Ad

வெள்ளி, 22 அக்டோபர், 2021

AKS - 45 | ‘’துப்பட்டாவை ரெண்டு பக்கமும் போடுங்கள் தோழி’’ - 2கே கிட்ஸும் திருந்தலையா?!

சுந்தர் காயத்ரியை புனிதாவின் வீட்டிலிருந்து அழைத்து வந்து தனியாக வீடு பார்த்து குடி வைக்கிறான். காயத்ரிக்கு துணையாக சமையல் மற்றும் வீட்டு வேலைகள் செய்ய ஒரு அம்மாவையும் வேலைக்கு வைக்கிறான்.

சுந்தர் அந்த புது வீட்டுக்கு கொடுக்கும் வாடகை, சமையல் செய்யும் சாந்தாம்மாவுக்கு சம்பளம், மேற்கொண்டு இருவருக்கும் உணவு என்று செலவு செய்யும் பணம் காயத்ரியின் சம்பளத்தை விட அதிகமாக இருக்கிறது. காயத்ரி வேலையை விட்டுவிட்டு நாம் ஊருக்கே போகலாம் என்று சொல்கிறாள். காயத்ரி தனக்கு அந்த வீட்டில் அப்படி செலவு செய்து இருப்பதில் விருப்பமில்லை என்று சொல்கிறாள். சுந்தர் காயத்ரியிடம் பணத்தை பற்றி யோசிக்க வேண்டாம் என்று சொல்கிறான். அவளது கனவு தான் முக்கியம் என்றும் அவள் வேலைக்கு செல்ல ஆசைப்படுவதால் தான் அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்கிற ரீதியில் பேசுகிறான்.

AKS - 45 | ஆதலினால் காதல் செய்வீர்

எல்லாம் ஏற்பாடு செய்து விட்டு தனது அறைக்கு செல்வதாக சொல்லும் சுந்தரிடம் சாந்தாம்மா அதே வீட்டில் சுந்தரும் தங்கிக் கொள்ளலாமே என்று கேட்கிறார். அவ்வாறு இருப்பது தவறு என்றும் தங்கள் குடும்பத்தில் அதெல்லாம் பழக்கம் இல்லை என்று தனது வழக்கமான ‘Good Boy Image’க்கு தாவி பேசுகிறான். திருமணத்திற்கு முன்பு காயத்ரியுடன் ஒரே வீட்டில் தங்குவது இரண்டு குடும்பத்திற்கும் அவமானமாக இருக்கும் என்கிறான். அதோடு மட்டுமல்லாமல், இதனால் காயத்ரிக்கு தான் சிரமம் என்று கூறுகிறான். கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் சுந்தர் மிக சாமர்த்தியமாக அவன் காயத்ரியின் மீது அக்கறையுடன் இருப்பதாக காட்டிக் கொள்கிறான்.

சுந்தருக்கும் காயத்ரிக்கும் திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது. சுந்தர் எப்பொழுதும் சென்னையிலேயே தங்கி இருக்கப் போவதுமில்லை. காயத்ரியுடன் சாந்தாம்மாவும் அந்த வீட்டில் தங்கியிருக்க, சுந்தர் அதே வீட்டில் இன்னொரு அறையில் தங்குவதை காயத்ரியின் குடும்பத்தினர் ஒருவேளை ஆதரிக்கலாம். சுந்தர் தனது பிற்போக்கான கருத்துக்களை எல்லாம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் மற்றும் ஊரில் இருப்பவர்களை காரணம் காட்டி காயத்ரியின் மீது திணிக்கிறான். அதை கேட்டு சாந்தாம்மா, சுந்தர் சொக்கத்தங்கம் என்றும் அவனை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் காயத்ரியிடம் சொல்கிறார். காயத்ரி அதை கேட்டு அமைதியாக இருக்கிறாள்.

‘அந்நியன்’ படத்தில் காதலிக்கு காதல் கடிதம் எழுதி அதை காதலியின் பெற்றோரிடம் கொடுத்துவிட்டு பெருமை பொங்க நடக்கும் அம்பி விக்ரமை போல, சாந்தாம்மா சுந்தரை பாராட்டி பேசும்போது அவன் பெருமை பொங்க காயத்ரியை பார்க்கிறான். ஒவ்வொரு முறையும் சுந்தர் இதுபோன்ற பிற்போக்குத்தனமான விஷயங்களை பேசும்போது அல்லது ஆர்வக்கோளாறாக எதாவது செய்யும்போதும் சுற்றி இருக்கும் பெரியவர்கள் அதை பாசிட்டிவாக்கி சுந்தருக்கு பெருமை சேர்க்கிறார்கள்.

காயத்ரி சமைத்ததை சாந்தாம்மா சுந்தருக்கு சுவை பார்க்க எடுத்து வந்து கொடுக்கிறார். சுந்தர் சாப்பிட்டுவிட்டு நன்றாக இருக்கிறது என்று பாராட்டுகிறான். ’அது காயத்ரி சமைத்தது’ என்று சாந்தாம்மா சொல்லும்பொழுது நன்றாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு உடனடியாக எங்க அம்மா இதைவிட நன்றாக சமைப்பார் என்று சுந்தர் சொல்கிறான். மேலும், “திருமணம் முடிந்து எங்க வீட்டுக்கு வந்ததற்கு பிறகு அம்மாவிடம் கேட்டு நன்றாக சமைக்க கற்றுக் கொள்” என்று காயத்ரியிடம் சொல்கிறான்.

AKS - 45 | ஆதலினால் காதல் செய்வீர்

இன்னும் திருமணமே நடக்கவில்லை அதற்குள் சுந்தர் தன் அம்மாவை போல் சமைக்க வேண்டும் என்கிறான். இது காலங்காலமாக ஆண்களுக்கே இருக்கும் எண்ணம் தான். ஆனால் இன்றைய சூழலில் பலருக்கும் தங்கள் மனைவி வேறு, தாய் வேறு என்கிற புரிதல் இருக்கிறது. அதுபோக ஆண்கள் பலரும் வீட்டு வேலை மற்றும் சமையலை விருப்பத்துடன் பகிர்ந்து செய்வதும் அதிகரித்திருக்கிறது. அம்மாவை போல, அக்காவை போல இருக்க வேண்டும் என்று ஆண்கள் மனைவி/காதலியிடம் சொன்னால் காலம்பூராவும் ‘சிங்கிளாக’ இருக்க வேண்டியிருக்கும் என்பதை சுந்தரை போல் இருப்பவர்கள் புரிந்து கொள்வார்களாக!

காயத்ரி வீட்டை விட்டு சென்றதை பற்றி பாண்டியன் வருத்தத்துடன் பேசுகிறான். கவிதா பாண்டியனிடம் உனக்கு ஊரில் இருப்பவர்கள் கஷ்டமெல்லாம் புரியும், என்னுடைய கஷ்டம் மட்டும் புரியாது என்று கோபப்படுகிறாள். பாண்டியன் முந்தைய நாள் தியேட்டருக்கு வராதது பற்றி அவள் கேட்க, பாண்டியன் எதையும் மறைக்க வேண்டாம் என வெளிப்படையாக பேச ஆரம்பிக்கிறான். கவிதாவுக்கும் ராஜேஷிற்கும் இடையில் தான் வர விரும்பவில்லை என்று பாண்டியன் சொல்கிறான். ராஜேஷின் காதலை புரிந்து கொண்டு, நேரம் ஒதுக்குமாறு கவிதாவிடம் சொல்கிறான்.

இருவருக்கும் வாக்குவாதம் பெரிதாகிறது. பாண்டியன் இவ்வளவு நாட்கள் விளையாட்டுத்தனமாக இருந்தாலும் தற்போது சூழ்நிலையை புரிந்து கொண்டு கவிதாவிடம் எடுத்துச் சொல்கிறான். கவிதாவுக்கு திருமணமாகக் கூடிய சூழ்நிலைகள் இனி பல விஷயங்களையும் தங்கள் இருவரும் மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிறான்.

AKS - 45 | ஆதலினால் காதல் செய்வீர்

பொதுவாக பெண்கள் தான் திருமணத்திற்காக தங்களுடைய நட்பில் இருந்து விலகி இருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். கவிதாவிற்கு ராஜேஷிடம் பாண்டியனுக்கும் தனக்குமான நட்பை பற்றி வெளிப்படையாக பேசக் கூடிய சூழல் இருக்கிறது. அதை கவிதா, தானே உருவாக்கிக் கொண்டாள். கவிதா பல நேரங்களிலும் வெளிப்படையாக மற்றவர்களிடம் பேசும் பழக்கம் உடையவளாகையால் ராஜேஷிடம் தங்கள் நட்பு பற்றியும் எளிதாக சொல்லி விடுகிறாள்.

கவிதா சோகமாக இருப்பதை பார்த்து ராஜேஷ் அவளிடம் காரணம் கேட்கிறான். பாண்டியன் இனிமேல் தன்னுடன் வெளியில் வர மாட்டேன் என்று சொன்னதை ராஜேஷிடம் சொல்கிறாள். ராஜேஷ் மனதுக்குள் ஆனந்தக் கூத்தாடுகிறான். ஆனால் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு ”அப்புறம் என்னாச்சு” என்று கேட்கிறான். கவிதா இனிமேல் தான் பாண்டியனை ‘Ignore’ செய்யப் போவதாக சொல்வது ராஜேஷுக்கு கொண்டாட்டமாக இருக்கிறது.

ராஜேஷின் நோக்கம் ஆரம்பத்தில் இருந்தே கவிதாவையும், பாண்டியனையும் பிரிப்பது இல்லை. அவர்கள் நட்பை புரிந்து கொள்ள அவன் முயற்சி செய்தான். ஒருமுறை சந்தேகம் வந்த பொழுது சிவா மற்றும் பரத்துடன் பேசி தன்னுடைய குழப்பத்தை தெளிவு படுத்திக் கொண்டான். ஆனால் கவிதா ராஜேஷிற்கு நேரம் ஒதுக்காததால் அவன் வேறு வழியில்லாமல் பாண்டியனை அவர்களுக்கிடையில் வராமல் ஒதுக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. எப்போதும் தன் காதலி / மனைவியின் நண்பர்களை புரிந்து கொள்ளும் ஆண்கள் வெகுசிலரே. அதையும் கவிதாவை போல் காதலையும் நட்பையும் சரியாக கையாள தெரியாத பெண்கள் குழப்பிக் கொள்கிறார்கள்.

கவிதா பாண்டியனை ஒதுக்குவதால் ஏற்படும் குற்ற உணர்ச்சியை ராஜேஷின் மீதும், வெளியே செல்லும்போது பாண்டியன் வரவில்லை என்று சொன்னதால் ஏற்படும் ஏமாற்றத்தை பாண்டியன் மீதும் காட்டி சண்டையிடுகிறாள். இருவரையும் தனித்தனியாக அணுகுவது கவிதாவின் பொறுப்பு. ஆனால் கவிதா தன்னுடைய குழப்பங்களை மற்றவர்கள் மீது தள்ளிவிட்டு தன்னுடைய மனதுக்கு நிம்மதியை தேடிக் கொள்கிறாள்.

கவிதா இனிமேல் தான் தினமும் இரவு உணவு ராஜேஷுடன் சாப்பிடுவதாக வாக்குக் கொடுக்கிறாள். அதேபோல் தினமும் தன்னை வீட்டில் ட்ராப் செய்வதும் ராஜேஷின் வேலை என்கிறாள். ராஜேஷிற்கு அது மகிழ்ச்சியாக இருக்கிறது. கவிதா மீண்டும் அதே தவறை செய்கிறாள். முதலில் ராஜேஷின் மனதை புரிந்து கொள்ளாமல் எல்லா பக்கமும் பாண்டியனை இழுத்துக் கொண்டு வந்து ராஜேஷை வருத்தப்பட செய்தது போல இப்பொழுதும் பாண்டியனுக்கு பாடம் புகட்ட ராஜேஷ் தன்னை தினமும் டிராப் செய்யச் சொல்கிறாள்.

இப்பொழுதும் பாண்டியன் எதுக்காக ஒதுங்கி இருக்கிறான் என்று அவன் அவ்வளவு எடுத்துச் சொல்லியும் கவிதா புரிந்து கொள்ளாமல் அவனிடம் கோபமாக இருக்கிறாள். அதிக மனமுதிர்ச்சியுடன் இருப்பதாக தன்னை காட்டிக் கொள்ளும் கவிதா பல நேரங்களில் முரண்பட்ட கதாபாத்திரமாக இருக்கிறாள்.

அலுவலகத்துக்கு காயத்ரியை தானே கொண்டு போய் விடுவதாக சொல்லி அழைத்துச் போகும் சுந்தர் ஜீப்பில் ஏறப்போகும் காயத்ரியிடம் துப்பட்டாவை இரண்டு பக்கமும் போடச் சொல்கிறான். இந்த 2021-ம் ஆண்டில் இன்னமும் ”துப்பட்டா போடுங்கள் தோழி” என்று ஒரு 2K கிட் செல்வதை பார்க்கும்போது சற்று அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. Grow up Bro!

அலுவலகத்தில் சிவா – காயத்ரியின் சந்திப்பை எதிர் நோக்கி நாளைய எபிசோடுக்காக...

காத்திருப்போம்!


source https://cinema.vikatan.com/television/vikatans-aadhalinal-kaadhal-seiveer-digital-series-episode-45-review

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக