'உங்களுக்குத் தெரிந்த ஓவியர் ஒருவரின் பெயரைச் சொல்லுங்கள்' என்று யாரைக் கேட்டாலும் பெரும்பாலானவர்கள் முதலில் குறிப்பிடும் பெயர் பிக்காஸோ!
பிக்காஸோவின் உலகம் தழுவிய புகழுக்கு என்ன காரணம்?
ஆரம்பக் காலங்களில் ஓவியங்களை அகலம் - நீளம் என்ற எல்லைகளுக்குள் மட்டும் - அதாவது Two Dimension-ல் மட்டுமே வரைந்து கொண்டிருந்தார்கள். மைக்கேல் ஏஞ்சலோவும், லியோனார்டோ டாவின்சியும் ஓவியங்களுக்கு ஆழம் கொடுத்து Three Dimension - எஃபெக்ட் கொடுக்க... ஓவியக் கலை ஒரு மிகப்பெரிய மாற்றம் அடைந்தது. இவர்கள் வாழ்ந்து மறைந்து பல நூற்றாண்டுகள் ஆன பிறகும்... ஓவியக் கலைக்கு யாராலுமே ஒரு புதிய திருப்பத்தைக் கொடுக்க முடியவில்லை. இன்னொருபுறம் காமிராவின் வருகை ஓவியங்களின் முக்கியத்துவத்தைக் குறைக்க ஆரம்பித்தது.
ஓவியர்கள் தாங்கள் பார்க்கும் காட்சிகளை என்னதான் தத்ரூபமாக வரைந்தாலும், போட்டோவின் வேகத்துக்கும், தரத்துக்கும் ஓவியர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. ஓவியக் கலை தனது முக்கியத்துவத்தை இழந்து விடுமோ என்ற அச்சம் முளைவிட ஆரம்பித்தது. அந்த சமயம் - அதாவது, 1907-ம் ஆண்டு - பிக்காஸோ வரைந்த Les Demoiselles d' Avignon என்ற ஐந்து பெண்களின் ஓவியம்... ஓவியக் கலைக்கு ஒரு மிகப்பெரிய திருப்பு முனையைக் கொடுத்தது.
- இது பிக்காஸோவின் கருத்து. இந்த அடிப்படையிலேயே அவர் ஓவியங்களை வரைந்தார்.
பிக்காஸோவின் இந்தப் புதிய முயற்சியை உலகம் எடுத்த எடுப்பிலேயே சிவப்புக் கம்பளம் விரித்து ஏற்றுக்கொள்ளவில்லை. பலமான எதிர்ப்புக் கிளம்பியது. அதே அளவுக்கு ஆதரவுக் கைதட்டல்களும் எழுந்தன. கம்பரின் பாடல்களுக்கு ஆள் ஆளுக்கு ஒரு அர்த்தம் சொல்வதைப் போல, பிக்காஸோவின் இந்த ஓவியத்தைப் பாராட்டியவர்கள் ஒவ்வொருவரும் ஒரு புது அர்த்தம் சொன்னார்கள். அப்போது பிக்காஸோ சொன்னார், "எந்த ஓவியராக இருந்தாலும், அதற்கு ஒரே ஒரு அர்த்தம் தான் உண்டு. அந்த அர்த்தம் அதை வரைந்த ஓவியன் கொடுத்த அர்த்தம் மட்டுமே!"
பிக்காஸோ இதே பாணியில் தொடர்ந்து ஓவியங்கள் வரைய... உலகம் இந்த ஓவிய ஸ்டைலுக்கு cubism என்று பெயர் கொடுத்தது. ஜியோமெண்ட்ரியின் கோட்பாடுகளைப் பிதிபலிக்கும் இந்த ஓவியக் கலை பிறகு ராக்கெட் வேகத்தில் வளர்ந்தது. இந்த நூற்றாண்டின், வியக்கத்தக்க விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டின் பிக்காஸோவின் ரசிகராக மாறினார். பிக்காஸோ அறிமுகப்படுத்திய இந்த ஸ்டைல் ஓவியம் காகிதத்தோடு நின்று விடவில்லை. பிற்காலத்தில் டி.வி., ஃப்ரிட்ஜ், வாட்டர் ஹீட்டர் போன்ற பல பொருட்களை டிஸைன் செய்வதற்கு இதுதான் அடிப்படையாக இருந்தது.
Also Read: `இவை எல்லாம் புரியத் தொடங்கிவிட்டால் நவீன ஓவியமும் புரியத் தொடங்கிவிடும்!' - பிகாசோ #HBDPicasso
க்யூபிஸம் என்ற மாடர்ன் ஆர்ட்தான் பிக்காஸோவுக்குப் புகழ் சேர்த்தது என்றாலும், மரபு ஓவியங்களை வரைவதிலும் பிக்காஸோ வல்லவராக இருந்தார். அதுமட்டுமல்ல, வான்கா ஆரம்பித்து வைத்த Expressionism-ல் ஆரம்பித்து Surrealism வரை அத்தனை ஸ்டைல்களிலும் இவர் நிபுணர். சிற்பம், செராமிக்ஸ், நாடக மேடை டிஸைன்... என்று ஆரம்பித்து நாடக நடிகர்களுக்கு காஸ்ட்யூம் வரை இவர் பல விஷயங்களைச் செய்வதில் கைதேர்ந்தவர்.
பிக்காஸோ பிறந்தது ஸ்பெயின் நாட்டில் என்றாலும், அவர் வாழ்க்கையின் பெரும்பகுதியைச் செலவிட்டது கலைகளின் தலைநகரான பாரீஸில்! தனது குடிமகனாக மாறச்சொல்லி பிரான்ஸ் பல முறை பிக்காஸோவைக் கேட்டுக்கொண்டது. ஆனால், தனது நாட்டின் மீது கொண்ட பற்றால் கடைசி வரை அவர் தனது குடியுரிமையை மாற்றிக் கொள்ளவில்லை.
1937-ம் ஆண்டு! இரண்டாம் உலகப் போர் அசுரவேகத்தில் நெருங்கிக் கொண்டிருந்த சமயம் அது.
சின்ன வயதில் ஓவியனாக வேண்டும் என்ற கனவுகளோடு வளர்ந்த ஹிட்லர்... "இது என்ன மாடர்ன் ஆர்ட்? பைத்தியக்காரன் கிறுக்கிய மாதிரி இருக்கிறது..!" என்று அவற்றைத் தடை செய்தார்.
இன்னொரு பக்கம் பிக்காஸோவின் தாய்நாடான ஸ்பெயின் நாட்டில் உள்நாட்டுப் போர் மூள... இடையிலே மூக்கை நுழைத்த ஹிட்லர் ஸ்பெயின் நாட்டின் கார்னிக்கா நகர் மீது குண்டு மழை பொழிந்தார். இதில் அந்நகரின் அத்தனை கட்டடங்களும் செங்கல் குவியலாக மாறின. மனிதர்கள் அத்தனை பேரும் பிரேதங்கள் ஆனார்கள்! அந்நகரைச் சுற்றி மரண ஓலம் கேட்டபடியே இருந்தது.
தன் தாய் நாட்டின் வேதனையை பிக்காஸோ கான்வாஸுக்கு இடம் பெயர்த்தார். இறந்து போனவர்களுக்காகத் தீட்டப்பட்ட அந்த ஓவியம் இறவா புகழ் பெற்றது. பிறகு ஹிட்லரின் நாஜி இஸத்தை எதிர்க்கும் சின்னமாகவே அந்த ஓவியம் மாறியது.
இரண்டாம் உலகப் போர் முடிவை நோக்கி நெருங்கிக் கொண்டிருந்த சமயம், பிக்காஸோ பிரான்ஸ் நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்.
அமைதி சம்பந்தமாக அந்தக் கட்சி நடத்திய பல சர்வதேசக் கூட்டங்களில் கலந்துகொண்டார். 1950-ம் ஆண்டு நடத்தப்பட்ட அமைதி மாநாட்டுக்காக அவர் அமைதியைப் புறாவாக உருவகப்படுத்தி ஓர் அடையாள ஓவியம் உருவாக்க... அதை மொத்த உலகமும் அமைதியின் சின்னமாக ஏற்றுக்கொண்டது.
(25.10.1998 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் இடம்பெற்ற `வாவ் 2000' பகுதியில் இருந்து...)
source https://www.vikatan.com/arts/pablo-picasso-brahma-of-modern-paintings
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக