முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளம் தமிழகத்துடன் மோதல் போக்கை கையாண்டு வருகிறது. சமீபத்தில் கேரளாவில் பெய்த கனமழை காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு ரெட் அலர்ட் விடப்பட்டது. இதையடுத்து கேரளத்தைச் சேர்ந்த சிலர் முல்லைப் பெரியாறு அணை உடையப்போவதாக பீதியைக் கிளப்பி பொய் பிரசாரங்களை மேற்கொண்டனர். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் 2014-ல் உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம் அணையில் 142 அடி வரை நீரைத் தேக்கலாம் எனவும், பேபி அணையைப் பலப்படுத்திய பிறகு 152 வரை உயர்த்திக்கொள்ளலாம் எனவும் உத்தரவில் கூறியிருந்தது. ஆனால் அணை பலவீனமாக இருப்பதாகக்கூறி கேரள அரசு 136 அடி மட்டுமே தண்ணீர் தேக்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
Also Read: முல்லைப் பெரியாறு அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்; கேரள அரசின் புதிய நாடகமா?
அந்த கடிதத்தில், "முல்லைப் பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு அதிகமாக இருப்பதால், வேகமாக நீர்மட்டம் உயர்ந்துவருகிறது. இதேப்போல நீர்வரத்து அதிகமானால் முல்லைப் பெரியாறு அணை வேகமாக நிரம்பி 142 அடியை எட்டும் நிலை ஏற்படும். எனவே, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க வேண்டும். முல்லைப் பெரியாறில் இருந்து தமிழ்நாட்டுக்குத் தேவையான தண்ணீரை முழுமையாக எடுத்துக்கொள்ளுங்கள். அதிலும் குறிப்பாக வைகை அணைக்கு எவ்வளவு நீரைக் கொண்டுசொல்ல முடியுமோ அந்த அளவு எடுத்துக்கொள்ளுங்கள். ஒருவேளை 142 அடியை எட்டிவிட்டால் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கேரளாவுக்கு நீர் திறக்கப்படுவதை 24 மணி நேரத்துக்கு முன்பாகத் தெரிவிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்று திருவனந்தபுரத்தில் ஒரு பொது நிகழ்ச்சியில் கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் கலந்து கொண்டார் அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``முல்லைப் பெரியாறு அணை மிகவும் பழமையானது. முல்லைப் பெரியாறில் புதிய அணை வேண்டும். மக்களின் கவலையை அரசுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறேன். முல்லைப் பெரியாறு விஷயத்தில் தமிழ்நாடு அரசுடன் நடக்கும் பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தண்ணீர் பிரச்னையில் நீதிமன்றங்கள்தான் நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும்" என்றார். புதிய அணை வேண்டும் என்ற கேரள கவர்னரின் பேச்சு தமிழக விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியையும், விவாதத்தையும் கிளப்பியிருக்கிறது.
இந்த நிலையில் முல்லைப் பெரியாறில் தண்ணீர் மட்டம் குறித்து திருவனந்தபுரம் மற்றும் இடுக்கியில் இன்று அதிகாரிகள் ஆய்வுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. மாலை 3 மணிக்கு தமிழக, கேரள உயர்மட்ட அதிகாரிகளின் அவசரக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
source https://www.vikatan.com/news/politics/article-about-kerala-governors-speech-on-mullai-periyaru-dam
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக