சசிகலாவைக் கட்சியில் இணைத்துக்கொள்வது பற்றி கழக நிர்வாகிகள் முடிவெடுப்பார்கள்' என்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது கட்சிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. சசிகலாவை காட்டமாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்ததாலேயே, முக்குலத்தோர் சமூகத்தினரை சமாதானப்படுத்துவதற்காக பன்னீர் இப்படிப் பேசியதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள். இந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதும் பன்னீரை உஷ்ணமாக்கிவிட்டதாம். 'சசிகலா கால்ல யார் விழுந்தது?' என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கோபப்பட்டிருக்கிறார் அவர்.
Also Read: சசிகலா: அமமுக வரவேற்புடன் சுற்றுப்பயணம்; அதிமுகவை அசைக்குமா இந்தப் புதிய 'மூவ்'?
பசும்பொன்னிலுள்ள முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச் சிலைக்கு தங்கத்திலான கவசத்தை அ.தி.மு.க-வின் சார்பில் காணிக்கையளித்தார் ஜெயலலிதா. ஒவ்வொரு குருபூஜையின் போதும், அ.தி.மு.க-வின் பொருளாளர் இந்தத் தங்க கவசத்தை வங்கியின் லாக்கரிலிருந்து எடுத்து, தேவர் ஆலயத்தின் நிர்வாகிகளிடம் வழங்குவது வழக்கம். அந்த வகையில், தங்கக் கவசத்தை பெற்றுக் கொடுப்பதற்காக, நேற்று (அக்டோபர் 25-ம் தேதி) மதுரைக்கு வந்திருந்தார் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் கட்சியின் பொருளாளருமான பன்னீர்செல்வம். அப்போது, முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலர், சசிகலாவை காட்டமாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்தது குறித்து ஆவேசமாகப் பேசியிருக்கிறார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து வந்திருந்த மூத்த நிர்வாகி ஒருவர், ``எடப்பாடி பேசிகிட்டே போறாரு, நீங்களும் வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கீங்களேண்ணே. சசிகலாவுக்கும் நமக்கும் எந்த தொடர்பும் இல்லைனு சொல்லியாச்சுல. பிறகு ஏன் அவங்கள கேவலமா பேசணும். நம்ம சமுதாயத்தைச் சேர்ந்தவங்க எல்லாம் கொதிச்சுப் போயிருக்காங்க. ஊருக்குள்ள எங்களால தலைகாட்ட முடியல. 'கொங்கு மண்டலத்துகிட்ட விலை போய்ட்டீங்களா?'னு ஏளனம் பண்றாங்க. இந்தப் பிரச்னையை நீங்கதான் சரி செய்யணும்" என்று பன்னீரிடம் ஆவேசமாகப் பேசியிருக்கிறார். இதை, அருகிலிருந்த முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், மணிகண்டன் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும் ஆமோதித்திருக்கிறார்கள்.
ஏற்கெனவே, தன்னிடம் தகவல் தெரிவிக்காமல் ஆளுநர் ரவியை எடப்பாடி அன்ட் கோ சந்தித்ததில் பன்னீர் வருத்தமாக இருந்தார். சசிகலா குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவ்வப்போது 'கொசு, பூச்சி' என கமென்ட் அடிப்பதை நிறுத்தச் சொல்லியிருந்தார். ஆனால், யாரும் பன்னீர் கருத்தை சட்டை செய்யவில்லை. இந்தக் கடுப்பில் அவர் இருந்தபோதுதான், தங்கக் கவசம் பெறுவதற்காக மதுரைக்கு வந்திருந்த முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பன்னீரிடம் கோபத்தைக் கொட்டியிருக்கிறார்கள். ஆவேசம் முறுக்கேறிய பன்னீர், வங்கியை விட்டு வெளியே வந்தவுடன், 'சசிகலாவை கட்சியில் இணைப்பது குறித்து கழக நிர்வாகிகள் முடிவெடுப்பார்கள்' என்று குண்டை வீசினார்.
எடப்பாடியின் பேச்சால் ஆவேசமடைந்திருக்கும் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த சிலர், தேவர் குருபூஜைக்காக பசும்பொன்னுக்கு அ.தி.மு.க தலைவர்கள் செல்லும்போது, கருப்புக் கொடி காட்ட தீர்மானித்திருந்தார்களாம். அவர்களை சமாதானம் செய்யும் பொருட்டுத்தான், சசிகலாவுக்குச் சாதகமாகப் பன்னீர் பேசியதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள். பன்னீரின் கருத்துக்கு உடனடியாக ரியாக்ட் செய்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ``சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தியவர் பன்னீர் செல்வம். கழகத்தைச் சேர்ந்த யாரும் சசிகலாவுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று அவர்தான் சொன்னார். சசிகலாவுடன் தொடர்பில் இருப்பவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானமே நிறைவேற்றியிருக்கிறோம். அதில் பன்னீர் உட்பட அனைவரும் கையெழுத்திட்டிருக்கிறார்கள்" என்று தன் கட்சித் தலைவர் மீதே மறைமுகமாக விமர்சனத்தை முன்வைத்தார் ஜெயக்குமார். இதை பன்னீர் செல்வம் துளியும் எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
பன்னீர்செல்வத்துக்கு நெருக்கமான அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் ஒருவர் நம்மிடம் பேசுகையில், ``ஜெயக்குமாரின் துடுக்குத்தனமான பேச்சு பன்னீரை டென்ஷனாக்கியிருக்கிறது. ஒருகாலத்தில் சசிகலாவை நேரடியாக எதிர்த்து அரசியல் செய்தவர்தான் பன்னீர். தற்போது, கொங்கு மண்டலத்தின் ஆதிக்கம் கட்சிக்குள் மிகுந்திருப்பதாகக் கழக நிர்வாகிகள் கொதித்துப் போயிருக்கிறார்கள். இதனால், தென்மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளை சமாதானம் செய்ய வேண்டிய நெருக்கடி பன்னீருக்கு ஏற்பட்டிருக்கிறது. இப்போதும் தன்னுடைய பேட்டியில், 'இரட்டைத் தலைமை சரியாகச் செயல்படுகிறது' என்றுதான் அவர் கூறியிருக்கிறார். இந்த கட்டமைப்புக்குள் சசிகலா வருவதானால், அதைப் பரிசீலிக்கலாம் என்பதை மறைமுகமாகச் சொல்லியிருக்கிறார். இது எதுவுமே புரியாமல் ஜெயக்குமார் வாய்க்கு வந்ததைப் பேசியிருப்பது பன்னீரை கோபப்படுத்தியிருக்கிறது.
தனக்கு நெருக்கமான தென்மாவட்ட முன்னாள் அமைச்சர்கள் சிலரிடம், ``நான் சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தியது உண்மைதான். அவங்க தரப்பை கட்சியிலிருந்து நீக்கினால் மட்டுமே அணிகள் இணைப்பு சாத்தியம்னு சொன்னேன். அதன்படிதான் எல்லாமும் நடந்தது. ஆனால், சசிகலா கால்ல விழுந்து பதவி வாங்கியது யார்? நான் அம்மாவால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மூன்று முறை முதல்வராக இருந்தவன். அம்மாவைத் தவிர வேறு யார் காலிலும் நான் விழல. இன்னைக்கு ஜெயக்குமார் வந்து எனக்கு அரசியல் சொல்லித் தர்றாரா?" என்று ஆவேசமாகி இருக்கிறார். உடனிருந்தவர்கள்தான் அவரை சமாதானப்படுத்தி இருக்கிறார்கள்" என்றார் அந்த அமைப்புச் செயலாளர்.
கட்சிக்குள்ளும், முக்குலத்தோர் சமூகத்தினிடரிடமும் சரிந்துள்ள தன் இமேஜ்ஜை உயர்த்திப் பிடிக்கப் பார்க்கிறார் பன்னீர். இதற்காக, 'சசிகலா' என்கிற அங்குசம் மூலமாக எடப்பாடி பழனிசாமியைக் குத்த ஆரம்பித்திருக்கிறார் அவர். தன்னைச் சுற்றியிருப்பவர்களுக்காக அவர் செய்யும் அரசியல், அ.தி.மு.க-வுக்குள் அதகளத்தை உருவாக்கியிருக்கிறது. பிரதான எதிர்கட்சியாகச் செயல்பட வேண்டிய அ.தி.மு.க-வும் தன் பாதையை மறந்து, சசிகலா சுழலுக்குள் சிக்கியிருக்கிறது. இந்தக் குழப்பமான சந்தர்ப்பத்திற்காகவே காத்திருந்த சசிகலா, தென்மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் கிளம்பிவிட்டார். இப்படி நாலா பக்கமும் இடிவாங்க ஆரம்பித்திருக்கிறது பொன்விழா காணும் அ.தி.மு.க. எடப்பாடி தரப்பினரிடம் பன்னீருக்கு ஏற்பட்டிருக்கும் இந்தக் கோபம், சசிகலாவின் அ.தி.மு.க ரீ என்ட்ரிக்கு வழிவகுக்குமா? என்பது போகப் போகத் தெரிந்துவிடும்.
source https://www.vikatan.com/news/politics/article-about-paneer-selvam-speech-about-sasikala
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக