புதுச்சேரி வானரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரபல ரெளடி ’பாம்’ ரவி. இவர் மீது 6 கொலை வழக்குகள், கொலை முயற்சி, அடிதடி, ஆள் கடத்தல் உள்ளிட்ட 36 வழக்குகள் நிலுவையில் உள்ளன. சிறையில் இருந்து சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த ரவி, புதுச்சேரியில் நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட முடிவெடுத்திருக்கிறார்.
அதற்காக தனது பகுதியில் சொந்த செலவில் சாலைகள் சீரமைப்பு, கழிவுநீர் வாய்க்கால்களை சரி செய்வது போன்ற சிறு சிறு பணிகளை செய்து வந்திருக்கிறார். அதன்படி நேற்று மதியம் சுமார் 3.30 மணியளவில் அந்தோனி (எ) பரேட், மற்றொரு நண்பர் என இரு நண்பர்களுடன் அலேன் வீதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் ’பாம்’ ரவி.
அப்போது திடீரென அவர்களை வழிமறித்த 5 பேர் கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் பாம் ரவியின் தலையை குறிவைத்து நாட்டு வெடிகுண்டை வீசியது. ஆனால் அது அந்தோனியின் தலையில் விழுந்ததால் அவர் படுகாயங்களுடன் கீழே விழுந்தார். அதில் அதிர்ச்சியடைந்த பாம் ரவி மற்றும் அவருடன் சென்ற மற்றொரு நண்பர் இருவரும் அங்கிருந்து தப்பித்து ஓட அரிவாள்களுடன் அவர்களை விடாமல் துரத்தியது அந்த கும்பல்.
சிறிது தூரத்தில் ரவியின் மீதும் நாட்டு வெடிகுண்டை வீச, அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அதையடுத்து அவரை சூழ்ந்துகொண்டு சரமாரியாக அரிவாள்களால் வெட்டியது அந்த கும்பல். அதில் ரத்தவெள்ளத்தில் அங்கேயே துடிதுடித்து உயிரிழந்தார் ரவி. அதேபோல தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சாலையின் ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த அந்தோனியும் நீண்ட நேரங்களுக்குப் பிறகு உயிரிழந்தார்.
தகவல் தெரிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் இருவரையும் மீட்டு புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டார்கள் என்று கூறி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த இரட்டைக் கொலை சம்பவத்தால் வானரப்பேட்டை பகுதியில் பதற்றம் நிலவுவதால் சீனியர் எஸ்.பி லோகேஸ்வரம் தலைமயில் போலீஸார் குவிக்கப்பட்டிருக்கின்றனர். கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அடித்துக் கொலை செய்யப்பட்ட ரெளடி திப்லானின் கொலைக்கு பழிவாங்கவே இந்த கொலைகள் அரங்கேற்றப்பட்டிருக்கின்றன என்பது போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
Also Read: புதுச்சேரி: `கொலை வழக்குகளில் சிறை; அரசியல் என்ட்ரி!' பா.ஜ.க-வில் இணைந்த `தாதா’ எழிலரசி யார்?
யார் இந்த திப்லான்?
புதுச்சேரி திப்புராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவரான ரெளடி திப்லான் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்புடையவர். திருமணத்திற்குப் பின் திருந்தி வாழ முயற்சி செய்த அவரை கடந்த ஆண்டு, பாம் ரவி உள்ளிட்ட அவரின் நண்பர்கள் கடத்திச் சென்று அடித்துக் கொலை செய்தனர். அதில் ஆத்திரமடைந்த அவரின் நண்பர்கள், திப்லானின் கல்லறையில் அவருக்கு பிறந்தநாளை பாட்டாக் கத்தியால் கேக் வெட்டி கொண்டாடியதுடன், கொலை செய்தவரை பழிக்குப் பழி வாங்குவோம் என்று உறுதிமொழி ஏற்றனர். அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாகத்தான் இந்தக் கொலைகள் அரங்கேறியிருக்கலாம் என்கின்றனர் விசாரணை அதிகாரிகள்.
source https://www.vikatan.com/government-and-politics/crime/puducherry-rowdy-bomb-ravi-killed-by-a-unknown-gang
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக