திருச்சி மாநகரில் கடந்த சில தினங்களாகப் பெரிய அளவில் மழை பெய்யா விட்டாலும், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களிலிருக்கும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் வெள்ள நீர் குடியிருப்புகளைச் சூழ்ந்திருக்கின்றது. அதனால், திருச்சி மாநகர் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
வெள்ளி, சனிக்கிழமைகளில் திருச்சி மாநகரில் சராசரியாக 34 மில்லிமீட்டர் மழை மட்டுமே பதிவாகியிருக்கிறது. இருப்பினும், கருமண்டபம், பிராட்டியூர், தீரன் நகர், வயலூர் சாலை, குழுமணி சாலை, உறையூர் உள்ளிட்ட பல பகுதிகள் நீரில் மூழ்கியிருக்கின்றன. இதனால் தண்ணீர் தேங்கி நின்ற பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. திருச்சி குடமுருட்டி ஆற்றில் சனிக்கிழமை மாலை நிலவரப்படி சுமார் 25,000 கன அடியாக நீர்வரத்து இருப்பதால், உறையூர் மற்றும் வயலூர் சாலையின் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. முட்டியளவு தேங்கியிருக்கும் தண்ணீரில் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். கூடவே தங்கள் இரண்டு, நான்கு சக்கர வாகனங்களைச் சாலைகளில் நிறுத்தி வைத்திருக்கின்றனர். தொடர்ந்து வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தீயணைப்புத் துறையினர் பரிசல் மூலமாக மக்களை மீட்டுப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து வருகின்றனர்.
அதேபோல, திருச்சி புறநகரிலிருக்கும் கோரையாற்றில் பஞ்சாப்பூர் அருகே உடைப்பு ஏற்பட்டிருப்பதால் அங்கிருக்கும் மக்களும் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டு தவித்து வருகின்றனர்.
வெள்ளம் சூழ்ந்து காணப்படும் பகுதிகளில், நீரைவெளியேற்றும் பணிகளை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் முழு முனைப்புடன் மேற்கொண்டு வருகின்றன.
Also Read: இரண்டாவது நாளாக திருச்சியில் வெளுத்துவாங்கிய மழை…! தடுமாறும் திருச்சி மாநகராட்சி
source https://www.vikatan.com/news/tamilnadu/trichy-corporation-areas-flooded-because-of-rain
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக