மழைக்காலத்தில் தொற்றுநோய்களிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?
- முகேஷ் (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி.
``தொற்றை ஏற்படுத்தும் விஷயங்களிலிருந்து விலகி இருப்பதுதான் முதல் தீர்வு. நம் மக்களிடம் விசித்திரமான ஒரு வழக்கத்தைப் பார்க்கலாம். ரயிலிலோ, பஸ்ஸிலோ பயணம் செய்யும்போது இருவர் உட்காரும் இடத்தில் மூன்றாவதாக ஒருவர் வந்து உட்கார்வார். வீட்டில்கூட சோஃபாவில் உட்கார்ந்து டி.வி பார்க்கும் அம்மா-அப்பாவுக்கு நடுவில் வந்துதான் குழந்தை உட்காரும். இவர்களில் யாராவது ஒருவருக்கு உடல்நலம் பாதித்தால்கூட, சளித்தொற்று வந்தால்கூட குடும்பத்திலுள்ள அனைவரையும் பாதிக்கும். வீட்டிலோ, வேலையிடத்திலோ யாருக்காவது உடல்நலம் சரியில்லாவிட்டால் முதலில் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். சாப்பிடுவது, தூங்குவது என எல்லா விஷயங்களுக்கும் இது பொருந்தும்.
Also Read: Doctor Vikatan: மழைக்காலத்தில் பழங்கள் சாப்பிடலாமா?
வீட்டிலுள்ள குழந்தைகள் வெளியே சென்றுவிட்டு, நேரே தாத்தா-பாட்டி பக்கத்திலோ, மடியிலோ வந்து உட்கார்வார்கள். குழந்தைகளுக்கு உடல்நலம் பாதித்திருக்கும்போது, அது அந்த வீட்டின் முதியவர்களையும் பாதிக்கும். குழந்தைகளுக்கு அந்த பாதிப்பு ஒன்றிரண்டு நாள்களில் சரியாகிவிடும்.
முதியவர்களுக்கு மெதுவாக பாதிக்கும். எனவே வீட்டில் வயதானவர்களோ, இணைநோய்கள் உள்ளவர்களோ இருந்தால் குழந்தைகளும், இள வயதினரும் உடல்நலம் சரியில்லாத நிலையில் இடைவெளியை நிச்சயம் பின்பற்ற வேண்டும். பெரியவர்களைத் தனி அறையில் வைக்க வேண்டும். குறிப்பாக இதுபோன்ற பருவ காலங்களில் பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையில் இடைவெளி அவசியம் பின்பற்றப்பட வேண்டும். இதனால் காற்றின் மூலம் பரவும் தொற்றும், தொடுதல் மூலம் பரவும் தொற்றும் தவிர்க்கப்படும்.
அடுத்ததாக கொசுக்களிடமிருந்து விலகி இருப்பது. டெங்கு பாதிப்பு மிக அதிகமாகக் காணப்படும் காலம் இது. கொசுக்களின் மூலம் மலேரியாவும் பரவலாம். நோயைப் பரப்பும் கொசுக்கள் நம்மைச் சுற்றித்தான் காணப்படுகின்றன. நம் வீட்டினுள் ஏசியிலிருந்து வெளியேறும் தண்ணீர், ஃப்ரிட்ஜிலிருந்து வெளியேறும் தண்ணீர், வீட்டைச் சுற்றிலும் தேங்காய் ஓட்டிலும் தொட்டிகளிலும் தேங்கியிருக்கும் தண்ணீர் போன்றவற்றில் கொசுக்கள் பல்கிப் பெருகும். எனவே வீட்டுக்குள்ளேயும் வீட்டைச் சுற்றிலும் எங்கும் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
`ஊரே வெள்ளத்தில் மிதக்கிறது... இந்த நிலையில் தண்ணீர் தேங்காமல் எப்படிப் பார்த்துக்கொள்வது?' என்ற கேள்வி எழலாம். அசையாத தண்ணீரில்தான் டெங்கு கொசுக்கள் பரவும். சாலையில் தேங்கியிருக்கும் தண்ணீரில் யாராவது நடந்தாலோ, வாகனங்கள் சென்றாலோ அந்தத் தண்ணீர் அசையும். அதில் கொசுக்கள் தங்காது. வெள்ள நீரில் டெங்கு கொசுக்கள் அடித்துச்செல்லப்படும்.
மூன்றாவதாக நம் உணவும் தண்ணீரும் மாசுபட்டுப் போவது. தண்ணீரை, குறைந்தது 3 நிமிடங்களுக்காவது கொதிக்கவைத்துப் பயன்படுத்த வேண்டும். நம்மிடம் கடந்த சில வருடங்களாக கேன் வாட்டர் கலாசாரம் பெருகிவருகிறது. கேன்களில் வாங்கும் தண்ணீர் எல்லாமே சுத்தமானது என்று அர்த்தமில்லை. அதிலும் மாசு கலந்திருக்க வாய்ப்புகள் அதிகம். எனவே அந்தத் தண்ணீரையும் 3 நிமிடங்கள் கொதிக்கவைத்தே பயன்படுத்த வேண்டும்.
Also Read: Doctor Vikatan: பனிக்காலத்தில் படுத்தும் பாதவெடிப்பு; நிரந்தர தீர்வு கிடையாதா?
இன்னும் சொல்லப்போனால் அந்தக் காலத்தில் செய்ததுபோல பெரிய அண்டாவில் தண்ணீரை சூடுபடுத்தி நாள் முழுவதும் உபயோகிப்பது மிகச் சிறந்த வழக்கம். பாலையும் நன்கு கொதிக்கவைத்துப் பயன்படுத்த வேண்டும். காய்கறிகளை நன்கு தோல்சீவி, கழுவி முழுமையாக வேகவைத்துச் சாப்பிட வேண்டும். பழங்களையும் நன்றாகக் கழுவி, தோல் சீவிப் பயன்படுத்த வேண்டும். வீட்டில் அவ்வப்போது சூடாக, ஃப்ரெஷ்ஷாக சமைத்துச் சாப்பிடுவது சிறந்தது. வெளி உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
இவற்றையெல்லாம் முறையாகப் பின்பற்றினாலே தொற்றுநோய்களிலிருந்து விலகி இருக்கலாம்."
உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
source https://www.vikatan.com/health/healthy/how-to-get-rid-of-communicable-diseases-during-rainy-season
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக