Ad

ஞாயிறு, 24 அக்டோபர், 2021

பிக் பாஸ் - 22 | அடக்கம் அமரருள் உய்க்கும்… அடங்காமை அபிஷேக்குகளை ஆட்டத்தை விட்டே அகற்றும்!

ஒரு முடிவிலிருந்து கட்டுரையை ஆரம்பிப்போம். அபிஷேக்கின் பிக்பாஸ் பயணம் நேற்றோடு முடிவிற்கு வந்தது. ‘பேச்சாடா பேசின’ என்று அபிஷேக் மீது கொலைவெறியோடு இருந்த பல பார்வையாளர்கள் இந்த முடிவுக்காக சந்தோஷப்பட்டிருப்பார்கள். கூடவே ‘என்னப்பா... இப்படி பொசுக்குன்னு அனுப்பிச்சிட்டாய்ங்க’ என்று உள்ளூற சற்று அதிர்ச்சியும் அடைந்திருக்கலாம். ‘இனிமே ஆட்டம் சுவாரசியமா இருக்குமா?’ என்று கவலையடைந்தவர்களும் சிலர் இருக்கலாம்.

‘’அது நேர்மறையயோ அல்லது எதிர்மறையோ உன்னுடைய எழுத்து வாசிப்பவனுக்கு ஏதாவது ஒரு விதத்தில் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். அல்லாவிடில் நீ எழுதுவது வீண்’’ என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் ஒருமுறை சொல்லியிருந்ததுதான் இப்போது நினைவுக்கு வருகிறது. பார்வையாளர்களில் கணிசமான சதவிகிதத்தினர் வெறுத்தாலும் பிக்பாஸ் வீட்டில் தவிர்க்க முடியாத ஒரு போட்டியாளராக அபிஷேக் இருந்தார் என்பதை மறுக்க முடியாது. ‘‘வெற்றி தோல்வி பத்தியெல்லாம் எனக்கு கவலையில்ல. விளையாட்டில் கிடைக்கும் த்ரில்தான் எனக்கு முக்கியம்’’ என்று அபிஷேக் சொன்னது ஒருவகையில் சரியான ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்தான். பிக்பாஸ் வீட்டில் மிக்சர் சாப்பிடுபவர்கள் எல்லாம் பாதுகாப்பாக இருக்கையில், ஆக்டிவாக செயல்பட்ட அபிஷேக் வெளியேற்றப்படுவதில் சிறிய அநீதி இருக்கிறது. இது ஏன் நிகழ்ந்தது? விரிவாகப் பார்ப்போம்.

அபிஷேக் நிச்சயம் ஒரு அறிவாளி. அறிவு என்பது கத்தி மாதிரி. அதை நல்ல விதமாகவும் பயன்படுத்தலாம். கெட்ட விதமாகவும் பயன்படுத்தலாம். அபிஷேக் தன்னுடைய புத்திக்கூர்மையை பிக்பாஸ் வீட்டில் எப்படி பயன்படுத்தினார் என்பதே கேள்வி. விளையாட்டின் மூலம் தனக்கு கிடைக்கும் அதே சந்தோஷம், மற்றவர்களுக்கும் கிடைக்கும்படி அவர் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். விளையாட்டுக்கு என்று இருக்கும் சில ஆதார தர்மங்களை அவர் கடை பிடித்திருக்க வேண்டும். ஆனால் ராஜூ, இமான், அக்ஷரா போன்றவர்களின் மீது அவருக்கு இருந்த பொறாமை அப்பட்டமாகத் தெரியும்படியாக நடந்து கொண்டார். இதற்காக பல சூழ்ச்சிகளை செய்தார். இது நல்ல ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் அல்ல.

பிக் பாஸ் - 22 |

மக்களுக்கு புத்திசாலிகளை நிச்சயம் பிடிக்கும். ஆனால் அது ராஜூ கொண்டிருப்பதைப் போன்ற புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும். பிரியங்கா குரூப் என்ன கார்னர் செய்தாலும் தனது சமயோசித சாமர்த்தியத்தால் மிக எளிதாக அந்த வியூகத்தை உடைத்துக் கொண்டு ராஜூ வெளியே வருவதை பார்வையாளர்கள் பெரிதும் ரசித்திருப்பார்கள்.

ஒருவர் பார்வையாளர்களின் வெறுப்புக்கு தொடர்ந்து ஆளானாலும் கூட அவர் அத்தனை எளிதில் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட மாட்டார் என்பதுதான் பிக்பாஸின் கடந்த கால வரலாறு. ‘கன்டென்ட்’ முக்கியம் என்பதே இங்கு தாரக மந்திரம். எனில் இந்த கன்டென்ட்டுகளை அள்ளி வழங்கிக் கொண்டிருந்த அபிஷேக், இத்தனை சீக்கிரம் அனுப்பப்பட்டதில் ஏதோவொரு மர்மம் உள்ளது. ‘பார்வையாளர்கள் வாக்களித்தார்கள்’ என்று சொல்ல வேண்டாம். வாக்கெடுப்பு முடிவும் பார்வையாளர்களின் எண்ணமும் பல சமயங்களில் முரண்பட்டிருக்கிறது என்பதை கடந்த காலங்களில் நிறைய பார்த்திருக்கிறோம்.

Also Read: பிக் பாஸ் - 21 | வேட்டையாடி விளையாடிய கமல்ஹாசன்… அபிஷேக்கை ஏன் மக்கள் வெறுக்கிறார்கள்?!

“இவ்வளவு சீக்கிரம் வெளியே வருவீங்கன்னு எதிர்பார்த்தீங்களா?” என்று அபிஷேக்கை மேடையில் கேட்டார் கமல். “எதிர்பார்க்கலை... டாப் 5 வரைக்கும் வருவேன்னு நெனச்சேன்” என்று அபிஷேக் சொன்னது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சமூகவலைதளங்களின் வெறுப்புக்கு ஆளாவதென்பது அபிஷேக்குக்கு புதிதான விஷயம் அல்ல. அவரது திரைப்பட விமர்சனங்கள் அடிப்படையில் புத்திக்கூர்மையுடன் இருக்கும் என்றாலும் அவரது அலட்டலான உடல்மொழி உள்ளிட்ட பல விஷயங்களுக்காக அவரை வெறுத்து கிண்டலடிப்பவர்கள் கணிசமாக இருந்தார்கள். இது அபிஷேக்குக்கும் நன்கு தெரிந்திருக்கும்.

எனில் பிக்பாஸ் போன்ற பெரிய பிளாட்ஃபார்முக்குள் அவர் நுழையும் போது அதற்கேற்ப தன் உத்திகளை சற்று அடக்கி வாசித்திருக்கலாம். மாறாக இணையத்தில் கிடைத்த அதே ‘நெகட்டிவ் பப்ளிசிட்டி’ தன்னை பிக்பாஸ் வீட்டிலும் தொடர்ந்து இருக்க வைக்கும் என்று தப்புக்கணக்கு போட்டு விட்டாரா என்று தெரியவில்லை. மக்கள் என்னதான் வில்லன்களை உள்ளூற ரசித்தாலும் எப்போதுமே ஹீரோவின் பக்கம்தான் நிற்பார்கள். இந்த ஆதாரமான அறவுணர்வுதான் சமூகம் முற்றிலும் நாசம் ஆகாமல் காப்பாற்றி வருகிறது.

பிக் பாஸ் - 22 |

“உங்க விமர்சன திறமையெல்லாம் சரி. ஆனால் அதை உங்க பக்கமும் ட்ரை பண்ணுங்க. கண்ணாடியை திருப்பிப் பிடிங்க” என்று அபிஷேக்குக்கு கமல் தந்த உபதேசம் முக்கியமானது. ’தான் ஏன் இத்தனை விரைவில் வெளியேற்றப்பட்டோம்’ என்கிற சுயபரிசீலனையை அபிஷேக் நிதானமாக மேற்கொள்வார் எனில், அவரின் வருங்கால பயணம் சிறப்பாக அமையும். பிக்பாஸ் வீடு என்பது தற்காலிகமான தோல்வி மட்டுமே. ஆனால் வாழ்க்கையில் ஜெயிப்பது என்பது அதை விடவும் பல மடங்கு உயர்வானது.

நேற்றைய எபிசோடில் மிக சுவாரசியமாக தென்பட்ட ஒரு விஷயம் என்னவெனில், அபிஷேக்கின் வெளியேற்றத்திற்காக வீடே ஒன்றுகூடி ஒப்பாரி வைத்து ‘’என் காயினை எடுத்துக்கோ” என்று கெஞ்சிய போது, அந்த ஃபுட்டேஜ்ஜையெல்லாம் பொறுமையாக கலெக்ட் செய்து கொண்ட பிக்பாஸ், ‘என்னது காயினை தர்றீங்களா... தப்பு தப்பு... அதை நீங்க முடிவு பண்ண முடியாது. நான்தான் முடிவு பண்ணுவேன்’ என்று சொல்லிய அந்த ட்விஸ்ட் அதிசுவாரஸ்யம். அபிஷேக்கே ஒரு கணம் ஆடிப் போயிருப்பார். நிஜமாகவோ அல்லது பாவனையாகவோ, அதுவரை காயின் தர முன்வந்தவர்களின் கண்ணீர்களையெல்லாம் ஒரே நொடியில் காமெடியாக்கிய அந்த அறிவிப்பு ஒரு நல்ல அவல நகைச்சுவை. பிக்பாஸ் பயங்கர விஷமக்காரர். ‘Terms & Conditions apply’ என்பதை முன்னமே சொல்லி விட்டார்.

பிக் பாஸ் - 22 |

மற்றவர்கள் எல்லாம் ‘என் காயினை வெச்சுக்கோ...’ என்று முறையிட்ட போது உண்மையிலேயே ஓடிச் சென்று அதை எடுத்துத் தந்த பாவனியின் செயல் பாராட்டுக்குரியது. அவர் உண்மையான மனிதாபிமானத்துடன் இதைச் செய்தாரா அல்லது அபிஷேக்குடன் முன்னர் போட்டுக் கொண்ட டீல் காரணமாக இதைச் செய்தாரா என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். தனக்கு கிடைத்த சக்தியை இப்படி தக்க சமயத்தில் விட்டுத் தருவதற்கு ஒரு நல்ல மனம் வேண்டும்.

மக்கள் மனமுருகி தன்னைக் காப்பாற்ற முன்வந்தாலும் அபிஷேக் அதை சரியான காரணங்களுடன் சொல்லி மறுத்தது சிறப்பான விஷயம். அபிஷேக்கின் கேரக்ட்டரால் அப்படித்தான் செய்ய முடியும். தன்முனைப்பு உள்ளவர்கள் தன்னுடைய பிரத்யேக திறமையின் வழியாக மட்டுமே எப்போதும் இயங்க விரும்புவார்கள். மற்றவர்களின் தயவில் காப்பாற்றப்படுவது என்பதை தங்களின் திறமைக்கு எதிரான அவமதிப்பாக எடுத்துக் கொள்வார்கள். அந்த உணர்வோடு ஆட்டத்தில் தொடர்ந்து பங்கெடுக்க அபிஷேக்கால் முடியாது. ராஜூ நக்கலாக ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்தால் கூட போதும்.. அபிஷேக் மனம் உடைந்து விடுவார். இந்த நோக்கில் அபிஷேக்கின் அந்த தீர்மானமான முடிவு பாராட்டத்தக்கது.

அபிஷேக்கின் வெளியேற்றத்திற்கு மதுமிதா உள்ளிட்டவர்கள் கண்கலங்குவது கூட சரி. ஆனால் ஊடக அனுபவம் மிகுந்த பிரியங்கா, ஏதோ வாழ்க்கையே பறிபோனது போல் இடிந்து அமர்ந்திருந்த காட்சி ஆச்சரியத்தை அளித்தது. தன்னுடைய ஊடக வாழ்க்கையில் இது போல் பல உணர்ச்சிகரமான நிகழ்வுகளை அருகில் இருந்து பார்த்திருப்பார். பல எலிமினேஷன் தருணங்களை அவர் கடந்து வந்திருப்பார்.

பிக் பாஸ் - 22 |

இது போன்ற ரியாலிட்டி ஷோக்களின் ஃபார்மேட் என்னவென்பது அவருக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். அதனால், அவரின் அழுகை மிகுந்த நாடகத்தனத்தோடு இருந்தது.

கருத்து வேறுபாடு காரணமாக நிரூப்பும் தன்னிடமிருந்து மெல்ல விலகும் நிலையில் அபிஷேக்கும் இப்படி சட்டென்று வெளியேறுவது அவருக்குள் பாதிப்பை ஏற்படுத்தியதோ, என்னமோ! பார்வையாளர்களில் பலர் அபிஷேக்கை வெறுத்தாலும் பிக்பாஸ் வீட்டினுள் அபிஷேக் சில உண்மையான அன்பைச் சம்பாதித்திருக்கிறார் என்று தோன்றுகிறது. குறிப்பாக பெண்களின் ஆதரவு. இதில் பாவனையான கண்ணீரும் கலந்திருக்கலாம் என்றாலும் மதுமிதா போன்றவர்களின் முகங்களில் உண்மையான சோகம் தெரிந்தது. எனில் நமக்கு காட்டப்படாத அல்லது நாம் பார்க்கத் தவறிய அபிஷேக்கின் இன்னொரு கோணமும் இருக்கிறதுபோல.

“நான் களத்தில் இறங்கி ஆடினேன்னு வெச்சுக்கோ ஒரு பய இங்க இருக்க முடியாது. எல்லோரையும் வீட்டுக்கு அனுப்பிச்சுடுவேன்” – அபிஷேக் மேடையில் நின்று கொண்டிருந்த போது அவர் தொடர்பாக ஒளிபரப்பான வீடியோவில் இந்த வசனம் முதற்கொண்டு பல விஷயங்கள் இருந்தன. வடிவேலு சொல்வது போல “இவ்வளவு கொடூரமாவா பேசியிருக்கேன்” என்று அபிஷேக் உள்ளூற நினைத்திருக்கலாம். ‘’எல்லோரையும் வீட்டுக்கு அனுப்பிச்சுடுவேன்” என்று தன்னம்பிக்கையுடன் விட்ட சவடால் எத்தனை அபத்தம் என்பதை இப்போது அவர் உணர்ந்திருக்கலாம். ‘அடக்கம் அமரருள் உய்க்கும்’ என்கிற குறளை ஆயிரம் முறையாவது அபிஷேக் இம்போசிஷன் எழுத வேண்டும் என்று தோன்றுகிறது.

Also Read: பிக் பாஸ்: கடைசி நேரத்தில் காப்பாற்றப்பட்ட சின்னப் பொண்ணு... வெளியேற்றப்பட்ட அபிஷேக்! நடந்தது என்ன?

ஓகே.. எபிசோட் 21-ல் வேறு என்னவெல்லாம் நடந்தது?!

“நமக்கு நிறைய ஆதரவு இருப்பதாக நினைத்துக் கொண்டு உள்ளே சில பேர் இருக்காங்க. மக்களான நீங்க எப்ப வேணா இறக்கி விட்டுடுவீங்கன்னு அவங்களுக்குத் தெரியல” என்பது போன்ற சூட்சுமமான குறிப்புடன் கமல் மேடையில் தோன்றிய போதே ‘ஒருமாதிரியாக’ முடிவு தெரிந்து விட்டது.

“சிபி... தலைவர் போட்டி பத்தி என்ன நினைக்கறீங்க?” என்று கமல் கேட்ட போது ‘பிக்பாஸ் என்பது ஏதோ ஜான்சிபார் தீவில் நடக்கும் போட்டியைப் போலவும் அதற்கும் தமக்கும் சம்பந்தமில்லை என்பது போலவும் ‘நான் அதை ரொம்ப யோசிக்கலை’ என்று உணர்ச்சியேயில்லாத முகத்துடன் சொன்னார் சிபி. (உங்களுக்குப் பதிலா அபிஷேக் யோசிச்சிட்டாருங்க... இனியாவது சுயமா யோசிங்க!). ‘ராஜூவின் கழுத்தில் இருந்த மாலைகள் ஏன் இடம் மாறின? என்று கமலின் அடுத்த தூண்டில் கேள்வி. இதற்கும் குழப்பமான பதில்களே வந்தன. ‘’மாலை வெயிட்டா இருந்தது சார். அதனால கழட்டி சிபிக்குப் போட்டுட்டேன்’’ என்று ராஜூ வழக்கமான நகைச்சுவையில் சொன்னாலும் அவரும் உடைத்துப் பேசவில்லை.

‘’ ‘ராஜூ நாமினேஷன்ல வரட்டும். அவருக்கு ஆதரவு இருக்கான்னு பார்த்துடுவோம்’ன்னு யாராவது தெர்மாமீட்டர் வெச்சு பரிசோதனை பண்ணாங்களா?” என்று பிடியை இன்னமும் இறுக்கினார் கமல். இது பிரியங்காவுக்காக வீசப்பட்ட வலை. ஆனால் தேவையில்லாமல் அநாவசியமாக வந்து விளக்கம் கொடுத்து பங்கப்பட்டார் அபிஷேக். பிரியங்கா கள்ள மௌனத்துடன் இதைக் கடந்து விட்டார்.

பிக் பாஸ் - 22 |

தலைவர் போட்டியின் போது இசையின் கடந்த கால வறுமை பற்றி செய்யப்பட்ட கிண்டல் விவகாரத்துக்கு வந்தார் கமல். ஏறத்தாழ சின்னப்பொண்ணுவைப் போலவே இசையும் சம்பந்தமில்லாமல் எதை எதையோ சொல்லி விட்டு ‘’போட்டில கவனமா இருந்தேன்... அந்தக் கிண்டல் என்னைப் பாதிக்கலை’’ என்று சொன்னது படு ஏமாற்றம். தன்னை பாதிக்கவில்லை என்பதற்காக ஒரு சமூக அநீதியை எளிதில் கடந்து சென்று விட முடியாது. அது போல் ஏராளமானவர்கள் அடையும் பாதிப்பிற்காக குரல் தருவதுதான் சமூகநீதியின் அடையாளம். ஒருவேளை விளையாட்டு மும்முரத்தில் வருண் விளையாட்டிற்காக சொல்லியிருந்தாலும், நட்பு ரீதியாக இதை இசை பிறகு ஆட்சேபித்திருக்க வேண்டும் அல்லது கமல் விசாரணை சபையிலாவது தன் ஆட்சேபத்தை சொல்லியிருக்கலாம்.

“ஓகே... உங்க ஆட்டத்தை நான் கெடுக்க விரும்பலை. ஆனால் கருத்துரிமை என்பதற்கும் ஒரு எல்லை இருக்கிறது அதில் கண்ணியம் தாண்டக்கூடாது’’ என்று கமல் பொதுவாக சொன்ன உபதேசம் சிறப்பு. “பொம்பளைங்களை மரியாதையா நடத்தித்தான் பாருங்களேன்... நல்லா இருக்கும்’’ என்று அவர் சொன்னதிற்குப் பிறகாவது ‘’வாடி...போடி’’ என்கிற குரல்கள் பிக்பாஸ் வீட்டில் ஒலிக்காமல் இருக்கிறதா என்று பார்க்கலாம்.

சிபியின் கேப்டன்ஷிப் பாரபட்சமில்லாமலும் நேர்மையாகவும் சரியாகவும் நடந்ததாக அனைவரும் சொன்னார்கள். இப்படி சைலன்ட்டாக ஸ்கோர் செய்வதில் சிபி வல்லவராக இருக்கிறார். ஆனால் அவர் தன் உணர்ச்சிகளை இன்னமும் வெளிப்படுத்தினால் சிறப்பாக இருக்கும். சந்தடிசாக்கில் அபிஷேக்கின் ஒழுங்கீனங்களை அவர் சபையில் போட்டுக் கொடுக்க “என்னைப் பத்தி ஒரு விஷயமாவது நல்லதா சொல்லுங்கடா’’ என்று கதறினார் அபிஷேக். ‘’தம்பி... பாத்திரம் நல்லா விளக்குவாப்பல’’ என்று சான்றிதழ் தந்தார் சின்னப்பொண்ணு. (திரைப்படத்தின் பாத்திரங்களை விளக்குவதை வெளியில் வீடியோ விமர்சனங்களாக செய்து கொண்டிருந்த அபிஷேக், உள்ளேயும் இந்தப் பழக்கத்தை விடவில்லை போலிருக்கிறது).

பிக் பாஸ் - 22 |

கமலின் கேள்விகள் தந்த குழப்பத்தோடு எலிமினேஷன் திகிலும் சேர்ந்து கொள்ள தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்தார் அபிஷேக். தலைவர் போட்டியில் நிகழ்ந்த ‘திடீர்’ மாற்றங்களைக் குறித்த கமலின் விசாரணை தன் மீது எறியப்பட்ட மறைமுக அம்பு என்பதை அபிஷேக்கால் உணர முடிந்தது. ‘ஒரு டாஸ்க்கை எப்படித்தான் டீல் பண்றது?’ என்பது அவரின் கேள்வி. “இனிமே எப்படி ஆட்டத்தை விளையாடணும்னு தெளிவா ரூல்ஸ் சொல்லிடுங்க. அதன்படி ஆடறோம்” என்பதை இன்னொரு பக்கம் சர்காஸ்டிக்காக கதறிக் கொண்டிருந்தார் பிரியங்கா. அது எந்த விளையாட்டாக இருந்தாலும் அதற்கென்று உள்ள ஆதாரமான தர்மங்களையுமா ஒவ்வொரு முறையும் நினைவுப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்?

மறுபடியும் அகம் டிவி வழியாக உள்ளே வந்த கமல் “தாமரை சமையல் எப்படி இருந்தது? மத்தவங்க இருங்க... இமான் கிட்ட கேட்போம்” என்றது நல்ல குறும்பு. பிக்பாஸ் வீட்டு சமையலின் மீது இமான் வைத்த விமர்சனம் தொடர்பான பிரச்னை மறுபடியும் சபையில் அரங்கேறியது. “சாப்பாடு தாமதம் ஆகாம வந்தா நல்லாயிருக்கும்” என்று பாவனியிடம் இமான் சொல்லியிருக்கிறார் போலிருக்கிறது.

‘’நான் மட்டுமே சமையல் டீம்ல அவதிப்படறேன்’’ என்கிற புலம்பலை பாவனி தொடக்கத்திலிருந்தே சொல்லி வருகிறார். ராஜு வந்து உதவி செய்யாமல் இருப்பது குறித்து அவருக்கு இருக்கிற கேள்விகள் நியாயமானவையே. ஆனால் ராஜூவிடமே இதை நேரடியாக பாவனி கேட்டிருக்கலாம். ஆனால், இப்போது சபையிலோ “என்னைக் கேள்வி கேட்குற அண்ணாச்சி... அதே சமையல் டீம்ல இருக்கிற ராஜுவை ஏன் கேள்வி கேட்கலை. ஃபிரெண்டுன்றதாலயா?” என்று மடக்க முயன்றார். “சாப்பாடு தாமதம் ஆவதைப் பற்றி என் கிட்டயும் அண்ணாச்சி கேட்டார். எனக்கு சுரம் தும்மல் இருந்ததால் சமையல் பக்கம் அதிகம் போகலை’’ என்பது ராஜூவின் விளக்கம். மறுபடியும் அதேதான். இதை பாவனியிடமே ராஜூ நேரடியாக தெரிவித்திருக்கலாம். ‘பாவனி செய்கின்ற சமையலில் யாராவது தலையிட்டால் அவருக்குப் பிடிக்காது’ என்கிற உண்மையும் இப்போது வெளியில் வந்தது. எனில் பாவனியின் புகாரில் இருக்கும் உண்மைதான் என்ன? (ஒரே கஷ்டமப்பா!).

‘’நாணயம் கைப்பற்றும் டாஸ்க் நேர்மையா நடந்ததா” என்கிற கமலின் அடுத்த விசாரணைக்கு ‘குரூப்பா இருந்தவங்களுக்கு எப்படியாவது காயின் கிடைச்சுடும். யாராவது எடுத்தா கூட கத்தாம இருந்தாங்க. ஆனா குரூப்பில் இல்லாமல் தனியாக இருந்தவங்க நிலைமை கஷ்டம்தான்” என்று நேர்மையாக பதில் சொன்னார் நிரூப். அவரின் இந்த கமென்ட் பிரியங்காவைப் பாதித்தது போல. விசாரணை இடைவேளையில் ‘‘நீயும்தான் unfair-ஆ விளையாடினே?” என்று பிரியங்கா, நிரூப்பின் மீது புகார் சொல்ல “நான் unfair-ஆ விளையாடினேன்னு இப்ப ப்ரூவ் பண்ணு... பார்க்கலாம்” என்று பிரியங்காவுடன் மல்லுக்கட்டினார் நிரூப். இருவரையும் சமாதானம் செய்ய அபிஷேக் எடுத்த முயற்சிகள் எடுபடவில்லை. பிரியங்கா தன்னை ஆக்ரமித்து விழுங்குவதிலிருந்து வெளியே தப்பித்து விட வேண்டும் என்கிற நிரூப்பின் உஷார்த்தனத்தை புரிந்து கொள்ள முடிகிறது.

புத்தகப் பரிந்துரை ஏரியாவிற்கு வந்தார் கமல். அவர் இந்த வாரம் பரிந்துரைத்தது ‘முக்தா சீனிவாசன் எழுதிய கதைகள்’. முக்தா சீனிவாசனை இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் பலர் அறிவார்கள். ஆனால் அவர் ஒரு எழுத்தாளர் என்பது பலருக்குத் தெரியாது. கமல் குறிப்பிட்ட சிறுகதைகளைத் தாண்டி திரைப்படத்தின் வரலாறு குறித்த பல நூல்களையும் முக்தா சீனிவாசன் எழுதியுள்ளார்.

பிறகு அகம் டிவி வழியாக உள்ளே வந்த கமல், எவிக்ஷன் பட்டியலில் இருந்தவர்களிடம் சற்று சஸ்பென்ஸ் தந்து விட்டு அபிஷேக்கின் பெயரை அறிவிக்க வீட்டில் உள்ள பலருக்கும் அதிர்ச்சி. (உள்ளே ஆனந்தமும் இருந்திருக்கலாம்).

“அவன் இங்க என்ன பேசினான்... நடந்துக்கிட்டான்றதை காண்பிச்சிருப்பாங்க... மக்கள் அதை பார்த்திருப்பாங்கள்ல?!’ என்று அக்ஷராவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் இமான். ”ஏன் மக்கள் அபிஷேக்குக்கு வாக்களிக்கவில்லை?’’ என்று பிரியங்காவும் நிரூப்பும் தொடர்ந்து அனத்திக் கொண்டிருந்ததற்கான பதில் இது.

“ஏன் மக்களுக்குப் பிடிக்காம போச்சு” என்று ராஜூ கேட்டுக் கொண்டிருந்த போது ‘Aversion’ என்கிற சரியான சொல்லைப் பயன்படுத்தினார் சிபி. ஒருவர் போட்டியில் சரியாக பங்கேற்கவில்லை என்பதற்காக வெளியே அனுப்பப்படுவது வேறு. (நாடியா சாங் மாதிரி). ‘ச்சை... இவவனை மொதல்ல வெளியே அனுப்புங்கப்பா’ என்று வெறுப்புடன் அனுப்பப்படுவது வேறு. அபிஷேக்குக்கு நிகழ்ந்தது இதுவே.

“அபிஷேக் கிட்ட படிச்சு படிச்சு சொன்னேன்’ என்று நிரூப் சொல்லிக் கொண்டிருந்தது உண்மைதான். ‘அடக்கி வாசியுங்க’ என்பதை பிரியங்காவிடமும் அபிஷேக்கிடமும் ஒரு மனச்சாட்சியைப் போல் தொடர்ந்து எச்சரித்துக் கொண்டிருந்தார்.

பாவனி வெளியில் அமர்ந்து கண்கலங்கிக் கொண்டிருந்த போது அபிஷேக்குக்காக அழுகிறாரோ என்று முதலில் தோன்றிற்று. பிறகு பார்த்தால் “என் கிட்ட கேள்வி கேட்ட அண்ணாச்சி. ராஜூ கிட்ட கேட்கலை பார்த்தீங்களா?” என்பதுதான் அவருடைய கண்ணீருக்கு காரணமாம்.

அபிஷேக் இல்லாத வீடு இனி அமைதியாக இருக்குமா? அல்லது வேறு வகை ஆர்ப்பாட்டங்களுடன் தொடருமா என்பதை காத்திருந்துதான் பார்க்க வேண்டும்!



source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/bigg-boss-season-why-abhishek-evicted-from-the-house

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக