அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீரங்க அரவப்பள்ளி (54). இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், அங்குள்ள மருந்து நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்தார். நியூஜெர்சி நகரில் தன் குடும்பத்தினருடன் வசித்துவந்த இவர், இரவு நேரங்களில் கேசினோவுக்குச் செல்வதை வாடிக்கையாக வைத்து இருந்திருக்கிறார். கடந்த வியாழக்கிழமை இரவு வழக்கம் போல, பெனிசில்வேனியா நகரில் உள்ள ஒரு கேசினோவுக்குச் சென்றிருக்கிறார். அப்போது, அந்த விளையாட்டில் ஸ்ரீரங்க அரவப்பள்ளி 10,000 அமெரிக்க டாலர்களை வென்றிருக்கிறார்.
இரவு முழுவதும் கேசினோவில் விளையாடி விட்டு, மறுநாள் காலை நியூ ஜெர்சியில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அப்போது, அவரை பின்தொடர்ந்த படி அவரின் வீட்டுக்குள் மர்மநபர் ஒருவர் நுழைந்திருக்கிறார். அந்த நபரைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஸ்ரீரங்க அரவப்பள்ளி கத்தி கூச்சலிட்டிருக்கிறார்.
ஆனால், வீட்டில் யாரும் இல்லாததால் அந்த மர்ம நபர் அவரை சுட்டுக் கொன்று விட்டு, கேசினோவில் அவர் வென்ற 10,000 டாலர்களைக் கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார். இந்த கொலை தொடர்பாகத் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், அரவப்பள்ளியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில், பெனிசில்வேனியாவின் நோரிஸ் டவுன் பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவர் ஸ்ரீரங்க அரவப்பள்ளியைக் கொலை செய்தது தெரியவந்தது. அதையடுத்து, அந்த இளைஞரைக் கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்திய வம்சாவளி ஒருவர் அமெரிக்காவில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஸ்ரீரங்க அரவப்பள்ளியின் மறைவுக்கு ஏராளமான இந்தியர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
source https://www.vikatan.com/news/crime/indian-descent-shot-dead-by-a-youngster-in-america
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக