Ad

திங்கள், 25 அக்டோபர், 2021

USGP: டைட்டில் ரேஸில் பின்தங்கிய ஹாமில்ட்டன்... சீறிப்பாயும் வெர்ஸ்டப்பன் வென்றது எப்படி?!

மெர்சிடீஸின் ஹாமில்ட்டனை விட 1.333 நொடிகள் முன்னதாக ரேஸை முடித்து யுனைடைட் ஸ்டேட்ஸ் கிராண்ட் ப்ரீயை வென்றிருக்கிறார் வெர்ஸ்ட்டப்பன். இதன் மூலம் சாம்பியன்ஷிப் ரேஸிலும் ஹாமில்ட்டனை விட 12 புள்ளிகள் அதிகம் பெற்றிருக்கிறார். யுனைடைட் ஸ்டேட்ஸின் COTA (Circuit of the Americas) ட்ராக்கில் நேற்றைய போட்டி நடந்து முடிந்தது. COTA ட்ராக்கில் கடந்த ஆறு முறை நடந்த போட்டிகளில் 5-ல் வெற்றி பெற்றிருக்கிறது மெர்சிடீஸ். ரெட்புல்லோ 2013-ல் தான் கடைசியாக இந்த ட்ராக்கில் வெற்றி பெற்றிருந்தது. ஹாமில்ட்டன் இந்த ட்ராக்கில் 5 முறை வெற்றி பெற்றிருந்ததனால், இந்த முறையும் ஹாமில்ட்டனுக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது. அதனை முறியடித்து மெர்சிடீஸின் கோட்டையாக இருந்த COTA-வில் வெற்றி வாகை சூடியிருக்கிறார் வெர்ஸ்ட்ப்பன்.

யுனைடட் ஸ்டேட்ஸ் கிராண்ட் ப்ரீ வெற்றியாளர்கள்

வெர்ஸ்டப்பன் 'போல்' பொசிஷனிலும், ஹாமில்ட்டன் இரண்டாவது இடத்தில் இருந்தும் போட்டியைத் தொடங்கியிருந்தனர். போட்டி தொடங்கி முதல் திருப்பத்திலேயே வெர்ஸ்ட்டப்பனை முந்தி முதலிடத்துக்கு விரைந்தார் ஹாமில்ட்டன். மீடியம் டயர்களில் போட்டியைத் தொடங்கியிருந்த வெர்ஸ்ட்ப்பன் யாரும் எதிர்பாராத விதமாக 10-வது லேப்பிலேயே பிட் எடுத்து ஹார்டு டயருக்கு மாறினார். 14-வது லேப்பில் ஹாமில்ட்டன் பிட் எடுக்க, அந்த நேரத்தில் முன்னேறி முதலிடத்துக்கு வந்தார் வெர்ஸ்டப்பன்.

Also Read: சொதப்பிய ரொனால்டோ & கோ, ஹாட்ரிக் கோல் அடித்த சாலா... மான்செஸ்டர் யுனைடெட்டுக்கு ஏன் இந்த அவமானம்?

30-வது லேப்பில் இரண்டாவதாக வெர்ஸ்ட்டப்பன் பிட் எடுக்கும் போது ஹாமில்ட்டன் அவரை முந்த, 38-வது லேப்பில் ஹாமில்ட்டன் பிட் எடுத்தபோது வெர்ஸ்ட்டப்பன் மீண்டும் ஹாமில்ட்டனை முந்தினார். ஹாமில்ட்டன் இரண்டாவது பிட் எடுத்த பிறகு வெர்ஸ்ட்ப்பனை விட 8.7 நொடிகள் பின்தங்கியிருந்தார். 17 லேப்கள் மீதம் இருந்த நிலையில் புதிய டயர்களுடன் ஹாமில்ட்டன் என்ட்ரி கொடுத்ததார். வெர்ஸ்ட்டப்பன் விரைவாக 30-வது லேப்பிலேயே பிட் எடுத்ததால், போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு ஹாமில்ட்டனுக்குத்தான் அதிகமாகவே இருந்தது.

வெர்ஸ்டப்பன்

இரண்டாவது பிட் எடுத்த பிறகு வெர்ஸ்டப்பனை விட வேகமாகவே இருந்தார் ஹாமில்ட்டன். ஒவ்வொரு லேப்பிலும் அரை நொடிகள் வரை வெர்ஸ்டப்பனுக்கும் ஹாமில்ட்டனுக்குமான இடைவெளி குறைந்தது. கடைசி 6 லேப்கள் இருக்கும் போது வெர்ஸ்ட்டப்பனுக்கும் ஹாமில்ட்டனுக்குமான இடைவெளி 1.8 நொடிகள் மட்டுமே. டர்புலண்ட் ஏர் காரணமாக வெர்ஸ்ட்டபனை முந்த தேவையான பவர் கிடைக்காமல் கடைசி லேப்பில் 1.1 நொடிகள் பின்னதாக போட்டியை நிறைவு செய்து இரண்டாம் இடம்பிடித்தார் ஹாமில்ட்டன். தெளிவான திட்டமிடல், துல்லியமான செயல்பாடு காரணமாக ஒரு நொடி முன்னதாக போட்டியை முடித்து வெற்றியை வசமாக்கினார் வெர்ஸ்டப்பன்.

Also Read: IND vs PAK: பாகிஸ்தான் 29 ஆண்டுகள் காத்திருந்த வெற்றி... கோலியைச் சுற்றும் அணித்தேர்வு விமர்சனங்கள்!

41-வது லேப்பை 1 நிமிடம் 38.495 நொடிகளில் கடந்து வேகமான லேப் புள்ளிகளைத் தன் வசமாக்கினார் ஹாமில்ட்டன். மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களை முறையே செர்ஜியோ பெரஸ், சார்ல்ஸ் லெக்லர்க் மற்றும் டேனியல் ரிக்கார்டோ ஆகியோர் பிடித்தனர். தகுதிச் சுற்றில் நான்காம் இடம் பிடித்து பெனால்டி காரணமாகப் போட்டியை 9-வது இடத்தில் இருந்து தொடங்கியிருந்தாலும் போட்டியின் முடிவில் ஆறாவது இடம் பிடித்திருந்தார் வல்ட்டேரி போட்டாஸ். 5-வது இடத்தில் இருந்து தொடங்கிய கார்லோஸ் சைன்ஸ் இரண்டு இடங்கள் பின்னதாக 7-வது இடத்திலும், 12-வது இடத்தில் இருந்து தொடங்கிய செபாஸ்டியன் வெட்டல் 10-வது இடத்தையும் பிடித்தனர்.

இன்னும் 5 போட்டிகளே மீதம் இருக்கும் நிலையில் அடுத்த கிராண்ட் ப்ரீ போட்டிகள் நடக்கவிருக்கும் மெக்ஸிகோ மற்றும் பிரேசில் இரண்டிலுமே ரெட் புல்லின் கையே ஓங்கியிருக்கிறது. மெட்சிடீஸுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ட்ராக்கிலேயே மெர்சிடீஸை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறது ரெட் புல். அடுத்து வரும் போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது மெர்சிடீஸ். வெற்றி பெறுவாரா ஹாமில்ட்டன்?


source https://sports.vikatan.com/sports-news/verstappen-won-the-united-states-grand-prix-hamilton-finished-second

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக