தமிழக ஆளுநராக உள்ள ரவி, இரண்டு தினங்களுக்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடியுடன் நடத்திய சந்திப்பு பல்வேறு சந்தேகங்களை தமிழக அரசியல் களத்தில் எழுப்பியுள்ளது.
தமிழக ஆளுநராக ரவி பொறுப்பேற்ற பிறகு திமுக ஆட்சிக்கு எதிராக மத்திய அரசின் பிடி இறுகும் என்று பாஜக தரப்பில் செய்திகள் கசியவிடப்பட்டன. அதற்கு வலுசேர்ப்பது போல, பாஜகவின் மாநில தலைவராக உள்ள அண்ணாமலை திமுக அரசு மீதான புகார் பட்டியலுடன் ஆளுநரை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் நடந்துவரும் சட்டஒழுங்கு பிரச்னைகள் குறித்தும், திமுக அமைச்சர்கள் மீதான முறைகேடுகள் பற்றியும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் தான் பிரதமர் மோடியை டெல்லியில் சென்று சந்தித்தார் ரவி. பிரதமருடன் நடந்த இந்த சந்திப்பு குறித்து பாஜக வட்டாரத்தில் பேசியபோது, ``ஆளுநர் பிரதமரை சந்திப்பது அலுவல் ரீதியான சந்திப்பு என்று அறிவிக்கப்பட்டாலும் பல அரசியல் விவகாரங்களையும் இதில் பேசியிருக்கிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் நடந்துவரும் தி.மு.க ஆட்சியின் நடவடிக்கைகள் குறித்து சில விவரங்களையும், தமிழகத்தில் செயல்படும் மத்திய உளவுத்துறை ஆளுநருக்கு கொடுத்த ரிப்போர்ட் விவரங்களையும் பிரதமரிடம் காட்டியுள்ளார்.
அனைத்தையும் அமைதியாக கேட்டுக்கொண்ட பிரதமர், அ.தி.மு.க தரப்பு மீது நடந்துவரும் நடவடிக்கைகள் பற்றியும் சில விவரங்களை கேட்டுள்ளார். தி.மு.கவுக்கு எதிரான எந்த கருத்தையும் பிரதமரும் ஆளுநரிடம் தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது. இந்த சந்திப்பு முடிந்த பிறகு தமிழக நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பேச நினைத்தார் ஆளுநர்.
ஆனால் அமித் ஷா காஷ்மீர் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தால், அவரை சந்திக்க முடியவில்லை. அதன் தொடர்ச்சியாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் ஆளுநர் ரவி சந்தித்துள்ளார்.
அதே நேரம் பிரதமருடனான ஆளுநர் சந்திப்பை வைத்து தமிழக பாஜக தரப்பு, அண்ணாமலையின் தி.மு.க அரசு மீதான குற்றச்சாட்டுகளுக்கும், ஆளுநரின் டெல்லி பயணத்திற்கும் தொடர்பு உள்ளது என்கிறார்கள். ஆனால் ஆளுநர் தரப்பில், “ஒரு ஆளுநராக ஒரு மாநிலத்தின் நிலையை பற்றி மத்திய அரசிடம் ரிப்போர்ட் கொடுப்பது வழக்கம். அந்த நடைமுறையில் தான் இந்த சந்திப்பு நடந்தது. இதில் தேவையில்லாத அரசியல் எதற்கு?” என்கிறார்கள்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/background-story-on-governor-rnravi-pm-modi-meet
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக