Ad

திங்கள், 1 நவம்பர், 2021

நவம்பர் 1: மொழிவாரி மாநிலப் பிரிப்பில், தமிழ்நாடு இழந்த பகுதிகளைப் பற்றி தெரியுமா?!

இன்று நவம்பர் 1! மொழிவாரி மாநிலமாக தமிழ்நாடு உருப்பெற்ற நாள். 1956-ம் ஆண்டு, ஒன்றுபட்டிருந்த மதராஸ் மாகாணம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழகம் என மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. அந்தந்த மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதிகள் அந்தந்த மாநிலங்களோடு இணைக்கப்பட்டன. ஆனால், தமிழகம் மட்டும் தனக்கு தார்மிக உரிமையுடன் பெறவேண்டிய பல்வேறு பகுதிகளை மற்ற மாநிலங்களிடம் இழந்து நின்றது. அதாவது, சுமார் 70,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலானப் பகுதிகளை ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிடம் இழந்தது. அந்தப் பகுதிகளையும், அதனால் தமிழகம் இன்று சந்தித்துவரும் பிரச்னைகளையும் சுருக்கமாகப் பார்ப்போம்!

மொழிவாரி மாநிலங்கள்

ஆந்திராவிடம் இழந்த பகுதிகள்:

சுதந்திர இந்தியாவின் முதல் மொழிவாரி மாநிலமாக ஆந்திரா பிரிந்தபோது, தமிழகத்துக்குச் சொந்தமான 32,000 ச.கி.மீ. பரப்பளவிலான பகுதிகள் ஆந்திரா வசம் சென்றது. `மதராஸ் மனதே’ என்று சென்னையை ஆந்திராவின் தலைநகராக்க வேண்டும் எனக்கூறி அந்த மாநிலத்தினர் போராட்டம் நடத்தினர். அதை எதிர்த்து, ம.பொ.சி-யின் தமிழரசுக் கழகம், `தலையைக்கொடுத்தேனும் தலைநகரை மீட்போம்’ எனக் கூறி வடக்கெல்லை போராட்டத்தைத் தொடங்கினார்.

வடக்கெல்லைப் போராட்ட வீரர் சிலம்புச்செல்வர் ம.பொ.சி.

இறுதியில், சென்னை, திருத்தணி ஆகிய தாயகப்பகுதிகளை தமிழ் மாநிலம் தக்கவைத்துக்கொண்டது. ஆனால், சித்தூர், திருப்பதி, காளகஸ்தி போன்ற தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த நிலப்பகுதிகள் ஆந்திராவிடம் பறிபோயின. குறிப்பாக, சித்தூர் மாவட்டத்தில் 19,000 ச.கி.மீ. நிலப்பரப்பும், நெல்லூர் மாவட்டத்தில் 13,000 ச.கி.மீ. நிலபரப்பும் சேர்த்து மொத்தமாக 32,000 ச.கி.மீ பரப்பளவிலான பகுதிகளை தமிழ்நாடு, ஆந்திராவிடம் இழந்தது.

கண்டலேறு அணை - ஆந்திரா

இதனால், தமிழ்நாடு தனது நிலப்பரப்பை மட்டும் ஆந்திராவிடம் இழக்கவில்லை, வடபெண்ணையாறு, ஆரணியாறு, கண்டலேறு, பாலாறு முக்கியமான ஆறுகளின் நீர் உரிமையையும் தமிழ்நாடு இழந்து நிற்கிறது.

Also Read: தமிழ்நாடு நாள்: `நவம்பர் 1-ம் தேதியா.. ஜூலை 18-ம் தேதியா?!' - விகடன் #உங்கள்கருத்து முடிவுகள் என்ன?

கர்நாடகாவிடம் இழந்த பகுதிகள்:

தமிழகத்துக்குச் சேர வேண்டிய கொள்ளேகால், மாண்டியா, கொல்லங்கோடு வனப்பகுதி, பெங்களூர் தண்டுப்பகுதி முதலான பகுதிகளை கர்நாடகா மாநிலத்திடம் தமிழ்நாடு இழந்தது. அதேபோல், தமிழர்களின் இருப்பாலும், உழைப்பாலும் மின்னிய கோலார் தங்கவயல் பகுதியும் கர்நாடகத்திடம் பறிபோயின. இதனால், காவிரி நதிநீர், ஒகேனக்கல், மேக்கேதாட்டு போன்ற பல்வேறு பிரச்னைகளை தமிழ்நாடு இன்றளவும் சந்தித்து வருகிறது.

காவிரி ஆறு

கேரளாவிடம் இழந்த பகுதிகள்:

இதேபோல் கேரளாவிலும், தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றின்கரை, செங்கோட்டை வனப்பகுதி, பாலக்காடு வனப்பகுதி, நெடுமாங்காடு உள்ளிட்ட பல பகுதிகளை தமிழ்நாடு இழந்து நிற்கிறது. இன்னும் பலப்பகுதிகளை இழந்திருக்க வேண்டிய தமிழ்நாடு, மார்ஷல் நேசமணி, பி.எஸ்.மணி போன்ற தமிழகத் தலைவர்களின் தெற்கெல்லை போராட்டத்தால் தற்காத்துக்கொள்ளப்பட்டது.

தெற்கெல்லைப்போராட்ட வீரர் மார்ஷல் நேசமணி

குறிப்பாக, தோவாளை, அகஸ்தீவரம், கல்குளம், விளவங்கோடு ஆகிய வட்டங்களை உள்ளடக்கிய கன்னியாகுமரி மாவட்டமும், செங்கோட்டை நகர்ப்பகுதியையும் தமிழ்நாடு தக்கவைத்துக்கொண்டது. இந்த எல்லைப்போராட்டத்தினால் 36 தமிழர்கள் உயிர்த்தியாகம் செய்திருகின்றனர். திருவிதாங்கூர் அரசாங்கம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மட்டும் 11 தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்டனர்.

முல்லைப்பெரியாறு

இந்தப் பகுதிகளை கேரளாவிடம் தமிழ்நாடு இழந்த காரணத்தால் இன்றுவரை முல்லைப்பெரியாறு அணை தீர்க்கப்படாத மிகப்பெரிய பிரச்னையாக இருந்துவருகிறது. இதுமட்டுமல்லாமல் பம்பாறு, அட்டப்பாடி, சிறுவானி, சிறுவாணி, ஆழியாறு - பரம்பிக்குளம், பாண்டியாறு - புன்னம்பழா போன்ற நதிநீர்ச் சிக்கல்களையும் தமிழ்நாடு சந்தித்துவருகிறது. மேலும், தமிழ்நாட்டுக்குச் சொந்தமான பழம்பெருமைமிக்க கண்ணகி தேவி கோவிலும் கேரளாவில் தான் இருக்கிறது.

எல்லைப் போராளிகள்

இப்படியாக, தமிழ்நாடு மாநிலம் தனக்குச் சொந்தமான பல்வேறு பெரும்பகுதிகளை தனது அண்டைமாநிலங்களிடம் இழந்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1-ம் தேதி மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாளை `தமிழ்நாடு நாளாக' தமிழ் உணர்வாளர்கள் பெருமகிழ்ச்சியோடு கொண்டாடினாலும், இழந்தப் பகுதிகளை மீண்டும் தமிழ்நாட்டோடு இணைக்கவேண்டும் வருத்தம்கலந்த உரிமைக்குரலை எழுப்பிதான் வருகின்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/history-of-tamil-nadu-lost-lands-in-1956-states-reorganization-act

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக