கோவை இந்திய விமானப்படை கல்லூரியில், பயிற்சிக்காகப் பல்வேறு பகுதிகளில் இருந்து இளம் அதிகாரிகள் வந்திருந்தனர். அப்போது, அமிதேஷ் ஹர்முக் என்ற ஃபிளைட் லெஃப்டினன்ட், ஒரு பெண் அதிகாரியை பாலியல் வன்கொடுமை செய்தார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட பெண் அதிகாரி போலீஸில் புகார் அளித்திருந்தார்.
Also Read: பணியிடத்தில் பாலியல் கொடுமை: விமானப்படை அதிகாரிக்கே இதுதான் நிலை; நீங்கள் தேசத்துக்குப் பாதுகாப்பா?
அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து அமிதேஷை போலீஸார் கைது செய்தனர். இதனிடையே, விமானப்படை தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், அமிதேஷை விமானப்படையிடம் ஒப்படைக்க கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அந்த உத்தரவை எதிர்த்தும், அமிதேஷை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டும், காவல்துறையினர் கோவை முதலாவது நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு முதன்மை நீதிபதி நாகராஜன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அமிதேஷை கோவை மாநகர போலீஸார் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதே நேரத்தில், ``அமிதேஷ் இந்திய விமானப்படையின் கட்டுப்பாட்டிலேயே இருப்பார். போலீஸார் முன் கூட்டியே தகவல் தெரிவித்து விட்டு, விமானப் படை அதிகாரியை விசாரிக்கலாம்.
தகவல் தெரிந்ததும், போலீஸார் விசாரணைக்கு ஏற்ற சூழலை விமானப்படை வளாகத்திலேயே ஏற்படுத்தித் தர வேண்டும். போலீஸ் விசாரணையின் போது விமானப் படை இடையூறு செய்யக்கூடாது. விசாரணை முடிந்த பிறகு, அந்த அறிக்கையை விமானப்படை அதிகாரிகளுக்கு ஒரு நகலும், நீதிமன்றத்தில் ஒரு நகலும் தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
``1950 விமானப்படை சட்டப்படி, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு இந்த வழக்கு விசாரணை ராணுவ நீதிமன்றத்தில்தான் நடக்கும். அந்தத் தீர்ப்பில் உடன்பாடு இல்லை என்றால், காவல்துறை மேல் முறையீடு செய்து கொள்ளலாம்” என்றும் கூறப்பட்டுள்ளது.
source https://www.vikatan.com/social-affairs/crime/coimbatore-court-permits-police-to-enquire-iaf-lieutenant-in-sexual-harassment-case
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக