பாவனி ஆர்மிக்காரர்களின் காதுகளில் பயங்கரமாக புகைவரக்கூடிய அளவிற்கு ஒரு கேள்வியை ராஜூ கேட்டு விட்டார். அது மெளன சூறாவளியாக மாறி பிக்பாஸ் வீட்டைச் சுற்றி வந்தது. அபினய் மற்றும் பாவனிமீது ராஜூவிற்கு ஆயிரம் உள்குத்து புகைச்சல்கள் இருந்திருக்கலாம். ஆனால் அந்தத் தருணத்தில் அவர் விளையாட்டாக கேட்டது போல்தான் தெரிந்தது. உள்நோக்கம் ஏதும் இருந்தது போல் தெரியவில்லை. என்றாலும் கேட்ட கேள்வியும் இடமும் சரியில்லை. நிச்சயம் இது மகா தவறு.
ஒருவேளை ராஜூ விளையாட்டாகக் கேட்டிருந்தாலும் உடனே தன் தவறை உணர்ந்து சம்பந்தப்பட்டவர்களிடம் மனமார மன்னிப்பு கேட்டிருந்தால் அவரின் கிராஃப் உயர்ந்திருக்கும். மாறாக இத்தனை அநாவசிய வியாக்கியானங்களைத் தந்த பிறகு வருந்தியிருக்க வேண்டாம். இதே சமயத்தில் இந்த விவகாரத்தை பாவனியும் அபினய்யும் முதிர்ச்சியாக கையாண்ட விதம் அழகு. பிரியங்கா ஒரு பக்கம் பற்ற வைத்து, இன்னொரு பக்கம் அணைத்து விளையாடும் முயற்சியில் ஈடுபட்டாலும்கூட அவற்றையும் தாண்டி அவர்கள் சிறப்பாகக் கையாண்டார்கள்.
இந்த வார பஞ்சாயத்து நாளில்.. கமல்.. மன்னிக்க.. ரம்யா கிருஷ்ணன் இது பற்றி விசாரிப்பாரா அல்லது நாகரிகம் கருதி அப்படியே விட்டு விடுவாரா என்று பார்க்க வேண்டும். இரண்டாவது தேர்வுதான் சரியானது. ஏனெனில் இது விளையாட்டு என்பதைத் தாண்டி போட்டியாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான விஷயம். அந்த எல்லையை பிக்பாஸ் எப்போதும் மீறக் கூடாது.
எபிசோட் 55-ல் என்ன நடந்தது?
“மச்சி.. ஓப்பன் த பாட்டில்” என்கிற ரகளையான பாடலோடு பொழுது விடிந்தது. அமீர் அப்போது களத்தில் இருந்தாலும்கூட கூட்டு நடனத்தில் உயிர் இல்லை. பாட்டரி தீர்ந்து போன பொம்மைகள் போல டொங்கலாக ஆடிக் கொண்டிருந்தார்கள். ‘இப்போது எத்தனை ஆண் போட்டியாளர்கள், பெண் போட்டியாளர்கள்?’ என்று பிக்பாஸ் வீட்டின் தற்போதைய சென்ஸஸ் நிலவரம் குறித்து அபினய் கணக்கு எடுத்துக் கொண்டிருந்தார். ‘நான் வந்திருப்பதில் சிலருக்கு காண்டாகியிருக்கலாம். இருந்தாலும் பாவனையுடன் சிரித்து என்பதை வரவேற்றார்கள்’ என்பதை சஞ்சீவ் நடித்துக் காட்டியது சுவாரஸ்யம்.
முதலில் அப்பாவித்தனமான முகத்துடன் ஆரம்பித்து பிறகு வாழைப்பழ ஊசிகளை நேரடியாக இறக்கும் தாமரையின் ‘கண்ணாடி டாஸ்க்’ சாகசங்களைப் பற்றி இமான் கிண்டல் செய்து கொண்டிருந்த காட்சி ரசிக்கத்தக்கதாக இருந்தது. ‘நான் வளர்கிறேனே மம்மி’ என்று பிக்பாஸ் வீட்டின் முதல் நாளில் இருந்து தாமரை அகமும் புறமுமாக வளர்ந்து வருவதை நாம் தொடர்ந்து கவனிப்பது ஒரு சுவாரஸ்யான விஷயம். ஒரு புதிய சூழல் ஒரு மனிதரை எவ்வாறெல்லாம் மாற்றுகிறது என்பதற்கு தாமரையின் கேரக்டர் மாற்றம் ஒரு கச்சிதமான உதாரணம்.
Also Read: பிக்பாஸ்: கமலுக்கு பதிலாக ரம்யாகிருஷ்ணண் ஏன்? கடைசி நேரத்தில் மாறிய ப்ளான்!
லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் மூன்று சிறந்த பங்களிப்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் சிபியின் பெயர் பலமுறை அடிபட்டதில் ஆச்சரியமில்லை. ‘கண்டிப்பான வார்டன்’ என்கிற கேரக்ட்டரில் ஆரம்பத்தில் சற்று சிரித்து தடுமாறினாலும் பிக்பாஸின் கண்டிப்பிற்கு சுதாரித்துக் கொண்ட அவர் தன் பணியைச் சிறப்பாகச் செய்தார். குறிப்பாக ‘பிடிவாதக் குழந்தை’ அக்ஷராவை அவர் கையாண்ட விதம் கச்சிதம். ‘திருத்தப்படும் நோக்கில் சேர்க்கப்பட்டிருந்தாலும் மாணவர்கள் இன்னமும் சேட்டை மிகுந்தவர்களாகவே இருக்கிறார்’ என்கிற டாஸ்க் விதியை மிகச்சரியாக பின்பற்றியவர் பிரியங்கா. அந்த அளவிற்கு சிபியை காண்டாக்கினார். நள்ளிரவு ரகசிய சதிகளைச் செய்து மாணவக் குறும்பை க்யூட்டாக கையாண்டவர் ஐக்கி.
நிறைய பேர் இமானைக் குறிப்பிட்டார்கள். ‘தாம்ஸ்.. தாம்ஸ்..’ என்று அழைத்து தாமரையுடன் அவர் அடித்த லூட்டிகள், ‘மானங்கெட்டவனே’ என்று ராஜூவைப் பார்த்து வசனம் பேசியது ஆகிவற்றைத் தவிர்த்து இமான் தொடர்பான காட்சிகள் அதிகம் காட்டப்படவில்லை. (மெயின் எபிசோடில்). எனில் இதில் காட்டப்படாத காட்சிகளில் அவர் பட்டையைக் கிளப்பியிருக்கிறார் போல.
நேற்றைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தபடி ராஜூவை மாணவராகப் போட்டிருந்தால் அவரும் இமானுடன் கூட்டணி அமைத்து இன்னமும் பல கலாட்டாக்களை நிகழ்த்தியிருக்கக்கூடும். சிறந்த பங்கேற்பாளராக ‘இமானை’ குறிப்பிட்ட பிரியங்கா, “அண்ணாச்சி செய்த காதல்" என்று போகிற போக்கில் குறிப்பிட்டது சர்ச்சையாகவில்லை. அது காமெடி என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தது. Best performer வரிசையில் அபிஷேக்கின் பெயரும் அதிகம் அடிபட்டது. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளும் நமக்கு அதிகம் காண்பிக்கப்படவில்லை. வாக்கெடுப்பின் இறுதியில் ‘சிபி, இமான், அபிஷேக்’ ஆகிய மூவரும் சிறந்த பங்கேற்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். (அபிஷேக்கிற்குப் பதிலாக பிரியங்கா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம் என்பது என் சாய்ஸ்).
அடுத்ததாக ‘மோசமான பங்கேற்பாளர்’ என்னும் வாக்கெடுப்பு. இதில் இருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த தலைப்பைக் கேட்ட அடுத்த நிமிடமே அக்ஷராவின் பெயர் பலரின் மனதில் வந்திருக்கும். அந்த அளவிற்கு டாஸ்க்கில் இருந்து வெளியேறி ஆட்டத்தை சொதப்பியவர் அவர். எனவே அக்ஷராவின் பெயர் அதிகம் அடிபட்டதில் ஆச்சரியமில்லை. மற்றவர்கள் குறிப்பிடும் போதெல்லாம் வேறு வழியில்லாமல் முகத்தைச் சுளித்தபடி ஏற்றுக் கொண்ட அக்ஷரா, சிபி சொன்னவுடன் பதிலுக்கு வாக்குவாதம் செய்தார். ‘அழுமுஞ்சி’ என்று சொல்லப்பட்டது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
Worst performer கேட்டகிரியில் ‘நிரூப்பின் பெயர் அடிபட்டதும் நியாயமே. இத்தனை சமர்த்துப் பிள்ளையா என்று பலர் ஆச்சரியப்பட்டிருப்பார்கள். ‘நான் டாஸ்க்கை சரியா புரிஞ்சுக்கலே’ என்று பின்னர் சிறையில் அமீரிடம் வாக்குமூலம் தந்து கொண்டிருந்தார் நிரூப். அமீரின் பெயர் எல்லாம் வராமல் இருந்தால்தான் அது ஆச்சரியம்.
அந்த அளவிற்கு அவர் தலைமறைவாக இருந்தார். ‘Worst perfomer’ என்னும் இந்தக் கேட்டகிரியில் ‘ஒண்ணுமே குறும்பு பண்ணாம இருந்தார்” என்று அபினய்யைக் குறிப்பிட்டார் ராஜூ. அவருடைய காலணியில் அபினய்தான் கறை ஏற்படுத்தினார் என்பதை இன்னமுமா அவர் அறியாமல் இருப்பார்? அல்லது அந்தக் கோபம்தானா?. இந்த வாக்கெடுப்பின் இறுதியில் ‘நிரூப் மற்றும் அமீர்’ மோசமான பங்கேற்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறைக்குச் சென்றார்கள். (நல்லவேளை அக்ஷராவின் தலை தப்பியது. இல்லையென்றால் பாதாளச் சிறை, பாதாளக் கிணறாக மாறி கண்ணீரில் மூழ்கியிருக்கும்).
“மறுபடியும் என்னையே அனுப்பறீங்களேடா” என்று புலம்பியபடி சிறைக்குச் சென்றார் நிரூப். கூடவே அமீர். சிறைக்குச் சென்ற இரண்டு தேசத்தலைவர்களும் உரையாடலில் ஈடுபட்டார்கள். “வந்த ரெண்டு நாள்ல சிலரைப் பத்தி நல்லா புரிஞ்சுக்கிட்டேன். அபிஷேக் எல்லாத்துலயும் உள்ளே பூந்து காண்டாக்கறாரு. தாமரை அப்படியொண்ணும் அப்பாவி இல்ல. ரொம்ப கிளவர்” என்றார் அமீர். (இதையே இப்பத்தான் கண்டுபிடிக்கறீங்களா டான்ஸ் மாஸ்டர்?!).
லக்ஸரி பட்ஜெட் பொருட்களை புதுமையான விதத்தில் விநியோகிக்க தீர்மானித்தார் பிக்பாஸ். கார்டன் ஏரியாவில் 60 பலூன்கள் இருக்கும். அதில் இருபது காலியான பலூன்கள். மீதமுள்ளவற்றில் பொருட்கள் எழுதப்பட்டிருக்கும். போட்டியாளர் இரண்டு வாய்ப்பில் அம்பு எறிந்து எந்த பலூனை உடைக்கிறாரோ, அந்தப் பொருள் அவருக்கு கிடைக்கும்.
இதில் பலர் சொதப்பினார்கள். அபிஷேக் நண்டு மற்றும் சிக்கனை அள்ளினார். ராஜூவிற்கு தேன் கிடைத்தது. அக்ஷரா பிட்ஸா வென்றவுடன் மாநிலத்தில் முதல் இடம் பெற்ற பள்ளி மாணவி மாதிரி உற்சாகப்பட்டார். ‘எந்த பலூனை அடிக்கணும் சொல்லுங்க” என்று அம்பு எறிதலில் சாதனை புரிந்தவர் மாதிரி பில்டப் தந்த சிபி எதையும் சாதிக்கவில்லை. சஞ்சீவ் ஆவேசமாக எறிந்த அம்பு சன்டிவி அலுவலகத்திலேயே சென்று விழுந்திருக்கும் போல. சிறையில் இருந்த அமீர், “என்னங்கடா பண்றீங்க?” என்று இதை வேடிக்கை பார்த்தார். அவர் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த அலுமினியத் தட்டு சிறை பாணியிலேயே இருந்தது. (ஆர்ட் டிபார்ட்மெண்ட். ஆட்களே.. ஒரிஜினாலிட்டியை மெயின்டெயின் பண்றதுல பின்றீங்கப்பா!).
ஒரு அறிவிப்பை எப்படி வேகமாகவும் நிதானமாகவும் சொல்லலாம் என்பதற்கான டெமோவைக் காட்டிக் கொண்டிருந்தார் சஞ்சீவ். ‘Truth or dare’ என்கிற வில்லங்கமான டாஸ்க்கை தந்தார் பிக்பாஸ். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நிரூப்பும் அமீரும் இதில் வந்து இணைந்தார்கள்.
ஆட்டம் ஆரம்பித்தது. “உனக்கு யாரு மேல காண்டு இன்னமும் இருக்கு?” என்று சஞ்சீவ் வருணைக் கேட்டவுடன் ‘நிரூப்’ என்று சிரித்துக் கொண்டு வெளிப்படையாக பதில் அளித்தார். உருட்டப்பட்ட அந்தப் பாட்டில் மிகவும் குறும்பு பிடித்தது போல. இல்லையென்றால், அக்ஷராவை நோக்கி சிபியை கேள்வி கேட்க வைத்திருக்குமா? ஒரு மகத்தான குத்துச்சண்டை போட்டியை காணும் உற்சாகத்துடன் மக்கள் குதூகலமானார்கள். தான் சொல்வதை அக்ஷரா கேட்க மாட்டார் என்பது முன்பே சிபிக்குத் தெரியும். ‘Dare’ என்கிற வாய்ப்பை தேர்ந்தெடுத்தார் அக்ஷரா “ரெண்டு அழுக்குத் துணியை தோய்ச்சுட்டு வாங்க” என்று சிபி சொன்னவுடன் “முடியாது:” என்று அழும்பு செய்தார். இதற்குப் பெயர் dare-ஆ?
“இதுவரைக்கும் என்னைப் பத்தி தப்பா பேசியிருக்கீங்களா?” என்று அபினய்யை நோக்கி ராஜூ கேட்டார். “அப்படில்லாம் எதுவும் இல்லை” என்று மறுத்த அபினய் “கேள்வி சரியில்ல. வேற கேளு” என்பது போல் சொல்ல, சட்டென்று அந்த வில்லங்கமான கேள்வியைத் தூக்கிப் போட்டார் ராஜூ. “நீங்க பாவனியை லவ் பண்றீங்களா?”. இதைக் கேட்டதும் அபினய்யின் முகம் மாறியது. “என்ன கேள்வி இது?” என்பது போல் முகத்தைச் சுளித்தார். பாவனியின் முகமும் சங்கடத்திற்குப் போனது.
கட்டுரையின் துவக்கத்தில் சொன்னது போல ராஜூவிற்கு அபினய்யையும் பாவனியையும் ஏதோவொரு காரணத்தால் பிடிக்காமல் போயிருக்கலாம். ஆனால் இந்தத் தருணத்தில் அவர் சட்டென்று கேட்டது விளையாட்டு என்பது போல்தான் தோன்றியது. அவரின் முகபாவம் அப்படித்தான் இருந்தது. பிக்பாஸ் வீட்டுக்கு வந்த புதிதில் மெல்லிய பாலியல் நெடி வீசும் நகைச்சுவைகளை ராஜூ சொல்லிக் கொண்டிருந்தது நினைவில் இருக்கலாம். ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு தன்னைச் சுற்றி ஒரு இறுக்கமான வலையை ராஜூ பின்னிக் கொண்டார். அதிலிருந்து அவரின் உடல்மொழியும் பேசும் முறையும் மிக மிக உள்ளடங்கிப் போய் விட்டது. உணர்ச்சிகளை வெளிக்காட்டாத முறையில்தான் எப்போதும் பேசிக் கொண்டிருக்கிறார். தாமரை அல்லது இமான் போன்ற நெருக்கமானவர்களிடம் மட்டும்தான் அவரது அசல் முகம் சற்று வெளியே வரும். “ஒரு மீட்டரைப் பிடிச்சிட்டு விளையாடறான்” என்று அபிஷேக் சொன்னதும் இதைத்தான்.
வந்த சில நாட்களில் அபினய் தன்னிடம் பழகும் விதத்தைப் பார்த்து “உங்களுக்கு ஏதாவது ஃபிலீங்க்ஸ் இருக்கா? அந்த மாதிரி நான் ஏதாவது நடந்துக்கிட்டேனா?” என்று வெளிப்படையாகக் கேட்டு பாவனி தெளிவுப்படுத்திக் கொண்டது நல்ல விஷயம். அதிலிருந்து அவர்கள் இருவரும் நண்பர்களாக பழகுகிறார்கள். இந்த விஷயம் ராஜூவின் மனதில் தங்கி உறுத்திக் கொண்டிருந்திருக்கலாம். எனவேதான் இந்தச் சமயத்தில் ஒரு கேள்வியாக வெளியே வந்து விட்டது. ஒருவேளை நகைச்சுவை நோக்கில் ராஜூ கேட்டிருந்தாலும், தான் கேட்ட கேள்வி விவகாரமானது என்பதை உணர்ந்தவுடன் இருவரிடமும் சபையிலேயே மன்னிப்பு கேட்டிருந்தால் உயர்வாக இருந்திருக்கும் மாறாக “டாஸ்க்கில் தர்மசங்கடமான கேள்வியை கேட்கணும் இல்லையா.. அதான்” என்று அநாவசியமாக விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார். அவரிடம் இதே போல் யாராவது கேட்டிருந்தால் எப்படி எடுத்துக் கொண்டிருப்பார்?
“நீங்களும் நானும் தெளிவா இருக்கோம். நண்பர்களாத்தான் பழகறோம். ஆக்சுவலி என் மேல நீங்க இத்தனை அன்பு காட்டற அளவிற்கு நான் என்ன செஞ்சிட்டேன்னு தெரியல. வெளில போனா கூட உங்க கூட பிரெண்ட்ஷிப் தொடரலாம்” என்றெல்லாம் அபினய்யிடம் முதிர்ச்சியாக பேசிக் கொண்டிருந்தார் பாவனி. “ஆமாம்.. இந்த வீட்டில் எனக்கு எல்லோரையும் பிடிக்கும். ஐ லவ் பிரியங்கா. அதே மாதிரி ஐ லவ் பாவனி’ன்னு சொல்லியிருப்பேன்.. ஆனா ராஜு உள்நோக்கத்தோட கேட்ட மாதிரி இருந்தது. அவன் ஒரு கேம் பிளானோட இருக்கான். உன்னையும் என்னையும் தொடர்ந்து கார்னர் பண்றான்.. நான் அவனுக்கு என்ன பண்ணேன்னு தெரியல” என்று புகார் சொன்னார் அபினய். பாவனிக்குள்ளும் ஏதோ நெருடல் தெரிந்தாலும் அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தார்.
இந்த விவகாரம் அப்படியே அடங்கிப் போகாமல் வம்புப் புகையாக வீடு முழுவதும் சுற்றியது. “இருக்கு.. இல்லன்னு சொல்ல வேண்டியதுதானே.. அத விட்டுட்டு எனக்கும் குடும்பம் இருக்கு.. குட்டி இருக்குன்னு ஏன் விளக்கம் சொல்லணும்?.. பொழுதன்னிக்கும் அந்தப் புள்ள கிட்டதானே பேசிட்டு இருக்காரு’ என்று கிராமத்து பாணியில் அபினய் பற்றி வம்பு பேசினார் தாமரை. “அவங்க என்ன பேசறாங்கன்னு நமக்குத் தெரியாதுல்ல. இருந்தாலும் ராஜூ அப்படி கேட்டது ஷாக்கிங்கா இருக்கு” என்று நேர்மையான அபிப்ராயத்தை சொன்னார் ஐக்கி.
“ஒருவகைல ராஜூ அப்படி வெளிப்படையா கேட்டது கிரேட்தான்” என்று பாவனி தன்னையே சமாதானப்படுத்திக் கொள்ளும் நோக்கில் பிரியங்காவிடம் பாராட்ட “அதை அவன் தனியா கேட்டிருக்கணும். சபைல கேட்டது தப்பு” என்கிற சரியான பாயிண்ட்டைப் பிடித்தார் பிரியங்கா. இந்த விவகாரத்தில் பிரியங்காவின் சில கோணங்கள் சரி என்றாலும் ராஜூவை இதில் மாட்டி வைக்க முடியுமா என்று அவர் முயற்சித்ததைப் போலவே தெரிந்தது. இங்கொன்றும் அங்கொன்றுமாக சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் ராஜூ தன் தவறை உணர்ந்து வருந்திய போது “அவன் இன்னமும் பேசி பெரிசாக்கிட்டு இருக்கான். நீங்க பாட்டுக்கு இயல்பா இருங்க” என்று அபினய், பாவனியிடம் பிரியங்கா சொல்லிக் கொண்டிருந்தது ரசிக்கும்படியாக இல்லை.
வீடே இந்த விஷயம் பற்றி பேசிக் கொண்டிருந்த போது நேராக அபினய்யிடம் வந்த ராஜூ, முகத்தில் குற்றவுணர்வு பொங்க “நான் சொன்னது வருத்தமா?” என்று கேட்ட போது “அதெல்லாம் ஒண்ணுமில்ல. நாங்க வேற எதையோ பத்தி பேசிட்டு இருக்கோம்” என்று அபினய் மழுப்பியது அபத்தமானது. “ஆமாம். ராஜூ. நீ செய்தது வருத்தமாக இருக்கிறது” என்று நேரடியாக சொல்லியிருக்கலாம். மூவரும் அமர்ந்து தனியாகப் பேசி இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்கலாம்.
“அவனும் கல்யாணம் ஆனவன். இந்த கேள்வியோட அர்த்தம் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்னு தெரியாதா? அவனோட நோக்கம் தெரியும். உன்னையும் என்னையும் எப்படியாவது மாட்டி விடணும்னு பார்க்கறான். நம்மளத்தான் தொடர்ந்து நாமினேட் பண்றான். இதை அவனேதான் சொல்லிட்டு இருக்கான்” என்று பொருமிக் கொண்டிருந்தார் அபினய். இந்த விஷயத்தில் ராஜூ உள்நோக்கத்துடன் செயல்பட்டிருப்பார் என்று தோன்றவில்லை. “இதைப் பத்தி பேச விரும்பலை. அப்படியே விட்டுடலாம்” என்று கடைசியாக நிரூப்பிடம் அபினய் சொல்லிக் கொண்டிருந்தது நல்ல விஷயம். ஆனால் இத்துடன் இது அடங்குமா?
‘Truth or dare’ டாஸ்க்கில் பிரியங்காவை எதிர்த்து தாமரை துணிச்சலாக பேசிய காட்சிகள் அருமை. “எனக்குத் தலைவராகும் தகுதி இருக்கு.. இல்லைன்னு நீ சொல்லக்கூடாது. அதை நான்தான் முடிவு பண்ணணும்” என்றெல்லாம் அடித்து ஆடினார் தாமரையக்கா. ‘இந்த ஆட்டத்தில் நீடிக்க தகுதியற்றவர் யார்?” என்கிற வில்லங்கமான கேள்வியை நிரூப் ராஜூவிடம் கேட்க “நீ முதல்ல போயிடு” என்று ராஜூ அடித்த கவுன்ட்டர் சுவாரசியம். “வெளில யாரை மக்கள் கழுவி கழுவி ஊத்தறாங்க?” என்று வருண் கேட்டதற்கு ‘நிரூப்’ என்று அமீர் சொன்னதும் ஜெர்க் ஆனார் நிரூப். இது போன்ற உரையாடல்கள் போட்டியாளரின் மனதையும் செயல்பாடுகளையும் பாதிக்கலாம்.
‘ஐக்கி கூட நிரூப் பழகறது பிரியங்காவிற்குப் பிடிக்கலை’ என்கிற அபிப்ராயத்தை தாமரை சொல்ல (எங்களுக்கும் கொளுத்திப் போட தெரியும்) அதை வைத்து இருவரும் விளையாடினார்கள். பிரியங்காவின் கண்ணில் படுமாறு வேண்டுமென்றே இருவரும் பீட்ஸாவை ஊட்டிக் கொள்ள, பார்த்தும் பார்க்காதது மாதிரி இருந்த பிரியங்கா, பின்னர் அது பற்றி அபிஷேக்கிடம் புலம்பிக் கொண்டிருந்தார். “நீ அழுதா நான் தாங்க மாட்டேன்” என்று ‘அண்ணாத்தே’ அபிஷேக்காக மாறி பாசத்தைப் பிழிந்து கொண்டிருந்தார் அவர்.
இந்த வார பஞ்சாயத்து நாளை கமல் விசாரிக்க முடியாதது துரதிர்ஷ்டமான விஷயம். ஆனால் அவரின் வெற்றிடத்தை ரம்யா கிருஷ்ணனால் நிரப்ப முடியுமா? பார்த்து விடுவோம்.
அபினய்யிடம் ராஜூ கேட்ட கேள்வி பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கமென்ட் பாக்ஸில் வந்து சொல்லுங்கள்.
source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/article-about-biggboss-season-5-episode-55
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக