Ad

சனி, 15 மே, 2021

பிட்காயின்களை டெஸ்லா ஏன் ஏற்காது? எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பின் காரணம் என்ன?

கடந்த காலங்களில் பிட்காயின்களுக்கு அமோக ஆதரவை அளித்து வந்த எலான் மஸ்க், கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிட்காயின்களைப் பயன்படுத்தி டெஸ்லா கார்களை வாங்கலாம் என ட்விட்டரில் அதிரடியாக அறிவித்தார். ஆனால், கடந்த மே 13, திடீரென டெஸ்லா நிறுவனம் பிட்காயின்களை ஏற்காது என்று ட்விட்டரில் மீண்டும் அறிவித்திருக்கிறார். எலான் மஸ்கின் ட்வீட்டைத் தொடர்ந்து பிட்காயினின் மதிப்பு 10 சதவிகிதம் வரை குறைந்திருக்கிறது.

பிட்காயின் | Bitcoin

சில மாதங்களுக்கு முன்பு இதே போன்று டாஜ்காயின்களைப் பற்றி எலான் மஸ்க் ட்வீட் செய்ய, டாஜ்காயின்களின் மதிப்பு இதுவரை இல்லாத அளவு உச்சத்தைத் தொட்டது. டாஜ்காயின் என்பது 'ஷிபா இனு' என்ற ஒரு நாய் இனத்தை வைத்து விளையாட்டாக உருவாக்கப்பட்ட ஒரு கிரிப்டோகரண்ஸி. எலான் மஸ்கின் கருத்தை அடுத்து விளையாட்டாக உருவாக்கப்பட்ட கிரிப்டோகரண்ஸிகளே மதிப்பு ஏற்றம் காணும் போது, அடுத்த கட்ட டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையே பிட்காயின்கள்தான் எனச் சொல்லப்படுகிறது. அதன் மதிப்பு எலான் மஸ்க்கால் ஏற்றம் காணுவதும், வீழ்ச்சியடைவதும் சகஜம்தானே!

பிப்ரவரி மாதம் 1.5 பில்லியன் அமெரிக்கன் டாலர்கள் மதிப்புடைய பிட்காயின்களைதான் வைத்திருப்பதாகத் தெரிவித்திருந்தார் எலான் மஸ்க். ஆனால், தற்போது பிட்காயின்களைத் தன்னுடைய நிறுவனம் பணப் பரிமாற்றத்திற்கான மாற்றாக ஏற்காது எனத் தெரிவித்திருக்கிறார். மேலும், தன்னிடம் இருக்கும் பிட்காயின்களை இனி விற்கப் போவதில்லை எனவும் தெரிவித்திருக்கிறார் அவர்.

பிட்காயின்களை டெஸ்லா ஏன் ஏற்காது?

டெஸ்லா மட்டுமன்றி பல்வேறு நிறுவனங்கள் பிட்காயின் பரிவர்த்தனைகளை அங்கீகரிக்கும் என்ற அறிவிப்பினால், கடந்த மார்ச் மாதம் இதுவரை இல்லாத அளவு 60,000 அமெரிக்க டாலர்கள் அளவு விலை ஏற்றத்தைக் கண்டது பிட்காயின். தற்போது எலான் மஸ்கின் ட்வீட் செய்த இரண்டு மணி நேரத்தில் 54,819 அமெரிக்கன் டாலர்களாக இருந்த அதன் மதிப்பு 45,700 அமெரிக்கன் டாலர்களாகக் குறைந்தது. பின் மீண்டும் 50,196 அமெரிக்கன் டாலர்கள் வரை விலை ஏற்றம் கண்டது.

பிட்காயின்களை மைனிங் செய்வதற்கும் அதனைப் பரிமாற்றங்களுக்குப் பயன்படுத்துவதற்கும் புதை படிவ எரிபொருள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. முக்கியமாக நிலக்கரி அதிக அளவில் பயன்படுத்த வேண்டியுள்ளது. அது காலநிலை மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவேதான் பிட்காயின் பரிவர்த்தனையை டெஸ்லா ஏற்காது என எலான் மஸ்க் தெரிவித்திருக்கிறார். கிரிப்டோகரண்ஸிகள் வரவேற்கத்தக்கது தான், ஆனால், அதற்காக இயற்கைக்குத் தீங்கு விளைவிக்கக்கூடாது எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

பிட்காயின் மைனிங்கிற்கும் காலநிலை மாற்றத்திற்கும் என்ன தொடர்பு?

பிட்காயின்களை மைனிங் செய்வதற்கு அதிக ஆற்றல் கொண்டு செயல்படும் கணினிகளைப் பயன்படுத்த வேண்டும். இந்தக் கணினிகள் இயங்கத் தேவைப்படும் மின்சாரம் புதை படிவ எரிபொருள்களைக் கொண்டே, முக்கியமாக நிலக்கரியைக் கொண்டே தயாரிக்கப்படுகிறது. பிட்காயின் மைனிங்கில் தற்போது சீனாவே அதிகளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலகளவில் மைனிங் செய்யப்படும் பிட்காயின்களில் 75 சதவிகிதம் சீனாவிலேயே மைனிங் செய்யப்படுகின்றன.

எலான் மஸ்க் | Elon Musk

பிட்காயின் மைனிங் செய்யத் தேவைப்படும் மின்சாரத்தை நிலக்கரியைக் கொண்டு தயாரிக்காமல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களைக் கொண்டு தயாரிக்க எந்த பிட்காயின் மைனிங் செய்பவரும் தயாராக இல்லை. காரணம், நிலக்கரி குறைந்த செலவில் கிடைக்கும். அதுவே புதுப்பிக்கத்தக்க ஆற்றலென்றால் அதிக முதலீடு தேவைப்படும். சீனாவின் 10 பெரிய நகரங்கள் வெளியிடும் கரிம வாயுவின் அளவை விட கிரிப்டோகரண்ஸிக்களைத் தயாரிப்பதற்கும் பரிமாற்றம் செய்வதற்கும் வெளியிடப்படும் கரிம வாயுவின் அளவு அதிகமாக இருக்கிறது. மாற்றுப் பணப்பரிமாற்றங்களைப் பற்றி யோசிக்கும் போது எதிர்காலத்தை மனதில் கொண்டுதான் செயல்படவேண்டும்.

இதைத்தான் எலான் மஸ்க்கும் முன்மொழிகிறார்!



source https://www.vikatan.com/technology/tech-news/tesla-ceo-elon-musk-suspends-use-of-bitcoin-heres-why

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக