Ad

வெள்ளி, 14 மே, 2021

கொரோனா சரியானாலும் கட்டாயம் ஓய்வு அவசியம்; ஏன்? - விளக்கும் மருத்துவர்

`கொரோனா வந்து குணமான பிறகும் ஒரு சிலர் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மயக்கமடைந்து விழுகிறார்கள்’ என்கிற செய்தி அடிக்கடி சமூக வலைதளங்களில் தென்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதற்கான மருத்துவ காரணம் என்ன, தீர்வு என்ன என்று நுரையீரல் மருத்துவர் ஜாக்கின் மோசஸிடம் பேசினோம்.

நுரையீரல் மருத்துவர் ஜாக்கின் மோசஸ்

``கொரோனா என்பது நிமோனியா என்கிற நிலைதான். நிமோனியா என்பது நுரையீரலில் சளி அடைத்துக்கொண்டிருப்பது. கொரோனா வைரஸும் நுரையீரலில் சளியை ஏற்படுத்துகிறது. இப்படி நுரையீரலில் சளி ஏற்படுத்துகிற கிருமிகள் உலகில் நிறைய இருக்கின்றன. அவற்றில், இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகையே பயமுறுத்திக்கொண்டிருக்கிறது.

கொரோனா வைரஸ் நுரையீரலைத் தாக்கும்போது, நுரையீரலுக்குள் சளியை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டேன் அல்லவா? அந்த நேரத்தில் நம் உடலானது, தன்னுள் நோய் எதிர்ப்பு அணுக்களை அதிகரிக்க சில ரசாயனங்களைச் சுரக்க வைக்கும். அது தேவையான அளவுக்குச் சுரந்து பிரச்னையை சரிசெய்ய முயற்சி செய்யும். ஆனால், இன்ஃபெக்‌ஷன் அதிகமாக இருக்கும்போது, அதனால் தன்னுடைய வேலையைச் சரியாகச் செய்ய முடியாமல் போகும். விளைவு, நுரையீரல் சேதமாக ஆரம்பிக்கும்.

Lungs

Also Read: Covid Questions: நோய் எதிர்ப்பு உணவுகளால் புண்ணாகிப்போன உணவுக்குழாய்; என்ன செய்வது?

ஒருவருக்கு நிமோனியா வந்து சரியாகும்போது, நுரையீரல் பழையபடி தன்னுடைய ஆரோக்கியமான நிலைக்குத் திரும்பிவிடும். ஆனால், கொரோனா வந்தவர்களுக்கு, நுரையீரல் குணமாக நிறைய நாள்கள் ஆகின்றன. கொரோனா வந்து இரண்டு வாரங்களிலோ, மூன்று வாரங்களிலோ சரியாகிவிட்டாலும், அதாவது கொரோனா வைரஸ் முற்றிலுமாக நம் உடலைவிட்டுச் சென்றுவிட்டாலும்கூட, அது உடலில் ஏற்படுத்திய தாக்கம் சரியாக அதிக நாள்களை எடுத்துக்கொள்கிறது. சிலருக்கு 6 வாரங்கள், சிலருக்கு 8 வாரங்கள், சிலருக்கு 3 மாதங்கள்கூட எடுத்துக்கொள்வதை கோவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளித்துக்கொண்டிருக்கிற அனுபவத்தில் சொல்கிறேன். இதை நாங்கள் `லாங் கோவிட்’ என்கிறோம். அதன் பிறகு, அவர்களுடைய நுரையீரல் பழையபடி முழுமையாக இயங்க ஆரம்பித்துவிடுகிறது. கொரோனா வந்த 99 சதவிகித நோயாளிகள் இப்படித்தான் மீண்டு கொண்டிருக்கிறார்கள். ஒரு சதவிகிதம் நோயாளிகளுக்கு மட்டுமே நுரையீரல் சேதம் முழுவதும் சரியாகாமல் அப்படியே இருக்கிறது. அவர்கள்தான் கொரோனா சரியான பிறகும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மயக்கமடைந்து விழுகிறார்கள்.

`லாங் கோவிட்’ பிரச்னை கொண்டவர்கள் மருத்துவமனையிலேயே 15 அல்லது 20 நாள்கள் வரை ஆக்சிஜன் உதவியுடன் இருக்கிறார்கள். இவர்களுக்கு ஏற்கெனவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அதோடு, மற்ற நோயாளிகளிடமிருந்து வேறு சில தொற்றுகள் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது. இதையெல்லாம் கவனித்துதான் இவர்களை டிஸ்சார்ஜ் செய்யும்போது, ஆக்சிஜன் சப்போர்ட்டுடன் அனுப்பி வைக்கிறோம். தவிர, வீட்டுக்குச் சென்றவுடன் வழக்கமான வேலைகளைச் செய்யாமல் முழுமையாகப் பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று சொல்லி அனுப்புகிறோம். ஏனென்றால், ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கே 100 மீட்டர் தூரம் ஓடினால், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 99 ல் இருந்து 98, 97 என்று இறங்கவே செய்யும். இவர்களுக்கு ஏற்கெனவே நுரையீரலில் பாதிப்பு இருக்கிறது என்பதால், ஓய்வெடுக்காமல் இருந்தால் மூளைக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் மயக்கம் வரவே செய்யும்.

Oxygen cylinder / Representational Image

Also Read: `கொரோனாவைக் கட்டுப்படுத்த இந்தியாவில் 6-8 வாரங்கள் ஊரடங்கு வேண்டும்’- ஐசிஎம்ஆர் தலைவர் சொல்வது என்ன?

இதில் இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கிறது. கொரோனா கிட்டத்தட்ட எல்லோரையும் தாக்கிக் கொண்டிருக்கிறது. இதில் பலபேர் கொரோனாவுக்கு முன்பு வரை உடம்பில் எந்த நோயும் இல்லாமல் நன்றாக இருந்தவர்கள். அதனால், கொரோனா தொற்று வந்து சரியானவுடன் `நமக்குதான் கொரோனா போய்விட்டதே; வழக்கம்போல எல்லா வேலையும் செய்யலாம்’ என்று முடிவெடுத்து விடுகிறார்கள். இதுவும், கொரோனாவுக்குப் பிறகு ஆக்சிஜன் போதாமல் மயக்கமடைவதற்கு இன்னொரு காரணம். அதனால், கொரோனா வந்து சரியானாலும் ஓய்வு எடுப்பது அவசியமோ அவசியம்’’ என்கிறார் டாக்டர் ஜாக்கின் மோசஸ்.



source https://www.vikatan.com/health/healthy/why-some-people-need-complete-rest-after-recovered-from-covid-19-doctor-explains

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக