காடர்கள் அணி ‘இம்யூனிட்டி சவாலில்’ தோற்றதால் ட்ரைபல் பஞ்சாயத்தை நேற்று எதிர்கொள்ள நேர்ந்தது. வழக்கமான சம்பிரதாயமாக நடக்கும் இந்தச் சடங்கை காடர்கள் விறுவிறுப்பாக மாற்றினார்கள். அந்த அளவுக்கு ட்விஸ்ட்கள் இதில் நடந்தன. இதன் கிளைமாக்ஸில் அம்ஜத் போட்டியில் இருந்து எலிமினேட் ஆனார் என்பதுதான் நேற்றைய எபிசோடின் ஹைலைட்.
ஆனாலும் காடர்களின் அணிப்பாசமும் சென்டிமென்ட்டும் ‘ரொம்ப ஓவராப் போகுது. ‘’எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’’ என்று அவர்கள் பாடும் பாடல் எங்கே போய் சேர்க்குமோ?
சர்வைவர் 43-ம் நாளில் என்ன நடந்தது?
ட்ரைபல் பஞ்சாயத்தில் ‘யாரை எலிமினேட் செய்யலாம்?’ என்று காடர்கள் மிக மும்முரமாக விவாதம் செய்து கொண்டிருந்தார்கள். தங்களில் இருந்து ஒருவரையும் விட்டுக் கொடுக்கக்கூடாது என்று பழைய அணி உறுதியாக தீர்மானித்துக் கொண்டது. சென்டிமென்ட் என்பதைத் தாண்டி இது மிக அபத்தமான முடிவு. லேடி காஷூம், வனேசாவும் டாஸ்க்குகளில் எத்தனை பலவீனமாக இருக்கிறார்கள்; சொதப்புகிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியும். ஒரு கட்டத்தில் விக்ராந்த்தும் இதை உமாபதியிடம் சொல்லிக் கொண்டிருந்தார். எனில் அவர்களில் இருந்து ஒருவரை வெளியேற்றலாம். ஆனால் பாசம் தடுக்கிறதாம்.
‘எப்படியும் இது தனிநபர் ஆட்டமாக மாறப் போகிறது. அப்போது பார்த்துக் கொள்ளலாம். அதுவரை நாங்கள் ‘லாலாலா’ பாடிக் கொண்டிருப்போம்’ என்று காடர்கள் (பழைய) அணி முடிவு செய்வதின் விலையை அவர்கள் சீக்கிரம் தரப் போகிறார்கள் என்று தோன்றுகிறது. வலிமையானவர்களான அம்ஜத்தையும் லட்சுமியையும் அனுப்பி விட்டு பலவீனமான போட்டியாளர்களை பாதுகாத்து வைப்பதில் என்ன உபயோகம்? தனிமனித பாசம் வேறு. அணியின் முன்னேற்றம் வேறு.
Also Read: பிக் பாஸ் - 22 | அடக்கம் அமரருள் உய்க்கும்… அடங்காமை அபிஷேக்குகளை ஆட்டத்தை விட்டே அகற்றும்!
இன்னொரு விஷயம், அம்ஜத்தும் லட்சுமியும் காடர்கள் அணிக்கு பிறகு மாறியது உண்மைதான். ஆனால் எப்போது அவர்கள் அணியில் சேர்ந்து விட்டார்களோ, அப்போதே அவர்களை காடர்களின் ஒரு பகுதியாக பார்ப்பதுதான் முறையானது. ஆனால், அணியில் ஆரம்பத்தில் இருந்தே இருப்பவர்கள், புதிதாக வந்து சேர்பவர்கள் என்கிற பாகுபாட்டை இரண்டு அணிகளுமே பார்க்கின்றன. இது ஒருவகையில் மனிதனிடமிருந்து பிரிக்க முடியாத குணாதிசயம். வனேசாவும் இடையில் வந்தவர்தான். ஆனால் அவர் விதிவிலக்காம்.
லட்சுமியிடம் இம்யூனிட்டி ஐடல் இருப்பது காடர்கள் பழைய அணியின் கண்களை உறுத்துகிறது. அவர் முதலில் இதை சொல்லாமல் மறைத்து விட்டாரே என்கிற மெல்லிய கோபமும் இவர்களுக்குள் இருக்கிறது. லட்சுமி தன்னைக் காப்பாற்றிக் கொள்வார் என்பது அனைவருக்கும் தெரியும். இதற்காக அனைவருமே லட்சுமிக்கு எதிராக வாக்களித்து அணியை அப்படியே பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும் முடியாது. லட்சுமிக்கு எதிராக அளிக்கப்படும் வாக்குகள் அனைத்தும் செல்லாததாக மாறும் போது மீண்டும் வாக்கெடுப்பு நடந்தே தீரும். யாராவது ஒருவர் எலிமினேட் ஆனால்தான் ‘ட்ரைபல் பஞ்சாயத்து’ நிறைவுறும். ‘அப்போது என்னதாம்ப்பா செய்யறது?’ என்கிற குழப்பத்தில் காடர்கள் அணி தடுமாறிக் கொண்டிருந்தது.
‘‘அம்ஜத்தையும் லட்சுமியையும் வெளியேற்ற போதுமான காரணங்கள் எங்களுக்குத் தெரியவில்லை என்பது உண்மைதான். ஆனால் எங்கள் அணியின் பாசம்தான் முக்கியம்’’ என்று சொல்லிக் கொண்டிருந்தார் வனேசா. இதையேதான் லேடி காஷூம் நினைக்கிறார். ஆனால் தாங்கள்தான் அணியில் பலவீனமானவர்கள் என்பது இந்த இருவருக்கும் தெரியும். எனவே தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அணிப்பாசத்தை முன்வைக்கிறார்கள் என்று தோன்றுகிறது.
Also Read: சர்வைவர் 42: அட்வான்டேஜா, அதுல ஒண்ணுமில்ல, கீழ போட்டுருங்க... வேடர்கள் இம்யூனிட்டி ஜெயித்தது எப்படி?
தங்களைத்தான் டார்கெட் செய்வார்கள் என்பது லட்சுமிக்கும் அம்ஜத்துக்கும் தெரிந்திருக்கிறது. எனவே இவர்கள் வனேசாவுக்கு எதிராக வாக்களிக்கலாமா என்று யோசிக்கிறார்கள். விக்ராந்த்தும் உமாபதியும் பலமான போட்டியாளர்கள் என்பதால் அவர்களை எதிர்த்து வாக்களிக்க முடியாது. அது நியாயமும் இல்லை.
தனித்தனியாக கூடிப் பேசிய இவர்கள் பிறகு அணியாக நின்று விவாதித்தார்கள். “இங்கயே தெளிவா, நேர்மையா முடிவு பண்ணிப்போம். இங்க ஒண்ணு... பஞ்சாயத்துல ஒண்ணுன்னு கேம் ஆட வேண்டாம்” என்கிற சரியான முன்னுரையுடன் விக்ராந்த் உரையாடலை தொடக்கி வைத்தார். ‘‘ஒவ்வொருத்தருக்கும் உள்ள என்ன தோணுதோ அதை வைத்து வாக்களிக்கலாம்’’ என்று அம்ஜத் சொன்னதை அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள். “ஏதாவதொரு மேஜிக் நடக்கும்’’ என்கிற நம்பிக்கையில் இருந்தார் அம்ஜத். ஆனால் அந்த மேஜிக் அவருக்கு எதிராகத்தான் நடந்தது.
ட்ரைபல் பஞ்சாயத்து ஆரம்பித்தது. “தொடர்ந்து வெற்றி பெற்று வந்தீங்க... ஆனா இப்ப தோல்வி ஏன்?’’ என்று டீம் லீடர் லேடி காஷை நோக்கி கேள்வி கேட்டு பஞ்சாயத்தை ஆரம்பித்தார் அர்ஜூன். “அணியில் சிலருக்கு நீச்சல் தெரியல” என்று அம்ஜத்துக்கு குறி வைத்த லேடி காஷ் “குச்சி எடுக்கும் போது கயிறு என் கால்ல மாட்டிக்கிச்சு... குச்சியும் கீழே விழுந்துடுச்சு… என்னால திரும்ப முடியல” என்கிற விபத்தையும் கூடவே சொன்னார்.
“லேடி காஷ் ஆட்டத்திலிருந்து வெளியேறியதால் பாதிப்பு ஏற்பட்டதா?” என்று உமாபதியிடம் கேட்கப்பட்ட போது, அவர் வனேசா செய்த தாமதத்தை வெளிப்படையாகச் சொன்னது சிறப்பு. “ஆமாம் சார்... நான் ஒத்துக்கறேன். என்னால கயிற்றை அவிழ்த்து குச்சிகளை இணைக்க முடியலை” என்று நேர்மையான வாக்குமூலம் தந்தார். வனேசாவின் தாமதம், லேடி காஷின் குச்சி இல்லாதது போன்ற காரணங்களினால் தங்களின் தோல்வியை முன்பே உணர முடிந்ததாக உமாபதி சொன்னார்.
“ஓவர் கான்ஃபிடன்ஸா ஆயிட்டிங்களோ?” என்று அடுத்த கேள்வியை அர்ஜூன் முன்வைக்க “இல்ல சார்... நாங்க எப்பவுமே சிரிச்சிக்கிட்டேதான் டாஸ்க் பண்ணுவோம். அது எங்க ஸ்டைல்” என்றார் உமாபதி. எதிர் அணியை வெறுப்பேற்றும் வகையில் உமாபதி attitude காட்டுகிறாரா என்கிற கேள்வியை அடுத்ததாக முன்வைத்தார் அர்ஜூன். “இல்ல சார்... எங்க வெற்றியைத்தான் நாங்க கொண்டாடுகிறோம். அவர்களை சீண்ட வேண்டும் என்கிற நோக்கம் இல்லை” என்று பதிலளித்தார் உமாபதி. “இது part of the game’தான். என்றாலும் உமா செய்வது எனக்கே சமயங்களில் ஓவராகத் தெரிந்தது. எனவே ‘அடக்கி வாசி’ என்று சொன்னேன். ஆனால் எதிரணியும் இவ்வாறுதான் செய்கிறது. முதல் வெற்றியின் போது ரவியும் நந்தாவும் மிகையாக உற்சாகம் காட்டினார்கள். அவங்க நிறுத்தினா நாங்களும் நிறுத்துவோம்” என்று லாஜிக் பேசினார் விக்ராந்த்.
“மனிதாபிமானம் பத்தி ஏதோ பேசிட்டு இருந்தீங்களே?” என்று அடுத்ததாக விக்ராந்தின் வாயைக் கிளறினார் அர்ஜூன். “லேடி காஷ் நீரில் மூழ்கி அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். நாங்கள் உதவப் போனோம். ஆனால் ஃபவுல் ஃபவுல்’’ என்று ஐஸ்வர்யா கத்தினார். அவர் இவ்வாறு செய்வது மூன்றாவது முறை. அந்தச் சூட்டில் எதையும் தப்பா சொல்லிடக்கூடாதுன்னு நான் என்னைக் கட்டுப்படுத்திக்கிட்டேன். நானே இந்த விஷயத்தை உங்க கிட்ட சொல்லணும்னு இருந்தேன். ஐஸ்வர்யா செய்யறது தப்பு சார்” என்றார் விக்ராந்த்.
‘ஃபவுல்’ என்று கத்தும் விஷயத்தை காடர்களும்தான் செய்கிறார்கள். இந்த டாஸ்க்கில் கூட முதலில் ஆரம்பித்தவர் லட்சுமிதான். இதில் ஒன்றும் பிழையில்லை. ஆனால் மனிதாபிமான அடிப்படையில் செய்யப்படும் உதவிகளைக் கூட ‘Foul’ என்று ஆட்சேபிப்பது முறையானதல்ல. ‘இந்த அனுதாபம் காடர்களுக்கு சாதகமாகி, தாங்கள் தோற்று விடுவோமோ என்கிற பதற்றம் ஐஸ்வர்யாவிற்கு ஏற்பட்டிருக்கலாம்.
“உங்க அணில இருந்த சரண் இப்போ அங்க லீடரா இருக்காரு... முதல் வெற்றியும் பெற்றுட்டாரு... என்ன நினைக்கிறீங்க?” என்று காடர்களின் வாயைப் பிடுங்க முடியுமா என்று முயற்சித்தார் அர்ஜூன். “தம்பி நல்லா இருக்கட்டும்... என்ன இப்ப?” என்று காடர்கள் வாழ்த்து தெரிவித்தாலும் சரணின் மீதுள்ள கோபம் அவர்களிடம் இன்னமும் மறைவில்லை என்பது தெரிந்தது. ஆனால் சரணின் மீதுள்ள அதே புகார்கள் தங்களின் மீதும் இருக்கிறதே என்பதை காடர்கள் செளகரியமாக மறந்து விடுகிறார்கள்.
காடர்கள் கூட சரணை மன்னித்து விட்டு விடுவார்கள் போலிருக்கிறது. ஆனால் லட்சுமி அத்தனை எளிதில் விட்டு விடத் தயாராக இல்லை. “இரண்டாவது வாரத்தில் சரணை ஏன் தப்பிக்க விட்டார்கள் என்று புரியவில்லை. ‘தன் உடல் வலி’ பற்றி ரவி முதல் வாரத்திலிருந்தேதான் சொல்லி வருகிறார். எனில் குறிப்பிட்ட வாரத்தில் மட்டும் அவரை அனுப்பும் சூழல் எவ்வாறு ஏற்பட்டது?” என்பது லட்சுமியின் ஆட்சேபம். அவரது கோபம் சரணின் மீது என்பதை விடவும் நந்தாவின் மீதுதான் என்பது வெளிப்படை. ஆனால் எதிர்அணிக்கு லட்சுமி மாறி விட்ட பிறகு ‘வேடர்கள் அணியில்’ என்னென்ன நடந்திருக்கும் என்பது அவருக்கு முழுவதும் தெரிய நியாயமில்லை. எனில் அரைகுறை யூகங்களை வைத்துக் கொண்டு லட்சுமி இத்தனை ஆட்சேபம் தெரிவிப்பது முறையானதல்ல.
‘’இனிகோவை அவங்க நம்பமாட்டேங்கறாங்களே” என்று அடுத்த பாயின்ட்டை எடுத்துக் கொடுத்தார் அர்ஜூன் “அவரு அங்க நல்லாத்தான் விளையாடறாரு. இன்னமும் என்னதான் பண்றது. ரவிதான் குழப்பி விட்டுட்டு போயிருக்காரு” என்பது உமாபதியின் ஆதங்கம்.
“வேடர்கள் இனிகோவை பாராமுகமாக நடத்துவதில் எனக்கு ஆச்சரியமில்லை. எனக்கு அவர்களைப் பற்றி நன்கு தெரியும்” என்று ஆரம்பித்த லட்சுமி, ஒரு அரசியல்வாதியைப் போல தனது முன்னாள் அணியில் இருக்கும் குறைபாடுகளைப் பற்றி பெரிய பட்டியலாக வாசித்தார். பிறகு அம்ஜத்தும் இதில் இணைந்து கொண்டார். ‘வேடர்கள் அணியில் நந்தாதான் சர்வாதிகாரியாக இருக்கிறார் என்பதும் முடிவுகளை அவர் தன் விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொண்டே இருப்பார் என்பதும் உட்கட்சி ஜனநாயகம் அங்கு சுத்தமாக இல்லை’ என்பதும் இவர்களின் குற்றச்சாட்டு.
Also Read: மாஸ்டர் செஃப்: ஓஹோ... தோனிக்குப் பிடிச்ச ஸ்வீட் இதானா? எலிமினேட்டான சுமித்ரா செய்த தவறு என்ன?!
“இது ஏதோ வேடர்களோட பஞ்சாயத்து மாதிரி ஆயிடுச்சே?”என்று சரியான வார்த்தைகளில் குறிப்பிட்டார் அர்ஜூன். ஆம் உண்மைதான். அந்த அளவுக்கு வேடர்களின் மீதான புகார் பட்டியல் பெரியதாக வாசிக்கப்பட்டது. இதில் மெயின் டார்கெட் நந்தாதான். ஆனால் இப்படி பேச காடர்களைத் தூண்டி விட்டதே அர்ஜூனின் கேள்விகள்தானே?! (பிள்ளையையும் கிள்ளி விட்டு விட்டு …..).
“இதெல்லாம் சரி... காடர்கள் நீங்க இவ்வளவு ஒற்றுமையா இருக்கறதெல்லாம் ஓகே... ஆனா ஒரு கட்டத்துல கேம் மாறும். தனிநபர் ஆட்டமா மாறுமே... அப்ப என்ன செய்வீங்க?” என்று முக்கியமானதொரு கேள்வியைக் கேட்டார் அர்ஜூன். காடர்கள் அணி ‘லா...லா...லா’ பாடலை நீண்ட நாட்கள் பாடிக் கொண்டிருக்க முடியாது என்பதுதான் நிதர்சனம். “அப்போ பார்த்துக்கலாம் சார். அதையெல்லாம் முன்னாடியே பேசிட்டோம். போட்டியையும் மீறி நட்பா இருப்போம்” என்றார் விக்ராந்த். அதையும்தான் பார்ப்போமே?!
‘’ஓகே... வோட்டிங் போயிடலாம்” என்று அந்தச் சம்பிரதாயத்தை துவக்கி வைத்தார் அர்ஜூன். இந்தச் சமயத்தில் லேடி காஷ் தான் வைத்திருந்த ‘Secret advantage’-ஐ காட்டினார். இதன் படி அவர் இரண்டு வாக்குகள் அளிக்க முடியும். இதை அவர் அம்ஜத்திடமும் லட்சுமியுடமும் சொல்லாமல் ரகசியமாக வைத்திருந்தார் போலிருக்கிறது. எனவே இருவரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.
இம்யூனிட்டி ஐடல் யார்கிட்டயாவது இருக்கா?” என்று கேட்டவுடன் லட்சுமி என்ன செய்யப் போகிறார் என்று தோன்றியது. அவர் கையைத் தூக்கி தன்னிடம் இருப்பதை ஒப்படைத்தார். எனில் அவர் பாதுகாப்பாக இருப்பார். அவருக்கு அளிக்கப்படும் வாக்குகள் செல்லாது.
வாக்களிப்பு முடிந்து முடிவுகள் வந்தன. இதில் அம்ஜத்துக்கும் வனேசாவுக்கும் எதிராக 2 வாக்குகள் வந்திருந்தன. எனவே முடிவு எட்டப்படாமல் சமன் ஆகியது. வனேசாவுக்கு எதிராக லட்சுமியும் அம்ஜத்தும் வாக்களித்திருப்பார்கள் என்பது வெளிப்படை. ‘’அம்ஜத்துக்கு எதிராக தன்னால் வாக்களிக்க முடியாது” என்று சொன்னது லட்சுமியின் நேர்மையைக் காட்டுகிறது. இதேபோல் லட்சுமியை விட்டுத்தர அம்ஜத் தயாராக இல்லை.
வாக்கெடுப்பு டை ஆகியதால் மறு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அம்ஜத், வனேசா தவிர மற்ற நால்வரும் வாக்களிக்க வேண்டும். இதிலும் டை ஏற்பட்டால் குலுக்கலின் மூலம் ஒருவர் வெளியேறுவார். இந்த மறு வாக்கெடுப்பில் அம்ஜத்துக்கு எதிராக மூன்று வாக்குகள் விழுந்தன. வனேசாவுக்கு எதிராக ஒரு வாக்கு வந்தது. (இதை லட்சுமிதான் இட்டிருப்பார்).
ஆக காடர்கள் தங்களின் அணி பாசத்தை நிரூபித்து விட்டார்கள். போலவே லட்சுமியும் அம்ஜத்தும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்தார்கள். இதிலிருந்த வித்தியாசம் என்னவென்றால் லட்சுமியும் அம்ஜத்தும் அணிக்கு முக்கியமானவரகள். ஆனால் காடர்களின் அணிப்பாசம் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தக்கூடியது.
லேடி காஷின் கூடுதல் வாக்கு, லட்சுமியின் இம்யூனிட்டி ஐடால் ஆகிய இரு விஷயங்களும் இந்த ‘டிரைபல் பஞ்சாயத்தில்’ சுவாரஸ்யத்தைக் கூட்டின. “வேடர்கள் அணியில் ஒருவர் வென்றால் அது நானே வென்றது மாதிரி” என்கிற வாழ்த்துடன் விடைபெற்றுச் சென்றார் அம்ஜத். அவர் அங்கிருந்து மூன்றாம் உலகத்திற்கு பயணப்படுவார்.
அம்ஜத்தை இழந்தது காடர்களின் புத்திசாலித்தனமான முடிவுதானா, வரும் வாரங்களில் இதற்கான பாதிப்புகள் தெரியுமா?
பார்த்துடுவோம்!
source https://cinema.vikatan.com/television/survivor-tamil-reality-show-43rd-episode-review
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக