Ad

ஞாயிறு, 24 அக்டோபர், 2021

உள்ளாட்சித் தேர்தல் வெற்றியாளர்களை சந்திக்கும் விஜய்! -பாராட்டு விழா உற்சாகத்தில் இயக்கத்தினர்!

நடிகர் விஜய்-யின் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டனர். விஜய் புகைப்படம் மற்றும் கொடியினை பயன்படுத்தி தேர்தலை சந்தித்த நிலையில் 115 வார்டு உறுப்பினருக்கான இடங்களை பிடித்தனர். இந்த நிலையில் வெற்றி பெற்றவர்களையும், அதற்காக உழைத்த நிர்வாகிகளையும் உற்சாகப்படுத்தும் விதமாக பாராட்டு விழா கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாட்டை விஜய் தரப்பு சத்தமில்லாமல் செய்து வருவதாக வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

பந்தல் சிவாவுடன் புஸ்ஸி ஆனந்த்

தமிழகத்தில் இந்த மாதம் ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தென்காசி உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைப்பெற்றது. இதில் திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களும் போட்டியிட்டனர். பெரும்பாலான இடங்களை திமுக கைப்பற்றிய நிலையில் வார்டு உறுப்பினர் பதவியில் 115 இடங்களில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் வெற்றி பெற்றது பலரின் கவனத்தையும் பெற்றதுடன் அரசியலில் பேசு பொருளாகவும் மாறியது.

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் இதனை தற்போது கொண்டாடி வருகின்றனர். 2026ல் எங்க பவரை காட்டுவோம் என இப்போதே பேசத் தொடங்கியதுடன் தலைமை செயலகத்தில் விஜய் இருப்பது போன்ற போட்டோவையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நகரத் தலைவரான ஆதி.ராஜாராம் வெற்றியை கொண்டாடும் விதமாக பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியதுடன் விஜய்யின் படை 50 ஆண்டு கடந்த பெரும் கட்சியான அதிமுகவை பல இடங்களில் பின்னுக்கு தள்ளி விட்டதாக கோஷம் எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.

தேர்தல் பிரசாரத்தில் புஸ்ஸி.ஆனந்த்

இந்நிலையில் வெற்றி பெற்றவர்களுக்கும், வெற்றிக்காக உழைத்தவர்களுக்கும் நடிகர் விஜய் பாராட்டு விழா நடத்த முடிவு செய்திருக்கிறாராம். சென்னை பனையூரில் அமைந்துள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலக இடத்தில் பந்தல் பணிகள் நடைபெற்று இருக்கிறதாம். இதற்கான ஏற்பாட்டை விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளரான புஸ்ஸி.ஆனந்த் செய்து வருகிறார்.

அரசியல் கட்சி மாநாடுகளுக்கு பந்தல் அமைத்து கொடுப்பதில் பெயர் போனவரான தஞ்சாவூரை சேர்ந்த வடுவூர் பந்தல் சிவா பார்வையில் பந்தல் பணிகள் நடைபெற்றுள்ளதாம். நடிகர் விஜய் சொன்னதாக புஸ்ஸி.ஆனந்த் வடுவூர் சிவாவிடம் சில ஆலோசனைகளையும் கூறியிருப்பதாக சொல்லப் படுகிறது.

வெடி வெடித்து கொண்டாடும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்

இது குறித்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தரப்பில் சிலரிடம் பேசினோம், ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தளபதி விஜய் தனது போட்டோ மற்றும் கொடியினை பயன்படுத்த சம்மதம் தெரிவித்தது ஏற்கெனவே திட்டமிடப்பட்ட ஒன்று என்றாலும் அவை மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு பெரும் உற்சாகத்தை தந்தது. வார்டு மெம்பர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் என அனைத்து பதவிகளுக்கும் போட்டியிட்டனர். வாக்காளர்கள் நமக்கு கடவுள் மாதிரி அத மனசுல வச்சுக்கிட்டு ஓட்டு கேளுங்க, நாம செய்த பொது காரியங்களையும் செய்ய இருப்பதையும் கூறி ஓட்டு கேளுங்க, எக்காரணத்தை கொண்டும் ஓட்டுக்கு பணம் கொடுத்திட வேண்டாம் என்பது உள்ளிட்ட சில கண்டிஷன் மற்றும் ஆலோசனைகளை கூறி தேர்தல் களத்தில் சுழல வைத்தார்.

அத்துடன் பெரிய கட்சிகளின் பாணியை பின்பற்றி வெளி மாவட்டங்களில் உள்ள முக்கிய நிர்வாகிகளை பிரசார பணிக்கு அமர்த்த அவர்கள் விறு விறு பிரசாரத்தை மேற்கொண்டனர். விஜயின் முகமாக புஸ்ஸி ஆனந்தும் களத்துக்கு வந்து வாக்கு கேட்டார். இதில் மொத்தம் 115 வார்டு மெம்பர்கள் வெற்றி பெற்று அனைத்து கட்சிகளின் கவனத்தையும் பெற்றோம். விஜய் பிரசாரத்துக்கு வரல அவர் படத்தையும், கொடியையும் காட்டியே 115 இடங்களை பிடிச்சுட்டாங்களேனு பெரிய கட்சியை சேர்ந்த நிர்வாகிகளே ஆச்சர்யம் விலகாமல் பேசத் தொடங்கினர். தற்போது சில இடங்களில் ஊராட்சி மன்ற துணை தலைவர் பதவியையும் கைப்பற்றியிருக்கிறோம்.

விஜய்

ஒன்பது மாவட்ட தேர்தல் தந்த உற்சாகம் அடுத்து வர உள்ள மாநகராட்சி, நகராட்சி தேர்தலில் கவனம் செலுத்த இப்போதே அறிவுறுத்தி விட்டது தலைமை. அதற்கு முன்னதாக வெற்றி பெற்றவர்களையும், வெற்றிகாக உழைத்தவர்களையும் அழைத்து பாராட்டு கூட்டம் நடத்த விஜய் முடிவு செய்திருக்கிறார். இதற்கு முன்பு நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் வெற்றி நிர்வாகிகளை வெற்றி சான்றிதழுடன் வர வைத்த ஸ்டாலின் அந்தந்த மாவட்டங்களுக்கே சென்று பாராட்டி அவர்களுடன் போட்டோவும் எடுத்துக் கொண்டார்.

முதலமைச்சர் ஸ்டாலின் பாணியை தற்போது கையில் எடுத்திருக்கும் விஜய் வெற்றி பெற்றவர்களை சந்தித்து பாராட்டுகிறார். இதற்காக சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்க அலுவலகம் அமைந்துள்ள இடத்தில் பந்தல் வடுவூர் சிவா பந்தல் அமைத்திருக்கிறாராம்.

பந்தல் சிவா,புஸ்ஸி ஆனந்த்

இன்று முதல் இந்த கூட்டம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாளான இன்று வெற்றி பெற்றவர்களை சந்தித்து பேசுகிறாராம் விஜய். பின்னர் மற்ற நாள்களில், தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்களையும், நிர்வாகிகளையும் சந்தித்து பேச இருக்கிறார். பாராட்டு விழா மேடை நிச்சயம் விஜய் நேரடி அரசியலில் தன் பயணத்தை துவக்குவதற்காக மேடையாக இருக்கும். நிர்வாகிகளை உற்சாகப்படுத்தவும், வர இருக்கும் தேர்தலுக்கு தயார் படுத்தவதற்கான கூட்டமாகவே பாராட்டு விழா நடக்க இருப்பதாக தெரிவித்தனர்.



source https://www.vikatan.com/news/politics/vijay-planned-to-meet-the-contestants-who-won-the-local-body-election

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக