மேற்கு வங்கத்தில் 1970-ம் ஆண்டில், ஒரு சிறுமி தன்னை காங்கிரஸில் இணைத்துக்கொள்கிறாள். பின்னாளில் அந்த சிறுமி, மாநிலத்தின் முதல்வராவார் என அன்று யாருமே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆம், தொடர்ந்து மூன்றாவது முறையாக மேற்கு வங்கத்தின் முதல்வராக இருக்கும் மம்தா பானர்ஜிதான் அவர். இளம் வயதிலேயே அரசியல், தனது 29-ம் வயதில் நாடாளுமன்ற உறுப்பினர். அதன்பிறகு, மனிதவளம் மற்றும் விளையாட்டுத்துறையின் இணை அமைச்சர்.
பின்னர் 1997-ம் ஆண்டில் காங்கிரஸிலிருந்து வெளியேறி, அடுத்த ஆண்டே `திரிணாமுல் காங்கிரஸ்' தனிக் கட்சி தொடக்கம். இப்படியான மம்தாவின் அரசியல் பாதை சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டதல்ல. இந்த நீண்ட நெடிய அரசியல் பயணத்தில் எத்தனையோ போராட்டம், வன்முறைத் தாக்குதல் என்று ரத்தம் சிந்தி அரசியலில் தனக்கான இடத்தை அடைந்திருக்கிறார். இவரின் உழைப்புக்குச் சிறந்த உதாரணம், மேற்கு வங்கத்தின் முதல்வராக மூன்றாவது முறை கோட்டையில் அமர்ந்திருப்பதுதான்.
தொடர்ந்து 34 ஆண்டுகளாக கம்யூனிஸ்ட்டுகளின் கோட்டையாக இருந்த மேற்கு வங்கம் இப்போது மம்தாவின் கோட்டையாக மாறியிருக்கிறது. இதற்கு மேலும், ஒரு சிறந்த எடுத்துக்கட்டு சமீபத்தில் அங்கு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்தான். இந்தத் தேர்தலில் மேற்கு வங்கத்தைக் கைப்பற்ற பாஜக பல முயற்சிகளை மேற்கொண்டது. நடைபெற்றுக்கொண்டிருந்த மம்தா தலைமையிலான அரசின் மீது பல்வேறு சர்ச்சைகள், ஊழல் புகார்கள் என்று ஒரு பக்கம் சுற்றிக்கொண்டிருந்தது. இந்த தேர்தலில் மம்தா வெற்றி பெறுவது கடினம் தான் என்று பலரும் கூறி வந்தனர்.
இவற்றுக்கெல்லாம் பதிலாக, மொத்தமுள்ள 293 தொகுதிகளில் 213 தொகுதிகளைக் கைப்பற்றி, மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைத்தது. இருந்த போதிலும், நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரியிடம் குறைந்த வாக்கு எண்ணிக்கையில் தோல்வியைத் தழுவினார் மம்தா. அதன்பின்னர், மீண்டும் பவானிபூர் தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதெல்லாம் வேறு கதை. இருந்தாலும், இந்தத் தேர்தலில் பாஜகவை வீழ்த்திய மம்தாவின் வெற்றி இந்திய அளவில் கவனிக்கப்பட்டது.
கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம், மேற்கு வங்கத்தில் `ஒருங்கிணைந்த இந்தியா' என்ற பொதுக் கூட்டத்தை நடத்தினர் மம்தா. இந்தக் கூட்டத்தில், முன்னாள் பிரதமரும் மதச் சார்பற்ற ஜனதா தள தலைவருமான தேவ கௌடா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் குமாரசாமி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தி.மு.க தலைவர் ஸ்டாலின், ராஷ்ட்ரிய ஜனதா தள மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ், ஃபரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, பா.ஜ.க-வின் அதிருப்தி தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். எனினும், அந்தத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. நினைத்ததைப் போல, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முடியவில்லை.
வரும் 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் வேலைகளை, கடந்த சில வருடங்களாக தொடர்ச்சியாகச் செய்துவருகிறார் மம்தா. சமீபத்தில்கூட டெல்லி சென்ற மம்தா, சோனியா காந்தி, ராகுல் காந்தி உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களை நேரில் சாதித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``நான் எதிர்க்கட்சிகளை வழிநடத்தும் தலைவராக இருக்க விரும்பவில்லை. ஒரு சாதாரணத் தொண்டராகத் தெருவில் இருக்கும் சாமானியனாக, அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் உதவவே விரும்புகிறேன். பா.ஜ.க-வைத் தோற்கடிக்க எல்லோரும் இணைய வேண்டும். அதை நோக்கி மட்டுமே என்னுடைய அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் இருக்கும்" என்றார்.
எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் வேலைகள் ஒருபுறமிருக்க, மற்றொருபுறம் தனது கட்சியை விரிவுபடுத்தும் வேலையையும் முன்னெடுத்திருக்கிறார் மம்தா. கடந்த 2017-ம் ஆண்டு கோவா சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 17 தொகுதிகளைக் காங்கிரஸும், 13 தொகுதிகளை பாஜகவும் கைப்பற்றியது. இருந்தபோதிலும், மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்து பாஜக ஆட்சியைப் பிடித்தது. அங்கு தற்போது பாஜகவுக்கு எதிரான மனநிலை நிலவுகிறது. இதைப் பயன்படுத்தி, 2022-ம் ஆண்டு நடக்கும் கோவா சட்டமன்ற தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க திரிணாமுல் காங்கிரஸ் வியூகம் வகுத்திருக்கிறது.
As I prepare for my maiden visit to Goa on 28th, I call upon all individuals, organisations and political parties to join forces to defeat the BJP and their divisive agenda. The people of Goa have suffered enough over the last 10 years. (1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) October 23, 2021
வரும் 28-ம் தேதி கோவாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் மம்தா. அது தொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில், ``பாஜகவைத் தோற்கடிக்க அனைத்து தனிநபர்கள், அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளை ஒன்று சேருமாறு அழைக்கிறேன். கடந்த 10 ஆண்டுகளாகக் கோவா மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஒன்றாக, கோவா மக்களுக்கு ஒரு புதிய விடியலை அறிமுகப்படுத்துவோம், இது கோவா மக்களின் அரசாங்கமாக இருக்கும். ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்குவோம்" என்று பதிவு செய்திருந்தார்.
Also Read: `சிங்கூர் போராட்டம் டு பவானிப்பூர் தேர்தல் வெற்றிவரை' -`தீதி' மம்தா பானர்ஜியின் வெற்றிக்கதை!
2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக-வுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ள அனைத்து கட்சிகளையும் ஒரே அணியில் இணைத்து, ஒரு வலுவான கூட்டணியைக் கட்டமைக்கும் பணியில் தீவிரம் காட்டிவருகிறார் மம்தா. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, சமீபத்தில் சோனியா காந்தி தலைமையில் காரியக் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியினர் அந்தக் கட்சியில் நிலவும் உட்கட்சி பூசலைச் சரிசெய்யும் வேலையைச் செய்துவருகிறார்கள்.
தேசிய அளவில், தனது அரசியலை விரிவுபடுத்தும் மம்தா காங்கிரஸ் கட்சியோடு இணக்கமான சூழலைத்தான் கடைப்பிடித்து வருகிறார். காரணம், அவரின் அரசியல் பயணம் ஆரம்பித்தது காங்கிரஸ் கட்சியிலிருந்துதான். அதே நேரத்தில், , 1999-ம் ஆண்டு பாஜக-வோடு கூட்டணி வைத்து வெற்றி பெற்று, மத்திய பாஜக அமைச்சரவையில் ரயில்வே துறை அமைச்சராக இருந்தவர் மம்தா. தற்போதைய நிலையில் இவரின் இந்த வளர்ச்சி, காங்கிரஸ் கட்சியைவிட பாஜகவுக்குத் தான் பாதகமாக அமையும் என்கிறார்கள் தேசிய அரசியலை உற்றுநோக்கும் அரசியல் விமர்சகர்கள். அரசியலில் எப்போது வேண்டுமென்றாலும்... எது வேண்டுமென்றாலும் நடக்கலாம்... காலமும்... களமும்தான் பதில் சொல்லும்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/article-about-mamata-banerjees-nation-level-politics
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக