Ad

ஞாயிறு, 24 அக்டோபர், 2021

ரிஸ்க் குறைவு; ஆனால், வங்கியை விட அதிக லாபம்; கடன் ஃபண்டுகள் யாருக்கு ஏற்றவை? - 36

மனிதர்களை உருவாக்குவது பிறப்பில் வாய்ந்த குணங்களா; இல்லை வளரும் சூழ்நிலைகளா? இவை இரண்டில் எதுவாக இருந்தாலும், மனிதர்கள் குணத்தால் வேறுபடுகிறார்கள் என்பது மட்டும் உண்மை. வருமானத்தைப் பெருக்க மியூச்சுவல் ஃபண்ட்டை நாடி வருபவர்களில் கூட இந்த வேறுபாட்டைக் காணலாம். `லாபமோ, நஷ்டமோ ஒரு கை பார்க்கலாம்' என்று எண்ணுபவர்கள் ஈக்விட்டி ஃபண்டுகளைத் தேர்வு செய்கிறார்கள். ஆனால், `லாபம் குறைந்தாலும் பரவாயில்லை, பாதுகாப்பு தேவை' என்று எண்ணுபவர்கள் தேர்வு செய்வது கடன் ஃபண்டுகளைத்தான்.

Investment (Representational Image)

Also Read: புதியவர்களுக்கு கைகொடுக்கும் லார்ஜ்கேப் ஈக்விட்டி ஃபண்டுகள்; எப்படி முதலீடு செய்யலாம்? - 35

கடன் ஃபண்டுகள் என்றால் என்ன?

நிலையான வருமானம் தரக்கூடிய கார்பொரேட் பாண்ட்ஸ், அரசு பத்திரங்கள் போன்ற மனி மார்க்கெட் செக்யூரிட்டிகளில் முதலீடு செய்யும் ஃபண்டுகளை கடன் ஃபண்டுகள் என்கிறோம். சந்தையின் ஏற்ற இறக்கங்களால் இந்த வருமானம் பாதிக்கப்படுவதில்லை. மேலும் இந்தப் பத்திரங்களின் முதிர்வு காலம், தரக்கூடிய வட்டி, அந்தக் கம்பெனிகளின் தரக் குறியீடு போன்றவை முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருப்பதாலும் கடன் ஃபண்டுகளில் ரிஸ்க் குறைகிறது.

ஆனாலும் ரிஸ்க் என்பது அறவே இல்லை என்று கூறமுடியாது. கடன் ஃபண்டுகளில் க்ரெடிட் ரிஸ்க் (கம்பெனிகள் வட்டியையும், அசலையும் திருப்பித் தராமல் ஏமாற்றுவது), இன்ட்ரஸ்ட் ரேட் ரிஸ்க் (வட்டி விகிதங்கள் மாறும் சூழ்நிலையில் பத்திரங்களின் மதிப்பு மாறுவது), லிக்விடிட்டி ரிஸ்க் (முதலீட்டாளர்கள் கேட்கும்போது திருப்பித்தர பணம் இல்லாத நிலை) ஆகியவை உண்டு.

Investment (Representational Image)

Also Read: வங்கியை விட அதிக லாபம் தரும் மியூச்சுவல் ஃபண்ட்; இதில் உங்களுக்கேற்ற திட்டம் எது? - 34

வரிவிதிப்பு விதிமுறைகள்

இவற்றிலிருந்து கிடைக்கும் லாபம், முதலீடு செய்து மூன்று வருடங்களுக்கு உட்பட்டதாக இருப்பின், குறுகிய கால முதலீட்டு லாபமாகக் கணக்கில் கொள்ளப்பட்டு, நமது வருட வருமானத்துடன் சேர்க்கப்பட்டு வரி விதிக்கப்படுகிறது. மூன்று வருடங்களுக்கு மேற்பட்டு கிடைக்கும் லாபம் நீண்ட கால முதலீட்டு லாபமாக கணக்கில் கொள்ளப்பட்டு, இண்டெக்ஸேஷனுக்குப் பின் 20% வரி விதிப்பிற்கு ஆளாகிறது.

கடன் ஃபண்டு வகைகள்

கடன் ஃபண்டுகளில் ஒரு நாள் முதல் ஏழு வருடங்களுக்கும் அதிகமான காலம் வரை முதலீடு செய்யலாம். நமக்கு பணம் எப்போது தேவைப்படும் என்பதைத் தீர்மானித்து அதற்கேற்றாற்போல் முதலீடு செய்ய கீழ்க்கண்ட ஃபண்டுகள் உள்ளன:

லிக்விட் ஃபண்ட்ஸ்:

91 நாட்கள் முதிர்வு காலம் கொண்ட மனி மார்கெட் பத்திரங்களில் முதலீடு செய்கிறது. வங்கியின் சேவிங்ஸ் அக்கவுன்ட் வட்டியை விட அதிகம் தர வல்லது.

மனி மார்கெட் ஃபண்ட்:

அதிக பட்சமாக ஒரு வருட முதிர்வு காலம் கொண்ட பத்திரங்களில் முதலீடு செய்கிறது.

டைனமிக் பாண்ட் ஃபண்ட்:

வட்டி விகிதங்களைக் கருத்தில் கொண்டு வெவ்வேறு முதிர்வு காலம் கொண்ட கடன் பத்திரங்களில் முதலீடு செய்கிறது. 3 முதல் 5 வருடம் வரை முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ஏற்றது.

Rupee

Also Read: கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு; சரியான நேரமா இது? - பணம் பண்ணலாம் வாங்க - 33

கார்பொரேட் பாண்ட் ஃபண்ட்:

மூலதனத்தில் 80% வரை நல்ல தரக்குறியீடு உள்ள கம்பெனிகளின் பாண்டுகளில் முதலீடு செய்கிறது. ஆகவே ரிஸ்க் குறைவு.

பேங்கிங்க் அண்ட் பிஎஸ்யூ ஃபண்ட்:

மூலதனத்தில் 80% வரை அரசு வங்கிகளும், நிறுவனங்களும் வெளியிடும் பத்திரங்களில் முதலீடு செய்கிறது.

கில்ட் ஃபண்ட்:

மூலதனத்தில் 80% வரை அரசு பத்திரங்களில் மட்டுமே முதலீடு செய்வதால் க்ரெடிட் ரிஸ்க் மிகவும் குறைவு; ஆனால் இன்ட்ரெஸ்ட் ரேட் ரிஸ்க் உண்டு.

க்ரெடிட் ரிஸ்க் ஃபண்ட்:

மூலதனத்தில் குறைந்த பட்சம் 65% தரக் குறியீடு குறைந்த கம்பெனிகளின் பத்திரங்களில் முதலீடு செய்கிறது. இதனால் லாபம் அதிகரிக்கும் வேளையில் க்ரெடிட் ரிஸ்க்கும் அதிகரிக்கிறது.

ஃப்ளோட்டர் ஃபண்ட்:

மூலதனத்தில் 65% ஃப்ளோட்டிங் ரேட் பத்திரங்களில் முதலீடு செய்வதால் இன்ட்ரெஸ்ட் ரேட் ரிஸ்க் குறைவு.

ஓவர்நைட் ஃபண்ட்:

ஒரே ஒரு நாள் முதிர்வு காலம் கொண்ட பத்திரங்களில் முதலீடு செய்வதால் இதில் க்ரெடிட் ரிஸ்க், இன்ட்ரெஸ்ட் ரேட் ரிஸ்க் என்ற இரண்டுமே இல்லை.

டியூரேஷன் ஃபண்ட்ஸ்:

அல்ட்ரா ஷார்ட் டியூரேஷன் ஃபண்ட்,

லோ டியூரேஷன் ஃபண்ட்,

ஷார்ட் டியூரேஷன் ஃபண்ட்,

மீடியம் டியூரேஷன் ஃபண்ட்,

மீடியம் டு லாங் டியூரேஷன் ஃபண்ட்,

லாங் டியூரேஷன் ஃபண்ட் என்று மூன்று மாதம் முதல் ஏழு வருடம் வரை கடன் ஃபண்டுகள் சந்தையில் உள்ளன. அவை தரும் வருமானமும் பணவீக்கத்தைத் தாண்டியதாக உள்ளது (ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் கான்ஸ்டன்ட் மெச்சூரிட்டி கில்ட் ஃபண்ட் மூன்று வருட ஆவரேஜ் வருமானம் 11.58%, டிஎஸ்பி கவர்ன்மென்ட் செக்யூரிட்டி ஃபண்ட் மூன்று வருட ஆவரேஜ் வருமானம் 11.46%).

Investment (Representational Image)

Also Read: எஃப் அண்ட் ஓ; இளம் முதலீட்டாளர்களின் டார்லிங்காக மாறக் காரணம் என்ன? பணம் பண்ணலாம் வாங்க - 32

முன்பே பார்த்தது போல், `வங்கி தரும் பாதுகாப்பும் வேண்டும்; ஆனால் வங்கிகள் தரும் வட்டியை விட சிறிது அதிகம் வேண்டும்' என்று எண்ணுபவர்கள் எக்ஸ்பென்ஸ் ரேஷியோ குறைவாக இருக்கும் கடன் பண்டுகளைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யலாம். மாதா மாதம் வருமானம் தேவை என்பவர்கள் மன்த்லி இன்கம் ஸ்கீமைத் தேர்வு செய்யலாம்.

- அடுத்து புதன் கிழமை காலை 9 மணிக்கு சந்திப்போம்.



source https://www.vikatan.com/business/investment/an-introduction-to-different-types-of-debt-mutual-fund-schemes

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக