"யானைகள் இந்தக் காட்டை உருவாக்கின. தங்களது தந்தங்களால் அவை கீறிய குழிகளில் நதிகள் பாய்ந்தோடின. தங்கள் தும்பிக்கைகளால் அவை ஊதியபோது இலைகள் விழுந்தன. இங்கு இருக்கும் எல்லாவற்றையும் யானைகளே உருவாக்கின: மலைகள், மரங்கள், மரங்களில் இருக்கும் பறவைகள்..."
"தி ஜங்கிள் புக்" நூலில் வரும் புகழ்பெற்ற வரிகள் இவை. இது வெறும் உருவகம் அல்ல, அறிவியலும் இதைத்தான் சொல்கிறது. அளவில் பெரியவை என்பதாலும் சூழலுடன் கொண்ட பிணைப்பாலும் தாங்கள் வாழும் சூழலை மாற்றியமைக்கும் பொறியாளர்களாக யானைகள் கொண்டாடப்படுகின்றன. இந்தப் பணிகளில் தந்தத்தின் பங்கு முக்கியமானது. தந்தங்கள் மரப்பட்டைகளை உரித்தெடுக்கவும், பூமிக்கடியில் தோண்டி உணவு தேடவும் தும்பிக்கையைப் பாதுக்காக்கவும் உதவுகின்றன. ஆனால் அதே தந்தம், வேட்டையாடும் மனிதர்களால் குறிவைக்கப்படுவதால் யானைகளுக்கு ஆபத்தாகவும் முடிந்துவிடுகிறது.
ஆப்பிரிக்க யானை இனத்தில் ஆண் யானைகள் மட்டுமல்லாமல் பெண் யானைகளுக்கும் தந்தம் உண்டு என்பதால் அவற்றுக்கான அச்சுறுத்தல் இருமடங்கு எனலாம். சர்வதேச வனவிலங்கு கறுப்பு சந்தையின் காரணமாக தந்தங்களுக்காக யானைகளை வேட்டையாடுவது தொடர்ந்து நடக்கிறது. தந்தத்துக்கான சர்வதேச சந்தை என்பது, செல்வாக்கும் பணமும் புழங்கி விளையாடும் உலகளாவிய வலைப்பின்னல். இந்த வணிக வலைப்பின்னலோடு உள்நாட்டுப் போரின் அச்சுறுத்தலும் சேர்ந்துகொள்ளும்போது காடு முழுவதுமே வேட்டைக்களமாக மாறிவிடுகிறது.
மொசாம்பிக்கில் நடந்தது இதுதான். 1976ல் தொடங்கி 1992 வரை 16 ஆண்டுகள் நடந்த மொசாம்பிக் உள்நாட்டுப் போரை நடத்துவதற்கு பெருமளவில் நிதி தேவைப்பட்டது. அப்போது கொரங்கோஸா தேசியப் பூங்காவில் இருந்த யானைகள் குறிவைக்கப்பட்டன. போர்க்காலம் முழுக்கவே தந்தத்துக்காக யானைகள் கொன்று குவிக்கப்பட்டதில் அந்த இடத்தில் 10% யானைகள் மட்டுமே மீதமிருந்தன.
1989ல் இங்கு உள்ள யானைகளின் சூழலியல் கூறுகளை ஆராய்ந்த அறிவியலாளர் ஜாய்ஸ் பூல், ஆண் மற்றும் பெண் யானைகளுக்கு இடையிலான பாலின விகிதம் மிகவும் சரிந்திருப்பதை உணர்ந்தார். மொத்த எண்ணிக்கையில் ஆண் யானைகள் மிகவும் குறைவாக இருந்தன. வளர்ந்த பெண் யானைகளின் எண்ணிக்கையும் ஓரளவு குறைந்திருந்தது, மீதமிருந்த பெண் யானைகளிலும் 50.9% யானைகளுக்குத் தந்தம் இருக்கவில்லை. வேட்டையின் அழுத்தம் காரணமாகவே இது நடந்திருக்கிறது என்று ஜாய்ஸ் உணர்ந்தார். பெண் யானைகளோடு ஒப்பிடும்போது ஆண் யானைகளின் தந்தம் ஏழு மடங்கு வேகமாக வளரும் என்பதால், வேட்டையின் அழுத்தம் காரணமாக பெரும்பாலான ஆண் யானைகளும் முதிர்ந்த பெண் யானைகளும் தந்தம் இல்லாமல் இருப்பதில் ஆச்சர்யமில்லை. ஆனால், தந்தத்தால்தான் ஆபத்து எனும்போது, பெண் யானைகள் மட்டுமே தந்தம் இல்லாமல் பிறப்பதற்கான காரணத்தை ஜாய்ஸால் கண்டுபிடிக்க முடியவில்லை. தனது முதற்கட்ட முடிவுகளை வெளியிட்டு சர்வதேச தந்த வேட்டைக்கான தடையைக் கொண்டு வரும் முயற்சியில் இறங்கினார்.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு அக்டோபர் 2021ல் ஜாய்ஸின் கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. மரபணு ஆராய்ச்சியின் தொழில்நுட்ப வளர்ச்சி, ஆப்பிரிக்கப் பெண் யானைகள் ஏன் தந்தமில்லாமல் பிறக்கின்றன என்று கண்டுபிடித்துள்ளது.
AMELX, MEP1 என்ற இரு மரபணுக்கள் இதற்குக் காரணமாக சொல்லப்படுகின்றன. பாலூட்டிகளில் பல் வளர்ச்சிக்கு உதவும் மரபணுக்கள் இவை. ஆப்பிரிக்க யானைகளில் இந்த மரபணுக்கள் மாற்றம் அடைந்திருப்பதாகவும், அதனாலேயே அவை தந்தம் இல்லாமல் பிறக்கின்றன எனவும் இந்த ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதை விரிவாகப் பார்க்கலாம். இந்த மரபணு, எக்ஸ் குரோமோசோமில் உள்ளது. மனிதர்களைப் பொறுத்தவரை ஆண்களுக்கு எக்ஸ்-ஒய் குரோமோசோம் ஜோடியும், பெண்களுக்கு எக்ஸ்-எக்ஸ் குரோமோசோம் ஜோடியும் இருக்கும் என்று படித்திருப்போம். யானைகளின் குரோமோசோம் அமைப்பும் அப்படிப்பட்டதுதான்.
எக்ஸ் குரோமோசோமில் உள்ள AMELX மரபணுக்களில் மாற்றம் ஏற்படும்போது அது உயிருக்கே ஆபத்தானதாக மாறும். ஆண்குட்டிக்கு ஒரே ஒரு எக்ஸ் குரோமோசோம் என்பதால், பாதுகாக்க வேறு அமைப்பு எதுவும் இல்லாமல் அது கருவிலேயே இறந்துவிடும். ஆனால் பெண்குட்டிக்கு இரண்டு எக்ஸ் குரோமோசோம் இருப்பதால், ஒரு குரோமோசோம் மரபணுவில் ஆபத்தான மாற்றம் இருந்தாலும் இன்னொரு நல்ல குரோமோசோம் இருப்பதால் அது பிழைத்துவிடுகிறது. ஆக, தந்த வளர்ச்சியைத் தடுக்கும் மரபணு மாற்றம் கொண்ட ஆண் குட்டிகள் பிறப்பதே இல்லை. பெண் யானைகளோ கூடுதல் எக்ஸ் குரோமோசோம் கொடுக்கும் பாதுகாப்பால் தந்தம் இல்லாமல் பிறக்கின்றன, வேட்டைக்காரர்களிடம் மாட்டிக்கொள்ளத் தேவையின்றி நீண்ட ஆயுளோடு வாழவும் செய்கின்றன. பெண்யானைக் குட்டிகள் மட்டுமே தந்தம் இன்றிப் பிறப்பதற்கான காரணம் இதுதான்.
சிறு விலங்குகளின் மீதான மனித செயல்பாடுகளின் அழுத்தம் பல விதங்களில் அவற்றை மாற்றியமைக்கிறது என்று ஆராய்ச்சிகள் உறுதி செய்திருக்கின்றன. கான்கிரீட் வீடுகளில் வாழத் தொடங்கியபின்பு பல்லிகளின் கால் அமைப்பும் தசைகளும் மாறியிருக்கின்றன. கனடாவில் கொம்புகளுக்காக வேட்டையாடப்படும் பிக்ஹார்ன் ஷீப் என்ற ஒரு வகை செம்மறியாடு இனத்தில், வேட்டை அழுத்தம் காரணமாக கொம்பின் நீளம் குறையத் தொடங்கியிருக்கிறது. தொழிற்புரட்சி காரணமாக கரிப்புகையால் மரங்களின் நிறம் மாறத் தொடங்கியபோது, அந்த மரங்களில் மறைந்துவாழ்வதற்காக Peppered moth என்ற ஒருவகை அந்துப்பூச்சியின் நிறமும் கறுப்பாக மாறியது. இயற்கையான மாறுதல்கள் இல்லாமல் மனித செயல்பாடுகளால் விலங்குகளில் நடக்கும் இந்த மாற்றத்தை Artificial selection என்று அழைப்பார்கள். இதுவரை அது சிறு விலங்குகளில் மட்டுமே கண்டறியப்பட்டிருந்தது.
அந்த வகையில் ஆப்பிரிக்க யானைகளின் இந்த மாற்றம் முக்கியமானது. பெரிய விலங்குகளின் மீதான வேட்டை அழுத்தம் செயற்கையான ஒரு பரிணாம மாற்றத்தை உருவாக்கும் என்று நிரூபித்திருக்கும் முதல் ஆராய்ச்சி இது. இது மிகவும் துரதிருஷ்டவசமானது என்கிறார்கள் சூழலியலாளர்கள். ஆண் யானைகளின் பிறப்பு விகிதம் குறைவதோடல்லாமல், பிறக்கும் ஆண் யானைகள் தந்தத்துடன் பிறக்கின்றன என்பதால் அவை எந்த நேரமும் வேட்டையாடப்படலாம் என்ற ஆபத்தும் இருக்கிறது. ஆகவே ஆப்பிரிக்க ஆண் யானைகளுக்கு இருமடங்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. மனிதர்களின் வேட்டை அழுத்தம் ஒரு பெருவிலங்கின் பரிணாம வளர்ச்சியையே மடைமாற்றிவிடும் என்பது சற்று கலக்கமான செய்திதான்.
Also Read: மனிதரைத் தாண்டியும் புனிதமானது!
தந்தங்களற்ற யானைகள் வேட்டையாடிகளிடமிருந்து வேண்டுமானால் தப்பிக்கலாம், ஆனால் அவற்றின் வழக்கமான உணவுப்பழக்கங்களை இது மாற்றியமைக்கும். உணவுத்தேவைகள் மாறும்போது யானைகள் பயணிக்கும் பாதையும் மாறும். தந்தங்களற்ற யானைகள் மரப்பட்டைகளை உரிக்காது, குழிகள் தோண்டாது என்பதால் மரங்களையும் நிலங்களையும் அவற்றால் மாற்றியமைக்க முடியாது. காடுகளை மாற்றியமைக்கும் யானைகளின் செயல்பாடுகள் குறையும்பட்சத்தில் அது காட்டின் சூழலை எப்படியெல்லாம் மாற்றும், அதனால் எந்த விலங்குகள் பாதிக்கப்படும் என்பது போகப் போகத்தான் தெரியும். தவிர, ஆண் யானைகளின் விகிதம் குறைவதால் அடுத்த சில ஆண்டுகளில் ஆப்பிரிக்க யானைகளின் எதிர்காலம் என்னவாகும் என்பதும் அறிவியலாளர்களைக் கலக்கமடையச் செய்திருக்கிறது.
கவலையளிக்கும் இந்தச் செய்தியில் ஒரே ஒரு சிறு கீற்று நம்பிக்கையும் இருக்கிறது. போர் முடிந்த உடனே பிறந்த யானைகளோடு ஒப்பிடும்போது அடுத்தடுத்த தலைமுறை யானைகளில், தந்தம் கொண்ட பெண் யானைகளின் விகிதம் சற்றே அதிகரித்திருக்கிறது. போரின்போது இருந்த வேட்டை அழுத்தம் குறைந்ததாலும் சர்வதேச அளவில் தந்தப் பொருள்களின் சந்தை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாலும் யானைகள் கொஞ்சம் ஆசுவாசமடைந்திருப்பதாகத் தெரிகிறது. இது குறித்து மகிழ்ச்சி தெரிவிக்கும் சூழலியலாளர்கள், தந்த வேட்டை முற்றிலும் ஒழிக்கப்பட்டால் ஆப்பிரிக்க யானைகள் இன்னும் சுதந்திரமாக வாழும் என்று கூறியிருக்கிறார்கள்.
காடுகளையும் மலைகளையும் உருவாக்கிய பெருவிலங்குகளை மனிதப் பேராசையிடமிருந்து காப்பாற்றியாகவேண்டிய சூழலில் இருக்கிறோம்!
source https://www.vikatan.com/living-things/animals/female-african-elephants-evolve-tuskless-because-of-poaching
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக