காரைக்கால் மாவட்ட பாமக செயலாளர் தேவமணி நேற்றிரவு (22.10.2021 ) சுமார் 10.20 மணிக்கு திருநள்ளாரில் அவரின் வீட்டின் அருகிலேயே படுகொலை செய்யப்பட்டார். இதனால் காரைக்கால் மாவட்டம் முழுவதும் பதற்றம் நிலவுகிறது.
தேவமணி திருநள்ளாறு கடைவீதியில் உள்ள கட்சி அலுவலகத்திலிருந்து இரவு 10 மணிக்கு மேல் வீடு திரும்புவது வழக்கம். அந்த வகையில் நேற்று குமார் என்பவர் டூவீலர் வாகனத்தை ஓட்ட, பின்னால் அமர்ந்து சென்றுள்ளார் தேவமணி. அப்போது 3 பைக்குகளில் வந்த 6 பேர் கொண்ட கூலிப்படையினர், இவர்களை வழிமறித்து பின்பக்கமாக தேவமணியை வெட்ட தேவமணி கீழே விழுந்திருக்கிறார். கால் இடறி விழுந்தவரை சரமாரியாக வெட்டி கொன்றுள்ளனர். டூவீலரை ஓட்டிவந்த குமார் கீழே விழுந்து எழுந்தபோது, அவரை அரிவாளால் மிரட்ட அவர் தப்பி ஓடியிருக்கிறார். இந்தப் படுகொலையை செய்துவிட்டு 3 பைக்குகளில் கொலையாளிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பேசும் விவரம் அறிந்த சிலர், தனக்கு சொந்தமான இடத்தை ஒருவருக்கு வாடகை இல்லாமல் கொடுத்திருக்கிறார் தேவமணி. அந்த இடத்தில் வீடு கட்டி ஓட்டல் நடத்திவந்த அந்த நபர், கடந்த தேர்தலில் தேவமணியின் அரசியல் எதிரியான முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் பக்கம் சென்றுவிட, அந்த வருத்தத்தில் தேவமணி இடத்தை திரும்ப கேட்டிருக்கிறார்.
அந்த நபரோ கொடுக்க மறுத்திருக்கிறாராம். இந்த பிரசனையில் அந்த இடம் இருவரும் பிரவேசிக்காமல் , காவல்துறையினர் தலையிட்டு சீல் வைத்து, கோர்ட் மூலம் தீர்த்துக்கொள்ள சொல்லி விட்டார்கள்.
இது தவிர தேவமணி மது அருந்தமாட்டார். மது விற்பனைக்கு எதிரான கட்சிக் கொள்கையை கடைபிடித்து சட்டப் போராட்டம் நடத்தி சுமார் 50 -க்கும் மேற்பட்ட சாராயம் , மற்றும் மதுபானக் கடைகளை மூட வைத்திருக்கிறார். இட பிரச்னை அல்லது மதுபான விற்பனையை தடுத்த பிரச்னை எதனால் இந்தக் கொலை நடந்தது என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்’ என்கிறார்கள். இதனிடையே கொலையாளியை கைது செய்தால்தான் தேவமணி உடலைப் பெற்றுக் கொள்வோம் என பா.ம.க.வினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் பதற்றம், கலவரத்தை தடுக்க திருநள்ளாறு பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
source https://www.vikatan.com/news/crime/assassination-of-karaikal-pmkdistrict-secretary-devamani
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக