கேரளா மாநிலத்தின் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் 2019 கொரோனாவிற்கு பிறகு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் (வெர்ச்சுவல் கியூ) பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்த ஆண்டு மகரவிளக்கு மண்டலகால பூஜைக்காக நவம்பர் மாதம் 16-ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். ஒரு நாள் 25,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். ஆன்லைனில் முன்பதிவுச் செய்துவிட்டு கொரோனா இரண்டு தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் அல்லது 48 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் சென்றால் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சபரிமலை சீசன் காலங்களில் வெர்ச்சுவல் கியூ சம்பந்தமாக கேரள மாநில அரசு, காவல்துறை உள்ளிட்டவை சார்பில் பல மனுக்கள் எர்ணாகுளம் ஐகோர்ட்டில் விசாரணையில் உள்ளன.
இந்த மனுக்களை விசாரிப்பதற்கு இடையே கேரள ஐகோர்ட் நேற்று சில கேள்விகளை எழுப்பியது. கேரள அரசுக்கும், காவல்துறைக்கும் எதிராக எழுப்பப்பட்ட ஐகோர்ட்டின் கேள்விகள் பரபரப்பை கிளப்பியுள்ளன.
'சபரிமலையில் வெர்ச்சுவல் கியூ ஏற்படுத்த அரசுக்கும், போலீசுக்கும் என்ன அதிகாரம் இருக்கிறது? கோயில் டிரஸ்ட் என்ற முறையில் தேவசம்போர்டு இதுபோன்ற சட்டங்களைக் கொண்டுவரலாம். கோயில் விவகாரங்களை செயல்படுத்துவதில் அரசின் ரோல் என்ன?
வெர்ச்சுவல் கியூ ஏற்படுத்துவதில் தேவசம் போர்டு மற்றும் தேவசம் பெஞ்சின் அனுமதியை அரசு பெற்றிருக்கிறதா?' என ஐகோர்ட் கேள்வி எழுப்பியதுடன் வரும் செவ்வாய்க்கிழமை இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. இதுபற்றி அரசு தரப்பு கூறுகையில், 'பக்தர்களின் எளிமையான தரிசனத்துக்காக வெர்ச்சுவல் கியூ ஏற்படுதப்பட்டது. வெர்ச்சுவல் கியூ நல்ல எண்ணத்தில்தான் தொடங்கப்பட்டது. வெர்ச்சுவல் கியூ 2011-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வெர்ச்சுவல் கியூ மூலம் இதுவரை எண்பது லட்சம் பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் செய்திருக்கிறார்கள். சாதாரண தரிசனமும் நடைமுறையில் இருந்தது. 2019-ல் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக வெர்ச்சுவல் கியூ மூலம் முன்பதிவு செய்பவர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது. கேரள அரசை நோக்கி ஐகோர்ட் பல கேள்விகளை எழுப்பியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
source https://www.vikatan.com/spiritual/news/kerala-high-court-raises-more-questions-on-virtual-queue-in-sabarimala
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக