Ad

ஞாயிறு, 16 மே, 2021

குழந்தைகளுக்கும் இதே பல்ஸ் ஆக்ஸிமீட்டரைத்தான் பயன்படுத்துறீங்களா? தப்பு பண்றீங்க!

சில தினங்களுக்கு முன்னால், அம்மா ஒருவர் தன்னுடைய முகநூலில் `என்னுடைய 8 மாதக் குழந்தை, காலையிலிருந்து சோர்வாக இருக்கிறான். கொரோனாவாக இருக்குமோ என்ற பயத்தில் நாங்கள் பயன்படுத்துகிற பல்ஸ் ஆக்ஸிமீட்டரில் அவனுடைய ஆக்சிஜன் லெவலை பரிசோதித்தேன். முதல் தடவை 95 என்று காட்டியது. இரண்டாவது தடவை 45 எனக் காட்டியது. ஒரு மணி நேரம் கழித்து மறுபடியும் செக் செய்துபார்த்ததில் 96 என்று காட்டியது. ஏன் இப்படி மாறி மாறிக் காட்டுகிறது... எனக்கு பயமாக இருக்கிறது’ என்று பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு பற்றி குழந்தைகள் நல மருத்துவர் பழனிராஜிடம் பேசினோம்.

Child - Representational Image

``பல பெற்றோர்கள் இந்தத் தவற்றைச் செய்துகொண்டிருக்கிறார்கள். வீட்டுக்கு ஒரு தெர்மா மீட்டர் இருப்பதுபோல வீட்டுக்கு ஒரு பல்ஸ் ஆக்ஸி மீட்டர் போதும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இது சரியல்ல.

குழந்தைகளுக்கென தனியாக பீடியாட்ரிக் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் (Pediatric pulse oximeter) இருக்கிறது. பெரியவர்களுக்கான பல்ஸ் ஆக்ஸிமீட்டரைவிட இது சிறியதாக இருக்கும். இந்தக் கருவியையும் இரண்டு வயதுக்கு மேற்பட்ட, பத்து கிலோவுக்கு மேல் எடையிருக்கிற குழந்தைகளிடம்தான் பயன்படுத்த வேண்டும். இதைவிட சின்னக் குழந்தைகளுக்கு, குழந்தைகள் நல மருத்துவர்தான் ஆக்சிஜன் மற்றும் பல்ஸ் லெவலைக் கண்டறிய முடியும். மேலே சொன்ன சம்பவத்தில் இருப்பதுபோல கைக்குழந்தைகளுக்கு ஆக்சிஜன் அளவு மற்றும் பல்ஸ் ரேட்டை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், உடனடியாக ஒரு குழந்தை நல மருத்துவரைச் சந்திப்பதுதான் சரியான தீர்வு.

குழந்தைகள் நல மருத்துவர் பழனிராஜ்

தவிர, எக்காரணம் கொண்டும் பெரியவர்களுக்கான பல்ஸ் ஆக்ஸி மீட்டரை குழந்தைகளுக்குப் பயன்படுத்தாதீர்கள். பெரியவர்களின் விரலை வைக்கிற பகுதியில் குழந்தையின் பிஞ்சு விரலை வைத்தால், விரல் சரியாக செட் ஆகாது. விளைவு, தவறான ரிசல்ட்டையே காட்டும். இந்த பேண்டெமிக் நேரத்தில் இது தேவையில்லாத மன உளைச்சலையே உங்களுக்கு ஏற்படுத்தும்’’ என்றவர், பெரியவர்கள் ஆக்ஸி பல்ஸ் மீட்டரை பயன் படுத்துகையில் எவற்றிலெல்லாம் கவனமாக இருக்க வேண்டுமென்பது பற்றியும் சொல்கிறார்.

``பல்ஸ் ஆக்ஸி மீட்டரில் நம்முடைய விரலை வைக்கும்போது, அதிலிருக்கிற சென்சார் விரலில் இருக்கிற நரம்புகளுக்குள் ஓடுகிற ரத்தத்தில் எவ்வளவு ஆக்சிஜன் இருக்கிறது என்பதை வைத்தே ரிசல்ட்டை காட்டும். பெரியவர்கள் ஈரமான விரலை பல்ஸ் ஆக்ஸி மீட்டரில் வைக்கக் கூடாது. கை விரல்கள் ஜில்லென்று இருக்கும்போது அந்தப் பகுதியில் இருக்கிற நரம்புகளில் ரத்த ஓட்டம் குறைவாக இருக்கும். அதனால், சரியான ஆக்ஸிஜன் லெவலை கருவி காட்டாது. ஈர விரல் மட்டுமல்ல, நெயில் பாலிஷ் வைத்த விரல்களை வைத்தாலும், நெயில் பாலிஷில் இருக்கிற கெமிக்கலை ஊடுருவும்போது சரியான ரிசல்ட்டை காட்டாமல் போவதற்கு வாய்ப்பிருக்கிறது. சில நேரத்தில் மருதாணி வைத்த விரல்களை வைத்தால்கூட ரிசல்ட் மாறுபடலாம்.

oxygen level

Also Read: கோவிட்-19: போர்ட்டபுள் ஆக்ஸிஜன் சிலிண்டர், நெபுலைஸர்... யாருக்கு, எப்போது தேவைப்படும்?

அதனால், பல்ஸ் ஆக்ஸி மீட்டரில் விரலை வைப்பதற்கு முன்னால் உங்கள் கைகள் ஜில்லென்றும் வியர்வையுடனும், அசுத்தமாகவும் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். பல்ஸ் ஆக்ஸி மீட்டரில் வைப்பதற்கு முன்னால் உங்கள் விரல்கள் உலர்வாக இருக்கட்டும். நீங்கள் பதற்றமில்லாமல் இருங்கள்’’ என்கிறார் டாக்டர் பழனிராஜ்.



source https://www.vikatan.com/health/healthy/why-we-shouldnt-use-adult-pulse-oximeter-to-kids-doctor-explains

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக