Ad

சனி, 15 மே, 2021

Covid 19: `வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்வோருக்கான மருந்துப் பட்டியல்!' - வாட்ஸ்அப் தகவல் உண்மையா?

கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டு அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. மருந்துகளுக்கும், ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கும் மக்கள் அல்லாடி வருகிறார்கள். இந்நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவிகிதம் பேர் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள்.

Mask

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவது போன்றே, கொரோனா குறித்த வதந்திகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. சில தினங்களுக்கு முன் சுய தனிமைப்படுத்தலில் வீட்டில் இருப்பவர்கள் அவசியம் வைத்திருக்க வேண்டியவையும், கடைப்பிடிக்க வேண்டியவையும் என்ற தகவல் வாட்ஸ் அப்பில் பலராலும் ஷேர் செய்யப்பட்டது. அதில் அஸித்ரால், ஐவர்மேட்டின், கேப் லூமியா, பேன் 40 போன்ற மருந்து வகைகள் குறிப்பிடப்பட்டு, அதில் என்ன அறிகுறிகள் உள்ளவர்கள், எந்தெந்த மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தகவலுடன் சொல்லப்பட்டு இருந்தது. இந்தத் தகவல் உண்மைதானா, மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இந்த மருந்துகள் எடுத்துக்கொள்வது ஆரோக்கியமானதா என்பது குறித்து பொது மருத்துவர் ராஜேஷ் பகிரும் தகவல்கள் இங்கே.

``கொரோனா என்பது தொற்றுநோய். சமூகத்தில் தீவிரமாகப் பரவி வருகிறது. மருத்துவர்கள் உட்பட பலரும் உயிரிழந்து வருகின்றனர். இந்தச் சூழலில் வதந்திகளைப் பரப்புவதை அவசியம் தவிர்க்க வேண்டும். கொரோனா அறிகுறிகள்  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாக இருக்கும். மூச்சிரைப்பு, சளி, தொண்டைக் கரகரப்பு, வயிற்றுப்போக்கு, தொண்டை வலி, இருமல், காய்ச்சல், சுவை உணர்வின்மை, உடல் வலி, சோர்வு இப்படி ஏதேனும் அறிகுறிகள் இருக்கலாம். அறிகுறிகள் இருந்தால் காலம் தாழ்த்தாமல் மருத்துவர்களை அணுகுங்கள்.

COVID-19

மருத்துவர்கள் பரிந்துரைத்தால் கோவிட் பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும். தேவை இருக்கும் பட்சத்தில் ஸ்கேன் எடுக்கலாம். பரிசோதனை எடுத்த பிறகு, சோதனையின் முடிவுகள் வரும் வரை தனிமைப்படுத்தலில் இருப்பது நல்லது. கொரோனா இருப்பது உறுதியானால் பதற்றம் கொள்ளத் தேவையில்லை. நோயின் தாக்கம் குறைவாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனை பெற்று வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம். நோயின் தாக்கம் தீவிரமாக இருந்தால் மருத்துவமனையின் உதவியை நாடலாம்.

வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முடிந்தால் டபுள் மாஸ்க் அணிந்து கொள்ளலாம். தனி அறையில் இருந்தால் 24 மணி நேரமும் மாஸ்க் அணிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. மற்றவர்கள் உங்களைப் பார்க்க வரும்போதோ, உணவு வழங்கும்போதோ, கழிப்பறை செல்லும்போதோ மாஸ்க் அணிந்தால் போதும். கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நபர், பயன்படுத்திய கழிப்பறை மற்றும் கைகழுவும் இடம், குழாய்கள் போன்றவற்றை வீட்டில் இருக்கும் மற்றவர்கள் பயன்படுத்தும்போது, கிருமிநாசினி கொண்டு நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்த பின்னரே பயன்படுத்த வேண்டும். கொரோனா நோயாளி இருமும்போதோ, தும்மும்போதோ எச்சில் அல்லது சளித்திவலைகள் மற்ற இடங்களில் தெறிக்கலாம். அவ்வாறு கிருமிகள் தெறித்த இடத்தில் மற்றவர்கள் கை வைத்து, சானிடைசர்கள் பயன்படுத்தாமலோ, கைகளைக் கழுவாமலோ கண்களில், மூக்கில் அல்லது வாயில் கை வைத்தால் மட்டுமே கொரோனா வைரஸ் மற்றவர்களுக்கும் பரவும். எனவே, அடிக்கடி சானிடைசர் பயன்படுத்துங்கள்.

Corona Vaccine

வாட்ஸ் அப்பில் பகிரப்பட்ட தகவலில் மூச்சுத் திணறலுக்கு ஒரு மருந்து, இருமலுக்கு ஒரு வகையான மருந்து பயன்படுத்தலாம் என வயது வரம்புடன் குறிப்பிடப்பட்டுள்ளது. இது போன்ற தகவல்களை நம்ப வேண்டாம். எந்த மருத்துவரும் இது போன்ற பொதுப்படையான தகவல்களை வெளியிட மாட்டார்கள். இது போன்றவை பொதுவான தகவல்களே. பின்பற்றுவதற்கு அல்ல.

ஒவ்வொருவரின் உடல்வாகும் ஒவ்வொரு விதமாக இருக்கும். ஒவ்வொருவருக்கும் நோயின் தாக்கத்திலும், அறிகுறிகளிலும் மாற்றங்கள் இருக்கும். எனவே, மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் எந்த மருந்துகளையும் பயன்படுத்தாதீர்கள். தனிமைப்படுத்திக் கொள்பவர்கள் முடிந்தால் வீட்டில் ஒரு பல்ஸ் ஆக்ஸிமீட்டர் வாங்கி வைத்துக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறை ஆக்ஸிஜனின் அளவை செக் செய்து கொள்ளலாம். ஆக்ஸிஜன் அளவு 95-க்குமேல் இருந்தால் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்றே அர்த்தம். பிறப்பிலேயே சளி, ஆஸ்துமா இருப்பவர்களுக்கு மூச்சிரைப்பு அதிகமாக இருக்கலாம். வீணாகப் பயம் கொள்ளாமல் மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்து கொள்ளுங்கள்.

oxygen level

Also Read: கோவிட் 19 பாதிப்பைக் குறிக்கும் சி.டி.ஸ்கேன் மதிப்பெண்... எப்படி வழங்கப்படுகிறது?

கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் தனி தட்டு, டம்ளர்களை பயன்படுத்த வேண்டும். முட்டை, பாதாம் போன்று அதிக அளவிலான புரோட்டின் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதிக அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் நுரையீரலைச் சுற்றியிருக்கும் கெட்டியான சளி இளகி வெளியேறும்.

கொரோனா நேரத்தில் வாட்ஸ்அப் , ஃபேஸ்புக் போன்றவற்றை அதிகம் பார்க்காமல் இருக்கலாம். இதனால் தேவையில்லாத ஸ்ட்ரெஸ் இல்லாமல் இருக்கலாம். வதந்திகளை நம்பி குழப்பிக்கொள்ளாதீர்கள். குறைந்தது 14 நாள்கள் தனிமைப் படுத்திக்கொள்வது அவசியம்.

Mask

Also Read: Covid 19: இளைஞர்களைக் குறிவைக்கும் ஹேப்பி ஹைப்பாக்ஸியா... தப்பிப்பது எப்படி?

கொரோனா பரவல் இருக்கிறது என்றவுடன் மருத்துவமனையில் சேர்ந்துவிட வேண்டும் என்று பதற்றம் கொள்ளாதீர்கள். ஒவ்வொருவரும் அப்படி நினைக்கும்போது தீவிர பாதிப்பில் உள்ளவர்களுக்கு மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் போகலாம். அனைவரும் சேர்ந்து ஒத்துழைத்தால் மட்டுமே நம்மால் கொரோனாவில் இருந்து மீள முடியும். பாதுகாப்பாக இருப்போம்!"



source https://www.vikatan.com/health/healthy/doctor-clarifies-about-fake-message-regarding-medicines-for-home-isolated-people

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக