பசித்த பிறகு சாப்பிடுவது சரியா..? பசிக்கிறதோ, இல்லையோ... சரியான நேரத்துக்கு சாப்பிட வேண்டும்... இல்லையென்றால் அல்சர் வரும் என்ற அறிவுரை சரியா.... விளக்கவும்.
- மனோகர் (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.
``பசித்தபிறகு சாப்பிடுவதுதான் எப்போதும் சரியானது. பாரம்பர்ய முறைப்படியும், ஆயுர்வேத முறைப்படியும் இதுதான் ஆரோக்கியத்துக்கு உகந்ததாகச் சொல்லப்படுகிறது. காலை உணவோ, மதிய உணவோ, இரவு உணவோ எதுவானாலும் அது செரிமானமாக குறைந்தது 3 மணி நேரமாவது ஆகும். எனவே அதன்பிறகு அடுத்த வேளை உணவைச் சாப்பிடுவதுதான் சரியானது.
ஆனால் சிலருக்கு அசிடிட்டி எனப்படும் அமிலம் சுரக்கும் பிரச்னை இருக்கும். அதனால் அவர்களுக்கு அல்சர் வரும் வாய்ப்பும் இருக்கும். அது தவிர நீரிழிவு உள்ளவர்கள், நீரிழிவுக்காக இன்சுலின் எடுத்துக்கொள்பவர்கள், அஜீரணம், அசிடிட்டி பிரச்னை உள்ளவர்கள் போன்றோர் ஒருவேளை உணவுக்கும் அடுத்த வேளை உணவுக்கும் இடையே நீண்ட நேரம் இடைவெளி விடுவதைத் தவிர்க்க வேண்டும். இன்னும் சிலருக்கு விரதம் இருப்பதே சாத்தியமில்லை என்ற நிலை இருக்கும்.
Also Read: Doctor Vikatan: எப்போதும் சோர்வு; நன்றாகத் தூங்கி எழுந்த பிறகும் தொடரும் தூக்கம்; என்னவாக இருக்கும்?
இவர்கள் `என்னால் ஒருவேளைகூட சாப்பிடாமல் இருக்க முடியாது. அப்படி இருந்தால் மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலியோ, வாந்தி, மயக்கம் போன்றவையோ வந்துவிடும்' என்பார்கள். இவர்களும் உணவின் இடையே நீண்டநேர இடைவெளியைத் தவிர்க்க வேண்டும். மற்றவர்கள் பசித்த பிறகு சாப்பிடலாம்.
சூரியன் உதிக்கும்போதும் சூரியன் மறையும்போதும்தான் நம் செரிமான ஆற்றல் மிகச் சிறப்பாக இருக்கும். எனவே காலையும் மதியமும் நன்றாகச் சாப்பிட்டுவிட்டு, இரவு உணவை மிதமாகவும், 7 மணிக்குள்ளும் சாப்பிடும்போது செரிமானம் சீராக இருக்கும். சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு சாப்பிடுவதில்லை என்ற கொள்கையோடு இன்றும் சில சமூகத்தினர் இருப்பதைப் பார்க்கலாம். அந்த உணவுமுறைதான் இன்று `இன்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்' என்ற பெயரில் பிரபலமாகி வருகிறது. மிகச் சிறப்பான இந்த உணவுமுறை, உண்மையில் நம் பார்ம்பர்யத்தில் ஒன்றாக அந்தக் காலத்திலேயே இருந்திருக்கிறது.
Also Read: Doctor Vikatan: வெயிட்டும் குறைய வேண்டும், மஸிலும் வேண்டும்; இதற்கு நான் என்ன வேண்டும்?
இப்போதெல்லாம் பலரும் நள்ளிரவு வரை விழித்திருந்து வேலை பார்க்கிறார்கள். அதிகாலையில் தூங்கச் செல்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் சாப்பாட்டுக்கும், தூக்கத்துக்கும் இடையிலான வேளையில் பசிப்பதுபோல உணர்ந்தால் இரண்டு துண்டு டார்க் சாக்லேட் (சர்க்கரை சேர்க்காதது) சாப்பிடலாம். கஞ்சி, ஸ்மூத்தி, மஞ்சள்தூளும் பட்டைத்தூளும் சேர்த்துக் காய்ச்சிய பால் போன்றவற்றில் ஒன்றை எடுத்துக்கொள்ளலாம். இது பசி உணர்வைக் கட்டுப்படுத்தும். மியூஸ்லி (Muesli) எடுத்துக்கொள்ளலாம். தர்பூசணி போன்ற நீர்ச்சத்துள்ள பழம் சிறிது அல்லது ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம்."
உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
source https://www.vikatan.com/health/healthy/eating-when-feeling-hungry-or-eating-on-time-which-is-best
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக