2021 இருபத்தோராம் நூற்றாண்டின் மூன்றாவது தசாப்தம் தொடங்கியிருக்கிறது! உலக வல்லாதிக்க நாடுகள் பெரும்பாலும் கடலை நோக்கியே தனது அதிகாரத்தை நகர்த்திக்கொண்டிருக்கின்றன. போர்க்களம், போர்க்கடல் ஆகிவிட்டது. நிலப்பரப்பின் மீதிருந்த ஆட்சி அதிகாரம், நிலத்துக்கடியில் குறிவைக்கப்பட்ட கனிம வளங்கள், எல்லை விரிவாக்கம் என அனைத்தும் இப்போது கடற்பரப்பின் பக்கம் கைமாறிக்கொண்டிருக்கிறது. களம் மெல்ல மாறிவிட்டது என்பதை கண்முன்னே காட்டிக்கொண்டிருக்கிறது இந்தோ-பசிபிக் பெருங்கடல் பிராந்தியம். அதை மெல்ல உணர்த்துகிறது (AUKUS) ஆக்கஸ் ஒப்பந்தம்.
AUKUS கூட்டு ஒப்பந்தம்:
ஆக்கஸ் (AUKUS) என்பது ஆஸ்திரேலியா (AUS), இங்கிலாந்து (UK) அமெரிக்கா (US) ஆகிய மூன்று நாடுகளின் பெயர்ச் சுருக்கம். இந்தோ-பசிபிக் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்துவது, தங்களுக்குள் ராணுவ, தொழில்நுட்ப, உளவுத் தகவல்களைப் பறிமாற்றிக்கொள்வது போன்றவையே இதன் நோக்கம். கடந்த செப்.15-ம் தேதி வீடியோ கான்ப்ரன்ஸ் மூலமாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகிய மூவரும் ஒருமனதாகப் பேசி, AUKUS கூட்டறிக்கையை வெளியிட்டனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசும்போது, `` இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நீண்ட காலத்துக்கு அமைதியை நிலைநிறுத்தவேண்டியதன் அவசியத்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம். அந்த ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் விதமாக இந்த கூட்டமைப்பு இருக்கும்" என்றார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ``புவியியல் ரீதியில் பிரிந்திருந்தாலும், இந்த மூன்றுநாடுகளும் இயற்கையான கூட்டாளிகள் தான். இந்தோ-பசிபிக் பகுதியில் வளர்ந்துவரும் எங்கள் கூட்டணி, நாட்டு மக்களைப் பாதுகாக்கவும், நாட்டின் நலன்களையும் பேணிக்காக்கவும் அவசியமான ஒன்றாகிறது" என்றார்.
அதேசமயம் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ``ஆஸ்திரேலியாவின் படைத் திறனை மேம்படுத்தி அதைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும். இருப்பினும், அணுஆயுதமற்ற நாடாகவே ஆஸ்திரேலியா தொடரும்!" என்று தெரிவித்தார்.
மேலும் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், ``இந்தோ- பசிபிக் பிராந்தியம் பயங்கரவாத அச்சுறுத்தல்களைக் கொண்டதாக இருக்கிறது. இங்கு தீர்க்கப்படாத பல பிரச்னைகள் நீடித்திருப்பதால், எப்போதுவேண்டுமானாலும் மோதல் ஏற்படும் ஆபத்து நிறைந்த பகுதியாக இருக்கிறது. மேலும், சைபர்ஸ்பேஸ் (Cyberspace) போன்ற பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் அதிகமாக இருக்கிறது" என மூன்றுநாடுகளாலும் அடிக்கோடிட்டு காட்டப்பட்டது.
இந்தோ-பசிபிக் பெருங்கடலில் அப்படி என்ன இருக்கிறது?
அதிக வளம் இருக்கும் இடத்தில் ஆபத்து இருக்கும்:
உலகப் புவிசார் அரசியலின் மிகமுக்கிய நீர்ப்பகுதி, உலகின் இரண்டாவது மிகவும் பயன்படுத்தப்படும் கடல் வழிப்பாதை, உலக கடல்சார் உயிரிப்பன்மியத்தில் மூன்றில் ஒருபங்கைப் பெற்றிருக்கும் கடல்தொகுதி என இந்தோ-பசிபிக் பெருங்கடல் பல்வேறு நிலைகளில் ஏராளமான முக்கியத்துவம் பெற்ற பிராந்தியமாகத் திகழ்கிறது. உலகளாவிய வணிகக்கப்பல் சரக்குப்போக்குவரத்தில் 50%-க்கும் அதிகமாக நடைபெறும், சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த மலாக்கா, சுந்தா, லோம்பொக் போன்ற நீரிணைகளும் இந்தோ-பசிபிக் பெருங்கடலில் தான் இருக்கின்றன. இதுமட்டுமல்லாமல், கனிம வளங்களைப் பொறுத்தமட்டில், 28 பில்லியன் பீப்பாய்கள் அளவுக்கு பெட்ரோலியமும், 266 டிரில்லியன் கன அடிக்கு இயற்கை எரிவாயு வளங்களும் நிரம்ப இருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கின்றன.
சீனாவின் எதிர்ப்பு:
புவிசார் அரசியல், வணிகப்போக்குவரத்து, கனிம, பொருளாதார வளம், ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் இந்தோ-பசுபிக் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கிருது. எனவே ஆக்கஸ் ஒப்பந்தத்தை சீனா கடுமையாக எதிர்த்தது. குறிப்பாக ஆக்கஸ் ஒப்பந்தத்தின் மூலம், `அணுசக்தியில் இயங்கும் 8 நீர்மூழ்கிக் கப்பல்கள் (SSN) தயாரிக்கப்பட்டு அவை ஆஸ்திரேலியாவுக்கு வழங்கப்படும்' என்ற அறிவிப்பு சீனாவை மேலும் ஆத்திரப்படுத்தியது.
ஆஸ்திரேலியாவுக்கு சீனாவின் மிரட்டல்:
ஆக்கஸ் ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்த சீனா, ஆஸ்திரேலியாவுக்கு பகிரங்கமாக மிரட்டலும் விடுத்தது. சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ்,`` சீனாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே எந்தப் பகையும் இல்லை. ஆனால், சீனா-அமெரிக்க அரசியல் விளையாட்டில், ஆஸ்திரேலியா அமெரிக்காவைப் பின்பற்றுவதன் மூலம், தன்னை சீனாவின் எதிரியாகத் தானே மாற்றிக்கொண்டிருக்கிறது. சீனாவை இலக்காகக் கொண்ட அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதனால், சீனாவுடனான மோதலை இப்போது ஏற்படுத்தியிருக்கிறது. ஆஸ்திரேலியா அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் தாக்குதல் ஏவுகணைகளை வாங்கினால் அது சீனாவை அச்சுறுத்தும் என நினைக்க வேண்டாம். சீனாவை ராணுவ ரீதியாகவோ அல்லது ஏதேனும் காரணமாகவோ சீண்டத் துணிந்தால், சீனா இரக்கமின்றி தண்டணைக் கொடுக்கும்!" என எச்சரித்தது.
மேலும், இந்த விவகாரம் குறித்து பேசிய சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடா்பாளா் ஜாவோ லிஜியன், ``ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் அணுசக்தியால் இயங்கும் நீா்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கவிருக்கின்றன. இது இந்தோ-பசுபிக் பிராந்தியத்தின் அமைதிக்கு பாதிப்பையே ஏற்படுத்தும். ஆயுதப் போட்டியை அதிகரிக்கவே செய்யும். இந்த மூன்று நாடுகள் தங்களது சொந்த நலன்களை கெடுத்துக் கொள்ளதான் போகின்றன. ஆணு ஆயுதமற்ற நாடாக விளங்கும் ஆஸ்திரேலியா, ராணுவ நடவடிக்கைக்கு உதவும் அணுசக்தி நீா்மூழ்கிக் கப்பல்களை இறக்குமதி செய்யவிருப்பது, அதன் அணுஆயுதப் பரவல் தடுப்பு உறுதிப்பாட்டை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது" எனவும் விமர்ச்சித்தார்.
சீனாவின் கோவத்திற்கு என்ன காரணம்?:
சீனாவின் இந்த ஆத்திரத்திற்கு, இந்தோ-பசுபிக் பெருங்கடலில் அது செலுத்திவரும் ஆதிக்கமே முதன்மைக் காரணமாக இருக்கிறது. குறிப்பாக, தென்சீனக்கடல் பகுதியின் 35,00,000 ச.கி.மீ. பரப்பளவு மொத்தமும் தனக்கே உரிமை என்று சொந்தம் கொண்டாடுகிறது. பெருங்கடல் முழுவதும் பல செயற்கைத் தீவுகளை ஏற்படுத்தி ராணுவத்தளங்களை கட்டமைத்து வருகிறது. இதனால், இந்தோ-பசுபிக் பெருங்கடலில் இருக்கும் மலேசியா, தைவான், புருனே, பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற நாடுகளின் உரிமைகளைப்பறிப்பதோடு, தனது ராணுவ பலத்தின் மூலம் அச்சுறுத்தியும் வந்திருக்கிறது.
இதன்காரணமாகவே கடந்த 2020-ம் ஆண்டு, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த மைக் பாம்பியோ,``தென்சீனக் கடற்பகுதியிலிருக்கும் வளங்களைக் கைப்பற்றும் முனைப்பில் இப்படி சீனா செயல்படுவது, முழுக்க முழுக்க சட்ட விரோதமானது!" கடுமையாக கண்டனம் தெரிவித்தார்.
அதே ஆண்டு, அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகன் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது. 'சீன குடியரசின் ராணுவ மற்றும் பாதுகாப்பு முன்னேற்றங்கள்-2020' எனப் பெயரிடப்பட்ட அந்த அறிக்கையில், ``இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனா வேகமாக தனது ராணுவ, பொருளாதார செல்வாக்கை விரிவுபடுத்தி வருகிறது. இந்தோ- பசிபிக் பிராந்தியத்தில் இருக்கும் அமெரிக்காவின் நட்பு நாடுகளுடன் ஆயுத மோதலை தூண்டிவிட்டு, சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் தந்திரங்களைச் செய்கிறது. கடல்சார் வளங்கள், எண்ணெய் எரிவாயு வளங்கள் மிகுந்த பகுதிகளில் சீனா மற்ற நாடுகளுடன் மிகவும் கடுமையான போக்குடன் நடந்துகொள்கிறது. இது அந்த பிராந்தியத்தில் இருக்கும் நாடுகளுக்கு பெரும் கவலை ஏற்படுத்துகிறது" என தெளிவுபடுத்தியிருந்தது.
உலக நாடுகளின் அச்சம்:
இந்தோ-பசுபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் அமெரிக்காவின் தலையீட்டை சீனா ஒருபோதும் விரும்புவதில்லை. ஒவ்வொருமுறையும் சீனாவின் செயல்பாடு குறித்து அமெரிக்கா கருத்துதெரிவிக்கும்போதெல்லாம், அதனை மறுத்தும், கடுமையாக எதிர்த்துமே வந்திருக்கிறது. ஏற்கெனவே, இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, 2007-ம் ஆண்டில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் ஆகிய நான்குநாடுகளும் இணைந்து `க்வாட் (QUAD)' எனும் அமைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இருப்பினும் பூலோகரீதியில் அப்பிராந்தியத்தின் முக்கியப்புள்ளியாக இருக்கும் ஆஸ்திரேலியாவை மையப்படுத்தி, ஆக்கஸ் (AUKUS) என்ற கூட்டமைப்பை அமெரிக்காவும், பிரிட்டனும் ஏற்படுத்தியிருக்கிறது.
எனவே, சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்து உருவாகியிருக்கும் அமெரிக்காவின் இன்னுமொரு புதிய கூட்டமைப்பால், இரண்டு தரப்புக்கிடையிலும் பனிப்போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் போர்ப்பதற்றம் அதிகரிக்கும் சூழல் உருவாகியிருக்கிறது. உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடுகளான இவை எதிர்காலத்தில் மோதிக்கொண்டால், அது அனைத்து உலக நாடுகளையும் கடுமையாக பாதிக்கும், மாபெரும் பேரழிவு ஏற்பட வழிவகுக்கும் எனவும் உலக நாடுகள் அஞ்சி வருகின்றன.
ஆக்கஸ் கூட்டணியின் விளக்கம்:
இந்த நிலையில், `அமெரிக்காவுடன் தாங்கள் ஏற்படுத்தியிருக்கும் ஆக்கஸ் கூட்டணி குறித்து ஏராளமான அச்சங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. அவையனைத்தும் மிகைப்படுத்தப்பட்டவை' என இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் ஒருசேர தெரிவித்திருக்கின்றன.
கடந்த அக்டோபர் 21-ம் தேதி, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கிடையே வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் பேசிய இருநாடுகளும், `ஆக்கஸ் ஒப்பந்தத்தால் எங்களின் பிற நாடுகளுடனான நட்புறவு ஒருபோதும் பாதிக்காது. மேலும், உலகின் எந்தப் பகுதிக்கும் இந்த கூட்டணி அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என உறுதியாக தெரிவித்தன.
இருப்பினும், இந்த கூட்டணியால் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரிக்கும் என ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து அச்சம் தெரிவித்து வருகின்றன.
source https://www.vikatan.com/government-and-politics/international/aukus-uk-us-and-australia-pact-to-control-china-into-indo-pacific-region
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக