2021 மகளிர் சீனியர் நேஷனல்ஸ் கால்பந்து தொடரை அமர்க்களமாகத் தொடங்கியிருக்கிறது தமிழ்நாடு. தெலங்கானா அணியோடு நடந்த முதல் போட்டியில் 20 கோல்கள் அடித்து அசத்தியிருக்கிறார்கள் நம் பெண்கள்.
பெண்களுக்கான தேசிய அளவிலான மகளிர் கால்பந்து தொடர் கேரளாவில் நேற்று தொடங்கியது. 2018-ல் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு, அடுத்த 2 தொடர்களிலும் மூன்றாம் இடம் பிடித்து அசத்தியது. இந்த முறை மீண்டும் கோப்பை வெல்லும் லட்சியத்தோடு கடவுளின் தேசத்துக்குப் புறப்பட்டிருக்கிறார்கள் நம் வொண்டர் வுமன்கள்.
இந்துமதி, கார்த்திகா, சௌமியா, மாரியம்மாள் ஆகிய நால்வரும் இந்திய அணிக்காக விளையாடிக்கொண்டிருப்பதால், அந்த சூப்பர் ஸ்டார்கள் இல்லாதது ஒரு பலவீனமாகக் கருதப்பட்டது. ஆனால், அவர்கள் இல்லாவிட்டாலும் தாங்கள் சாம்பியன் மெட்டீரியல்தான் என்பதை முதல் போட்டியிலேயே நிரூபித்தும் காட்டியிருக்கிறது இந்த அணி. தெலங்கானாவுடனான முதல் போட்டியில் 20 கோல்கள் அடித்து மிரட்டியிருக்கிறார்கள். இதற்கு முன்புவரை ஒடிசாவும் ஆந்திராவும் அதிகபட்சமாக 9 கோல்கள் அடித்திருந்தன. அதைவிட இருமடங்கு அதிகமாக அடித்திருக்கிறது தமிழ்நாடு அணி.
எதிர்பார்த்ததைப் போலவே 4-4-2 ஃபார்மேஷனில் அணியைக் களமிறக்கினார் பயிற்சியாளர் கோகிலா. ஆட்டம் தொடங்கிய மூன்றாவது நிமிடத்திலேயே கோலடித்து, இந்த சீசனில் தமிழ்நாட்டின் கோல் கணக்கைத் தொடங்கிவைத்தார் மாளவிகா. இவர் 2018-ல் சாம்பியன் பட்டம் வென்ற அணியிலும் விளையாடியவர்! அடுத்த நிமிடத்திலேயே சந்தியா தன் கோல் கணக்கைத் தொடங்கினார். அனுபவ வீராங்கனையான சந்தியா, தமிழ்நாடு அணிக்காக விளையாடும் முதல் போட்டி இது.
ஃபார்வேர்ட்கள் சந்தியாவும் சரிதாவும் தெலங்கானா டிஃபன்ஸை நிலைகுலையவைக்க, விங்கில் இருந்து நடுகள வீரர்கள் பிரியதர்ஷினி, மாளவிகா ஆகியோரும் பெரும் குடைச்சல் கொடுத்தனர். தமிழ்நாடு அணியின் செயல்பாட்டுக்கு முன்னால் தெலங்கானா வீராங்கனைகளால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. முதல் 15 நிமிடங்கள் முடிவதற்குள்ளாகவே 4 கோல்கள் அடித்திருந்தது தமிழ்நாடு. அடுத்த 30 நிமிடங்களில் 4 அடிக்க, முதல் பாதி 8-0 என முடிவுக்கு வந்தது. சந்தியா அப்போது ஹாட்ரிக் கோல்கள் அடித்திருந்தார்.
முதல் பாதி மாஸ் என்றால், இரண்டாவது பாதி கொல மாஸ். இந்த பாதியில் 12 கோல்கள். சந்தியா மட்டும்தான் ஹாட்ரிக் அடிப்பாரா என்பதுபோல், மாளவிகா, சரிதா, துர்கா என எல்லோரும் அடுத்தடுத்து கோலடித்து தங்கள் பங்குக்கு ஹாட்ரிக் அடித்தனர். சரிதா 4 கோல்கள் அடித்தார். பிரியர்ஷினி 1 கோல் அடித்தார். 1 'ஓன் கோல்' வந்தது.
ஆனால், சந்தியாவோ இவர்களை விட இரு மடங்கு பாய்ந்து 8 கோல்கள் அடித்துக் குவித்திருக்கிறார். ஆம், 8 கோல்கள்! அதுவும் ஏற்கெனவே நொந்து போயிருந்த தெலங்கானா அணியை 88-90 நிமிடங்களுக்குள் 3 கோல்கள் அடித்து மேலும் காயப்படுத்தினார். இறுதியில் 20-0 என வென்று முதல் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது தமிழ்நாடு. அடுத்த போட்டியில் மேற்கு வங்கத்திற்கு எதிராக புதன்கிழமை களமிறங்குகிறது தமிழ்நாடு.
source https://sports.vikatan.com/football/tamil-nadu-thrashed-telangana-in-the-senior-womens-nationals-football-tournament
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக