். அதனாலும் வெடிப்பு வரலாம். கால்களை மூடாதபடியான காலணிகள் அணிவதும் ஒரு காரணம். வெடிப்பு இருந்தால் முதல் வேலையாக இறந்த செல்களை சுத்தம் செய்ய வேண்டும்.

Foot (Representational Image)

Also Read: Doctor Vikatan: டை அடித்தால் சருமம் கறுத்துப்போகுமா?

வீட்டிலேயே வெதுவெதுப்பான நீரில் கால்களை ஊறவைத்து, பியூமைஸ் ஸ்டோனால் இறந்த செல்களைத் தேய்த்து அகற்றலாம். யூரியா மற்றும் சாலிசிலிக் அமிலம் கலந்த க்ரீம்கள் உபயோகித்தும் இறந்த செல்களை அகற்றலாம். சருமத்தை வறண்டுபோக விடாமல் திக்கான மாயிஸ்ச்சரைசர் உபயோகிக்க வேண்டும். சிலர் மாயிஸ்ச்சரைசர் தடவிக்கொண்டு அதன் மேல் சாக்ஸ் அணிவார்கள். அதுவும் பலனளிக்கும். தேங்காய் எண்ணெய் தடவுவதுகூட சரும வறட்சியைப் போக்கும்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?


source https://www.vikatan.com/health/healthy/how-to-ged-rid-of-palm-crack-and-foot-crack

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக