வெப்பமும் புழுக்கமும் நிறைந்திருக்கும் ஓர் அறையில் திடீரென்று இனிய ஆச்சரியமாக தென்றல் காற்று உள்ளே வந்தால் எப்படி இருக்கும்? பிக்பாஸ் வீடு நேற்று அப்படித்தான் இருந்தது. வன்மங்களும் விரோதங்களும் வினயங்களும் (இந்த வார்த்தைக்கு நன்றி தாமரை) நிறைந்து இறுக்கமாக இருந்த வீடு, ஒரு மாறுதலுக்கு சிரிப்பும் கேலியுமாக இருந்தது. குறிப்பாக ராஜூ செய்த மிமிக்ரியை இந்த எபிசோடின் ஹைலைட்டுகளில் ஒன்று எனலாம். அதகளம் செய்து விட்டார். நாணயம் தொடர்பாக பிக்பாஸ் தந்த டிவிஸ்ட்களும் நன்றாக இருந்தன.
ஆக மொத்தத்தில் நிகழ்ச்சி முடியும் போது நம் மனநிலை ஒரு மாதிரி ஜாலியாகவும் நேர்மறையாகவும் இருந்தது. வாரத்திற்கு இரண்டு நாளாவது இப்படி எபிசோட் அமையுமாறு பிக்பாஸ் எடிட்டிங் டீம் பிளான் செய்யலாம். எனில் இதற்குப் பார்வையாளர்கள் கூடுவார்கள்.
இந்த எபிசோட் மட்டுமல்ல, ஏறத்தாழ அனைத்து நாட்களின் நிகழ்ச்சியிலும் சில குறும்படங்கள் ஒளிந்திருப்பதை நீங்கள் கவனிக்கிறீர்களா? நாம் சரியாக கவனிக்காமல் கடந்து போகும் ஒரு சிறிய காட்சியின் தொடர்ச்சி,சில நிமிடங்களுக்குப் பிறகு இன்னொரு இடத்தில் தொடரும். இவற்றை கவனமாகப் பார்த்து தொகுத்துக் கொண்டால் நிகழ்ச்சியின் இறுதியில் உங்களுக்கு அந்தக் குறும்படங்கள் கிடைக்கும்.
எபிசோட் 20-ல் என்ன நடந்தது?
இதுவரை நமக்கு காட்டப்பட்ட மதுமிதாவிலிருந்து விலகி வேறு மாதிரியான உற்சாக மதுமிதாவை நேற்று பார்க்க முடிந்தது. தூங்குபவர்களின் முகங்களில் க்ரீம் தடவி விளையாடிக் கொண்டிருந்தார் அவர். “இந்தப் பிள்ளைப் பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்னு நெனக்கலையே’ என்பது போல ‘நிரூப்... இந்த நாளை உன் டைரில குறிச்சு வெச்சுக்கோ’ என்று மறுநாள் காலையில் பன்ச் டயலாக் எல்லாம் பேசிக் கொண்டிருந்தார் மதுமிதா. நிரூப்பின் உயரம் எட்டாமல் நாற்காலியில் ஏறி நின்று அவர் பேசியது இந்த டயலாக்கை காமெடியாக மாற்றியது.
‘பசி பசி...’ என்று நாள் பூராவும் அரற்றிக் கொண்டிருந்தார் பிரியங்கா. இவர் தொடர்பான குறும்படமானது ‘டார்க் ஹியூமருடன்’ கூடிய ஒரு ஆன்ட்டி கிளைமாக்ஸில் முடிந்தது. உணவு மீது பிரியங்காவுக்கு உள்ள பிரியத்தை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்தே பார்த்து வருகிறோம். விதம்விதமான உணவுகளை நன்கு சாப்பிட்டுப் பழகியவர்களுக்கு அது கிடைக்காத சூழல் ஏற்படும்போது கொலைவெறி ஆகி விடுவார்கள். உணவு குறித்த ஏக்கமும், கற்பனையும் அவர்களுக்குள் ஓடிக் கொண்டேயிருக்கும். இந்த ஏக்கம் வெறியாகவும் எரிச்சலாகவும் கழிவிரக்கமாகவும் பிரியங்காவிடம் வெளிப்பட்டதை இன்று பார்க்க முடிந்தது.
“கமல் பிறந்த நாள் வருது... அதையொட்டி நாம சாப்பாடு கேட்போம்” என்று இமான் அண்ணாச்சி காலையில் ஒரு சம்பவத்தை ஆரம்பித்து வைத்தார். மக்கள் தங்களுக்கு பிடித்த உணவுகளைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இந்தப் பட்டியலை கேட்கும் போதே பிரியங்காவுக்கு நல்ல உணவைச் சாப்பிடும் ஏக்கமானது மேலும் அதிகரித்து கொலைவெறியாகி விட்டிருக்கும் போலிருக்கிறது. ‘’பக்கெட் நிறைய ஐஸ்கிரீம், பர்கர் வேணும்” என்று தன் பேராசையை அப்போது வெளியிட்டார்.
அவருக்குப் பிடித்த தயிரில் ‘கொசு’ விழுந்து விட்டதால் அதையும் அவரால் சாப்பிட முடியவில்லை. “பசிக்குது. நல்ல சோறு வேணும்” என்று அரற்றிக் கொண்டிருந்த பிரியங்கா, அந்த ஏக்கம் தாங்காமல் ஒரு கட்டத்தில் அழுது விட்டார். ‘இதுக்கா அழுவாங்க?” என்று நமக்குத் தோன்றலாம். அந்த பாயின்ட் ஆஃப் வியூவில் இருந்து பார்த்தால்தான் புரியும். தன் தோளில் சாய்ந்து அழுத பிரியங்காவை சங்கடத்துடன் ஆறுதல் சொன்னார் இமான்.
‘பசிக்குது.. பசிக்குது..’ என்கிற பிரியங்காவிடம் அரற்றல் தொடர்ந்து கொண்டேயிருந்தது. ஒரு கட்டத்தில் “எனக்கு ரசம். உருளைக்கிழங்கு சாப்பாடு எடுத்துட்டு வா” என்று ராஜூவிடம் உத்தரவிட்டார். பிரியங்கா உள்குத்து வைத்து பேசும் போதெல்லாம் ராஜூ அதற்கு எரிச்சல் ஆகாமல் புன்னகையோடு சமாளிப்பதைப் பார்க்க சுவாரஸ்யமாக இருக்கிறது. பிரியங்காவிற்கு பிடித்த ரசம் + உருளைக்கிழங்கு உணவை ராஜூ எடுத்து வர.. அதைப் பார்த்ததும் கண்கள் விரிய “ரொம்ப தாங்க்ஸ்டா” என்று பிரியங்கா ராஜூவை கட்டியணைத்து நன்றி சொல்லும் போது ‘டமால்’ என்கிற சத்தம் கேட்டது. அது பிரியங்காவின் ஆசை உடைந்த சத்தம். ஆம். உணவுத்தட்டு கீழே விழுந்து இரண்டாக கிடந்தது. என்னவொரு கிளைமாக்ஸ்?!
தான் எதற்காகவாது ஆசைப்பட்டால் அதை உரத்த குரலில் எதிராளியிடம் வற்புறுத்திக் கேட்டுப் பிடுங்கும் குழந்தைத்தனம் பிரியங்காவிடம் இருக்கிறது. “என் கிட்ட பாசமா பேசு...” என்று தாமரையிடம் ஒரு கணத்தில் உரத்த குரலில் சொல்லி உத்தரவு இட்டுக் கொண்டிருந்தார். ஒரு ‘Spoiled child’ என்கிற சித்திரமே அவரைப் பற்றி யோசிக்கும் போது தோன்றுகிறது. இந்த குழந்தையிடமிருந்தா, வேறு சமயங்களில் அத்தனை வன்மங்கள் வெளிப்படுகின்றன? ஒருவேளை இது நாள் வரை தான் செய்த காரியங்களை மக்கள் மறப்பதற்காக ‘டேமேஜ் கன்ட்ரோலில்’ ஈடுபடும் விஷயத்தை பிரியங்கா செய்கிறாரா என்று தெரியவில்லை.
பிரியங்காவைப் போலவே அபிஷேக்கிற்கும் ‘ரொம்ப ஓவராத்தான் போயிட்டமோ’ என்கிற உணர்வு உள்ளூற வந்திருக்கிறது. இந்த உணர்வை அவ்வப்போது தட்டி எழுப்புவதில் நிரூப் சிறந்த நண்பராக இருக்கிறார். ‘’ரெண்டு நாளைக்கு வில்லன் ரோலுக்கு லீவு தரப்போறேன். நல்லவனா இருக்கப் போறேன்” என்று அடக்கி வாசிக்க அபிஷேக் முடிவு செய்து அதை பாவனியிடம் சொல்லிக் கொண்டிருந்தார். பாவனியை ‘சைலன்ட்டான பிரியங்கா’ என்று சொல்லலாம். பிரியங்கா சரவெடி போல சத்தமாக கொளுத்திப் போடுகிறார் என்றால் பாவனியோ ‘புஸ்வாணம்’ போல சைலன்ட்டாக கொளுத்துகிறார். “நீதான் இந்த நிகழ்ச்சியோட மசாலாவே... டிஃபென்ஸ் ஆட்டம் ஆடாதே” என்று அபிஷேக்கை உசுப்பி விட்டார் பாவனி. இது மட்டுமல்லாமல் “என் நாணயத்தை வெச்சு உன்னைக் காப்பாத்தறேன்” என்று அபிஷேக்கிடம் ஒரு டீலும் போட்டிருக்கிறார். (மூஞ்சை பாவமா வெச்சிட்டு இந்தப் பொண்ணு பண்ற வில்லத்தனமெல்லாம் ‘அடடே’ ரகம்!).
‘ஒரிஜினலாக இருக்கிறேன் என்கிற பெயரில் வெட்டியாக சுற்றுபவர்கள்’, ‘ஆங்கிலம் பேசும் பீட்டர்கள்’, ‘பகலில் தூங்கும் ராக்கோழிகள்’, ‘மைக்கை சரியாக மாட்டாத குழந்தைகள்’ ஆகியோரை அடையாளம் கண்டு கட்டம் கட்டும் வேலையில் பிக்பாஸ் ஈடுபட்டார். இதற்காக வாக்கெடுப்பு நடந்தது. மைக் மாட்டாதவர்களில் ‘பிரியங்கா, அபிஷேக்’, பகலில் தூங்குபவர்களில் பிரியங்கா, நிரூப்’, ஆங்கிலம் பேசுபவர்களில் ‘அபினவ், ஐக்கி’, சுவாரஸ்யம் இல்லாத நபர்களில் ‘ஐக்கி, சுருதி’ ஆகியோர்களின் பெயர்கள் அதிகம் அடிபட்டன.
சுவாரஸ்யம் இல்லாத நபராக ‘இமானின்’ பெயரைச் சொல்லி அபிஷேக் பழிவாங்க முயன்றார். “அவர் பண்றதெல்லாம் பெரிய காமெடியா எனக்குத் தெரியலை” என்று அவர் வியாக்கியானம் செய்ய ஆரம்பித்த போது, ‘‘மக்களுக்கு சுவாரஸ்யமா இருக்கா... இல்லையான்றதுதான் கேள்வி’’ என்று இடைமறித்து சொன்னார் பிக்பாஸ். (அபிஷேக்கை நோஸ் கட் செய்வதில் பிக்பாஸூம் இணைந்து விட்டார்).
மக்களை அமர வைத்து ராஜூ செய்த மிமிக்ரி ஷோ உண்மையிலேயே அற்புதமாக இருந்தது. வறண்டு போயிருந்த சம்பவங்களுக்கு இடையில் இந்த நகைச்சுவை மிகப் பெரிய ஆறுதலை நமக்கு ஏற்படுத்தியது எனலாம். மிமிக்ரி செய்பவர்களின் அப்சர்வேஷன் எத்தனை கூர்மையாக இருக்கும் என்பதை ராஜூவின் அசாதாரணமான திறமை உறுதிப்படுத்தியது. சாலையில் வண்டிகள் செல்லும் சத்தம், எஸ்.ஜே.சூர்யா, ரஜினி, எம்.ஆர்.ராதா ஆகியோர்களின் குரலில் பேசி அசத்தினார் ராஜூ. ரஜினியின் குரலில் பேசும் போது ‘தாமரைன்னா... எனக்குப் பயம்’ என்று சந்தடி சாக்கில் அரசியலை அவர் கலந்தது சுவாரஸ்யம். “என்னைப் பார்த்து ஏன் பயம்?” என்று புரியாமல் கேட்டுக் கொண்டிருந்தார் தாமரை. ரஜினியே நேரில் வந்து விட்டதைப் போன்று பரவசப்பட்டார் சின்னப்பொண்ணு.
ராஜூவைச் சுற்றி கூட்டம் அமர்ந்திருந்ததைப் பார்த்ததும் அபிஷேக்கின் வயிற்றெரிச்சலின் டெம்ப்பரேச்சர் அதிகமாகி விட்டது. “பண்ணதையே பண்ணிட்டிருக்கான். அவன் கிட்ட சேலஞ்ச் பண்ணியிருக்கேன். உன் காமெடி இன்னமும் உயரணுமின்னு” என்று அபிஷேக் அலட்டலாகச் சொல்ல “இதையெல்லாம் ஜட்ஜ் பண்ண நீ யாரு? கலா மாஸ்டரா.. சிம்புவா?” என்று சரியான டைமிங்கில் அபிஷேக்கின் காலை வாரினார் பிரியங்கா.
பிக்பாஸ் வீட்டில் சரியாக செயல்படாதவர்கள் யார் என்கிற முடிவுகள் வெளிவந்தன. இது பெரும்பாலும் சரியாகவே இருந்தது. மைக்கை சரியாக மாட்டாதவரின் பெயராக ‘அபிஷேக்’ வந்தது. (யப்பா சாமி... மைக்கை சரியா போடாமயே நீ இவ்வளவு பேசறாரா?!”). ‘பீட்டர் விடுபவராக அபினய்யும், வெட்டி ஆசாமிகளாக ஐக்கி மற்றும் சுருதியும், பகலில் தூங்குபவர்களாக பிரியங்கா மற்றும் நிரூப்பும் தேர்வானார்கள். இவர்கள் இந்த போர்டுகளை கழுத்தில் மாட்டிக் கொண்டு உலவ வேண்டும்.
இருவராக தேர்வானவர்களை பிக்பாஸ் விலங்கு பூட்டி அழகு பார்த்தார். அதன்படி பிரியங்கா – நிரூப், ஐக்கி – சுருதி ஆகிய ஜோடிகளுக்கு விலங்கு போடப்பட்டது. “ஆத்தா, நான் பாஸாயிட்டேன்’’ என்பது போல் தனக்கு விலங்கு பூட்டப்பட்ட செய்தியை தன் அம்மாவிடம் உரத்த குரலில் கத்தி சொல்லி சந்தோஷப்பட்டார் பிரியங்கா. (இனி மேல் பிரியங்கா பேசினார் என்று எழுதினாலே போதும்... ‘ஹைடெஸிபலில்’ என்று சேர்க்கவே வேண்டாம். வார்த்தை விரயம்!).
“எனக்கு ரசம் சாதம் கொண்டு வா” என்று ராஜூவிடம் உத்தரவிட்ட பிரியங்கா, பிறகு ‘‘என்னை வர்ணிச்சு... பாசமா ஏதாவது சொல்லு” என்று கேட்க.. “இந்தியாவிலேயே அழகு தாஜ்மஹால்னு சொல்லுவாங்க” என்று ராஜூ ஆரம்பித்தவுடன் ‘’உண்மையைச் சொல்லித்தான் வர்ணிக்கணும்” என்று பிரியங்கா இடைமறிக்க “உண்மையைச் சொல்லணும்னா... உங்களை வர்ணிக்கவே முடியாது” என்று ராஜூ டைமிங்காக சொன்ன வசனம் அற்புதம். ‘பேட்டரில பாசிட்டிவ்... நெகட்டிவ்னு ரெண்டு பக்கம் இருக்கும். ஆனா பாசிட்டிவ் சைட் மட்டுமே இருக்கற ஒரே பேட்டரி நீங்கதான். உங்க பசிக்கு எனது வலது கையை வெட்டி சமைச்சு தருவேன். அதை சிக்கனா நெனச்சு நீங்க சாப்பிடலாம்” என்றெல்லாம் சர்காஸ்டிக்காக ராஜூ பேசிய போது அவரிடமிருக்கும் ஹியூமர் சென்ஸ் மற்றும் டைமிங் போன்றவற்றை நினைத்து வியக்க முடிகிறது.
‘ஓ மணப்பெண்ணே’ படத்தின் ட்ரெய்லர் வீடியோவில் ஒளிபரப்பானது. “முழுப்படத்தையும் போடுங்களேன்... நாங்க பார்ப்பம்ல” என்று கேட்டார் தாமரை. ஆனால் முழுப்படத்தையும் பார்க்கும் ஆர்வத்தை தூண்டும் படியாகத்தான் ட்ரெய்லர் இருந்தது. இந்த ட்ரெய்லரிலும் சாப்பாடு தொடர்பான காட்சிகள் வந்ததை பிரியங்காவிற்கு நேர்ந்த சோதனை என்றே சொல்ல வேண்டும். “எனக்கு ட்ரீட்டா ஏதாவது சாப்பாடு அனுப்புங்களேன்” என்று வீடியோவில் வந்திருந்த ஹரீஷ் மற்றும் பாவனியிடம்.. மன்னிக்க பவானியிடம் கேட்டுக் கொண்டிருந்தார் பிரியங்கா.
வீடியோவில் வந்த இந்த இருவரும் “நிரூப் மற்றும் அக்ஷராவுக்கு ஒரு டாஸ்க் தந்தார்கள். இவர்கள் சுவையான ஆம்லேட்டை தயார் செய்து தங்களுக்குப் பிடித்த போட்டியாளரிடம் அதை சுவைக்கத் தர வேண்டும். இது போன்ற சிண்டுமுடிதல்களை செய்வதில் பிக்பாஸ் கில்லாடி. இதில் யார் ஜெயித்தார் என்பதெல்லாம் நமக்கு காட்டப்படவில்லை. அதுவா முக்கியம்? இதில் நடந்த கலகம்தான் முக்கியம்.
ஆம்லேட்டை தயார் செய்த நிரூப், ‘’இமான் எங்கே?’’ என்று தேடி அதைத் தந்தார். பக்கத்திலேயே பிரியங்கா நின்று கொண்டிருந்தார். நிச்சயம் இதற்கு பிரியங்கா கொதித்தெழுவார் என்று தோன்றியது. பிறகு அப்படியே ஆயிற்று. “பிடித்த போட்டியாளர்’னுதானே சொன்னாங்க.. அப்ப நீ எனக்குத்தானே தந்திருக்கணும்?” என்று பிரியங்கா உரிமையுடன் சண்டை போட்டார்.
பிரியங்காவும் அபிஷேக்கும் எரிச்சலூட்டும் வகையில் ஓவராக பர்ஃபாமென்ஸ் செய்வது குறித்து நிரூப்புக்கு விமர்சனமும் ஆட்சேபமும் இருக்கிறது. இப்போதுதான் அதை மெல்ல வெளியே சொல்லத் தொடங்கியிருக்கிறார். இந்தக் குரூப்பிடம் ஐக்கியமாகி விட்டால் தன்னுடைய பெயரும் கெட்டு விடும் என்கிற விழிப்புணர்வு இப்போதுதான் அவருக்கு வரத் துவங்கியிருக்கிறது. அதன் எதிரொலியாகத்தான் ஆம்லேட்டை அண்ணாச்சிக்கு அவர் தந்தார் என்று தோன்றுகிறது. இதற்காக தன்னிடம் பிரியங்கா உரத்த குரலில் ஆட்சேபித்த போது நிரூப்பின் முகம் கோபத்துடன் மாறியதை பார்த்திருக்கலாம்.
நாணயம் திருடும் டாஸ்க் விளையாட்டாக நடந்து முடிந்தாலும் அவற்றின் முக்கியத்துவத்தை பிக்பாஸ் வீடு இப்போதுதான் அதிகம் உணரத் தொடங்கியிருக்கும். நாணயம் வைத்திருப்பவர்கள் அடையக்கூடிய சலுகைகளை பிக்பாஸ் அறிவிக்கத் தொடங்கினார். அதன்படி தன்னையோ அல்லது தன் நண்பரையோ எவிக்ஷனில் இருந்து காப்பாற்றலாமாம். தலைவராக இருப்பவரின் பதவியைப் பறித்து தன்னையோ அல்லது தன் நண்பரையோ அங்கு அமர்த்தலாமாம். இந்த அரிய சலுகை ‘பத்தாம் வாரம்’ வரை நீடிக்கும். ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும்.
இத்தோடு முடிந்திருந்தால் கூட இந்த அறிவிப்பில் பெரிய சுவாரஸ்யம் இருந்திருக்காது. ‘இந்த நாணயத்தை கவனமாக பாதுகாக்க வேண்டும். நாணயம் கைமாறினாலும் சலுகைகளும் கைமாறி விடும்’ என்று சொல்வதின் மூலம் ‘இதை யார் வேண்டுமானாலும் திருடலாம்... மன்னிக்கவும். கைப்பற்றலாம்’என்கிற செய்தியை சொல்லிவிட்டார். இது ஒரு நல்ல திரைக்கதையின் அடையாளம். எனில் ‘‘யார் திருடுவார்கள்?” என்கிற குறுகுறுப்பு வரும் வாரங்கள் முழுக்க நமக்கு இருக்கும். “எனக்குப் பயமா இருக்கு. உன் கிட்ட கொடுத்து வைக்கட்டா?” என்று வருணிடம் கேட்டுக் கொண்டிருந்தார் தாமரை.
பிக்பாஸ் தந்திருக்கும் இந்த ட்விஸ்ட்கள் எல்லாம் சுவாரசியமானவைதான். ஆனால் இதில் ஒரு நெருடல் இருக்கிறது. ஒவ்வொரு வாரமும் ‘யார் வெளியேற வேண்டும்’ என்று பார்வையாளர்கள் வாக்களிப்பார்கள்... அல்லவா? ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. ‘நாணயத்தின் மூலம் யார் வேண்டுமானாலும் திடீரென்று காப்பாற்றப்பட்டலாம்’. எனில் பார்வையாளர்களின் வாக்குகளுக்கு என்ன மதிப்பு?
“நான் உன்னைக் காப்பாத்தறேன். நீ என்னைக் காப்பாத்து” என்று பிரியங்கா க்ரூப் பேசிக் கொண்டிருந்ததில் ஆச்சரியமில்லை. அதற்குப் பிறகு நடந்ததுதான் சற்று ஆச்சரியம். ‘தன்னிடம் அதிக உரிமை எடுத்துக் கொண்டு அழிச்சாட்டியமாக கொள்ளும் பிரியங்காவிடம் நிரூப் உள்ளூற எரிச்சல் கொள்ள ஆரம்பித்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. ரகுவரன் பாணியில் தன்னிடம் பேச ஆரம்பித்த பிரியங்காவிடம் இருந்து உரையாடலை துண்டித்துக் கொண்டு நிரூப் எழுந்து சென்று விட்டார்.
பிரியங்கா குரூப் உடைந்தால் அது ஆட்டத்தில் இன்னமும் பல சுவாரசியங்களைக் கொண்டு வரும். என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.
எதிர்பார்ப்போம்!
source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/bigg-boss-season-5-pavani-and-abhishek-strategy-and-priyanka-teams-collapses
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக