விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், கடந்த 20-ம் தேதி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில், மாவட்ட ஊராட்சித் தலைவர், மாவட்ட ஊராட்சி துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், ஊராட்சி ஒன்றிய துணை தலைவர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல்கள் நேற்று முன்தினம் (22.10.2021) நடைபெற்றன.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியத்திற்கான 21 ஒன்றிய கவுன்சிலர் (ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்) பதவிகளை... திமுக - 16, அதிமுக - 3, விசிக - 2 என முறையே கைப்பற்றி இருந்தன. அதில் ஒருவராக, 17-வது வார்டில் போட்டியிட்டு வெற்றியை பெற்றிருந்தார் 22 வயதேயான இளம் பெண் சங்கீத அரசி. இவர், திமுக கட்சியின் மூத்த நிர்வாகிகளுள் ஒருவரான சிந்தாமணி ஜெயராமனின் பேத்தி.
இந்நிலையில் நேற்று முன்தினம் (22.10.2021), ஒன்றிய சேர்மன் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலிலும் தி.மு.க சார்பாக வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார் இந்த இளம் பெண். இவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி வெற்றியும் பெற்றுள்ளார்.
Also Read: ஒன்பது மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி; அசத்திய பிரியதர்ஷினி!
22 வயதிலேயே விக்கிரவாண்டி ஒன்றிய சேர்மனாக பொறுப்பேற்றுள்ள இளம் பெண் சங்கீத அரசியை தொடர்பு கொண்டு பேசினோம். ``நான் பி.எஸ்சி படித்துள்ளேன். என்னுடைய தாத்தா சிந்தாமணி ஜெயராமன், அறிஞர் அண்ணா, கலைஞர் அவர்களுடன் நெருங்கிப் பழகி தி.மு.க-வில் பணியாற்றி வந்தவர். என்னுடைய அப்பா ரவிதுரை, விக்கிரவாண்டி ஒன்றிய தி.மு.க செயலாளராக இருக்கிறார். நான் சிறு வயதில் இருந்தே அரசியல் குடும்பத்தில் வளர்ந்ததனால் அரசியல் மீது எனக்கும் ஆர்வம் இருந்து வந்தது.
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், விக்கிரவாண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட 17-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். விக்கிரவாண்டி ஒன்றிய சேர்மன் பதவி, பெண்களுக்காக ஒதுக்கப்பட்டு இருந்தது. அதனால், நான் அந்தப் பதவிக்காக மறைமுகத் தேர்தலில் நின்றேன். இப்போது அதில் வெற்றியும் பெற்றுள்ளேன்.
Also Read: ’பெருமாத்தாள் எனும் நான்..’ - ஊராட்சி மன்றத் தலைவராகப் பொறுப்பேற்ற 90 வயது பாட்டி!
இளம் வயதிலேயே எனக்கு இவ்வளவு பெரிய பொறுப்பு கொடுக்கப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. அதற்கு ஏற்றார்போல, அந்தப் பணியை நான் சிறப்பாகச் செய்வேன். முதலமைச்சர் அறிவிக்கும் எல்லா திட்டங்களையும் மக்களுக்கு நல்ல முறையில் கொண்டு சேர்ப்பேன். உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலாளர் உதவியுடன் எங்கள் மக்களுக்கு எல்லா திட்டங்களையும் செய்து கொடுப்போம்" என்றார் மகிழ்ச்சி பொங்க.
source https://www.vikatan.com/news/politics/a-22-yr-old-young-woman-has-been-elected-as-the-chairman-of-the-vikravandi-union
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக