Ad

செவ்வாய், 26 அக்டோபர், 2021

இந்துக்கள் மனதைப் புண்படுத்தப்படுகிறதா `ஆஷ்ரம்' தொடர்? வலுக்கும் சர்ச்சைகள்!

ஆஷ்ரம் தொடரின் மூன்றாவது சீசனுக்கான ஷூட்டிங் நடைபெறும் இடத்தில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன. இந்தியாவின் தயாரிப்பாளர் கில்டு இச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. அதேசமயம், மாநில உள்துறை அமைச்சர் ஒருவரின் கருத்துகளும் சர்ச்சையாகி இருக்கின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, ஆஷ்ரம் வெப் சீரிஸின் ஷூட்டிங் நடைபெற்றுக்கொண்டிருந்த இடத்தை பஜ்ரங் தள் ஆதரவாளர்கள் சூறையாடினர். தயாரிப்பாளருமான இயக்குநருமான பிரகாஷ் ஜா மீது மை பூசப்பட்டது. தொடரில் நடிப்பவர்கள் சென்ற இரு பேருந்துகளைக் கற்கள் கொண்டு தாக்கியிருக்கின்றனர். இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவத் தொடங்கின.

இயக்குநர் பிரகாஷ் ஜா

பிரகாஷ் ஜாவுக்கு நிகழ்ந்திருப்பது வருத்தமானது என்னும் அதே வேளையில், சில ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற மற்றுமொரு சம்பவத்தையும் இப்போது நினைவுப்படுத்த வேண்டியதிருக்கிறது. 2016ம் ஆண்டு இந்தியாவில் நிகழும் அசாதாரண சூழலையொட்டி கரண் ஜோஹர், "இங்கு கருத்துச் சுதந்திரம் எனப் பேசுவதே காமெடியான ஒன்று. இரண்டாவது காமெடி ஜனநாயகம்" எனக் குறிப்பிட்டிருப்பார். அதற்குக் கருத்துத் தெரிவித்த பிரகாஷ் ஜா, "அது கரண் ஜோகரின் மனநிலையின் வெளிப்பாடு. நம் சமூகம் மிகவும் வலிமையாகயிருக்கிறது. இங்கு கருத்துச் சுதந்திரத்துக்கு எந்தப் பிரச்னையும் இல்லை" எனப் பதில் அளித்திருப்பார்.

இந்தியாவின் தயாரிப்பாளர் கில்ட் அதன் அறிக்கையில், "இது மாதிரியான வன்முறை சம்பவங்கள் நடப்பது முதல் முறை அல்ல. ஓர் இடத்துக்குச் சென்று ஷூட்டிங் நடத்துவது, அந்த இடத்தின் வருமானத்துக்கு உதவும். அந்த அடிப்படையில்தான் உலகம் முழுக்க, ஷூட்டிங் நடத்துவதற்கு அனுமதி அளிக்கிறார்கள். இத்தகைய இடங்கள் சுற்றுலாத் தலமாகவும் மாறும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், அப்படி ஷூட்டிங் நடக்கும் இடங்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் பாதுகாப்பு நல்குவது அவசியம். வன்முறையில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டிருக்கிறது.

கிட்டத்தட்ட மொட்டைக் கடுதாசி ஒன்றைத்தான் தயாரிப்பாளர் கில்ட் தந்திருக்கிறது என்பதுதான் இதிலிருக்கும் அவலம்.

பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான ஹன்சல் மேத்தா, தயாரிப்பாளர் கில்டின் அறிக்கையை காட்டமாக விமர்சித்திருக்கிறார். "யாரையும் குறிப்பிடாமல் இப்படியான அறிக்கைகளை வெளியிடுவதென்பது ஏமாற்று வேலை" எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக நான்கு நபர்களைக் கைது செய்திருக்கிறது மத்திய பிரதேச காவல்துறை.

Narottam Mishra | நரோத்தம் மிஸ்ரா

ஆனால். இந்த வன்முறை சம்பவத்தை மேலும் சர்ச்சையாக்கியிருக்கிறது மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ராவின் பேச்சு. "ஷூட்டிங்கிற்கான அனுமதி வாங்கும் முன்னர், ஒரு தொடரில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றனவா என அதிகாரிகளிடம் படக்குழுவினர் தெரிவிக்க வேண்டும். இந்தத் தொடரின் பெயரை மாற்ற வேண்டும் எனக் கருத்துத் தெரிவிப்பவர்களுடன் நானும் உடன்படுகிறேன். ஆஷ்ரம் போன்று வேறு பெயர்களை வைக்க துணிவிருக்கிறதா? பிரச்னைகள் உருவாக வேண்டும் என்பதற்காகவே இப்படியான விஷயங்களை செய்யாதீர்கள். ஆஷ்ரம் செட்டில் நடந்த வன்முறை சம்பவங்கள் கண்டிக்கத்தக்கது. நான்கு நபர்களைக் கைது செய்திருக்கிறோம். அதே சமயம், தான் செய்வது தவறு என்பதை எப்போது பிரகாஷ் ஜா போன்றவர்கள் உணரப்போகிறார்கள்?" எனக் காட்டமாகக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இந்தியாவில் கலை படைப்புகளுக்கென தனியாக சென்சார் என்கிற அமைப்பிருக்கிறது. அதுபோக, மத்திய அரசு, புதிதாக கொண்டு வரும் ஒளிப்பதிவு திருத்தச் சட்டவரைவிலும் சூப்பர் சென்சார் போன்றதொரு விஷயத்தை அமல்படுத்தவிருக்கிறது. அதற்கே கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், தற்போது மத்திய பிரதேச அமைச்சரும், எடுக்கப்படும் படங்கள் மற்றும் தொடர்களில் சர்ச்சைக்குரிய பகுதிகள் இருக்கின்றனவா என முன்னரே தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவித்திருப்பது படைப்புச் சுதந்திரத்துக்கு எதிரானது. இந்திரா காந்தியின் எமர்ஜென்சி காலத்தில் இருந்த நடைமுறை எல்லாம் மீண்டும் ஆளும் அரசுகள் கொண்டு வருகின்றனவா என்னும் சந்தேகம் இயல்பாகவே எழுகிறது.

சாத்வி பிரக்யா

அமைச்சரின் கருத்துக்களைப் போலவே, பா.ஜ.க எம்பி பிரக்யாவின் கருத்துகளும் சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கின்ற்ன. "சனாதன தர்மத்தின் படி ஆஷ்ரம் என்பது சாதுக்கள் இருக்கக்கூடிய இடம். அதைத் தவறான இடமாகச் சித்திரிக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது. ஒரு மனிதர் தவறு செய்தால் அவரைத்தான் தண்டிக்க வேண்டும். அதைவிடுத்து, சனாதன தர்மத்தின் கீழ் செயல்படும் ஆஷ்ரமத்தை சிறுமைப்படுத்துவதை என்றும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆஷ்ரமத்தையோ, இந்துக்களையோ, மதத் தலைவர்களையோ சிறுமைப்படுத்துவதை நாங்கள் ஒருநாளும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். பொழுதுபோக்கு என்கிற பெயரில் சனாதன தர்மத்தை கேலிப் பொருளாக்கிவருகிறார்கள். கைது செய்யப்பட்ட நால்வரையும் விடுவிக்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

இந்தப் பிரச்னை மற்றும் அது தொடர்பான வாதங்கள் குறித்து உங்களின் கருத்து என்ன? கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.


source https://www.vikatan.com/social-affairs/bollywood/ashram-3-sets-vandalized-does-the-series-hurt-hindu-sentiments

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக