சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் கிடைக்காததாலும், வயிற்றுப்போக்கு, மூச்சு திணறல் ஏற்பட்டதாலும், மருத்துவமனையில் சரியான கவனிப்பு இல்லாததாலும் விரத்தி அடைந்த தி.மு.க நிர்வாகி ஒருவர் மருத்துவமனைக்குள்ளே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டர்காக வெளியாகியுள்ள தகவல் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாநகராட்சியின் 27வது வார்டு முன்னாள் செயலாளரும், மாநகர தி.மு.க நெசவாளர் அணியின் துணை அமைப்பாளருமாக இருந்தவர் சுப்பிரமணி. வயது 65. இவர் தன் மனைவி, மகன், பேரக் குழந்தைகளோடு சேலம் அரிசிபாளையம் முத்தியாள் பகுதியில் வசித்து வருகிறார். இவர் தான் 15ம் தேதி நள்ளிரவு இப்படி ஒரு விபரீத முடிவை எடுத்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதுபற்றி சுப்பிரமணியின் பேத்தி லாவண்யாவிடம் கேட்டதற்கு, ''எங்க தாத்தா பெயர் சுப்பிரமணி. பாட்டி பெயர் ஜெயலட்சுமி. அவர்களுக்கு சுமதி என்ற ஒரு மகளும், அன்பழகன் என்ற ஒரு மகனும் இருக்கிறார்கள். இருவருக்கு திருமணம் ஆகி மனைவி குழந்தைகளோடு உள்ளனர். கடந்த வாரம் தாத்தாவுக்கு லேசான காய்ச்சல் மூச்சு திணறல் இருந்தது.
அதையடுத்து கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். கொரோனா பாசிடிவ் இல்லையென்றும், ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருப்பதாகவும் தெரிவித்தார்கள். அதையடுத்து பவானி மருத்துவமனை உட்பட பல தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு ஆக்ஸிஜன் இல்லாததால் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அட்மிஷன் போடாமல் ஒரு நாள் முழுவதும் ஒ.பியிலேயே உக்கார வைத்து ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரில் பலருக்கும் ஆக்ஸிஜன் கொடுத்தார்கள்.
இதில் தாத்தாவுக்கு மிகுந்த சோர்வு ஏற்பட்டது. ஒரு வழியாக அடுத்த நாள் நார்மல் வார்டு கொடுத்தார்கள். அதன் பிறகு கெஞ்சி கூத்தாடி ஆக்ஸிஜன் படுக்கை வாங்கினோம். ஆக்ஸிஜன் செலுத்திய பிறகு நன்றாக இருந்தார். ஆனால் மருத்துவமனையில் கவனிப்பு இல்லை. மருந்து, மாத்திரைகள் கேட்க போனாலே முகம் சுழிக்கிறார்கள். திடீரென நேற்று முன்தினம் வயிற்றுப்போக்கும், இருமும் போது மூச்சு திணறலும் ஏற்பட்டது.
மருத்துவ பணியாளர்களிடம் சொல்லியும் கண்டுகொள்ளவில்லை. அதனால் அவருக்கு ரொம்ப சோர்வும், மன உளைச்சலும் இருந்தது. தாத்தாவோடு இரவு பாட்டி மட்டுமே இருந்தாங்க. நேற்று இரவு 1:30 மணிக்கு பாத்ரூம் போனவர் வெகு நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. பிறகு பாட்டி சென்று பார்த்த போது வேட்டியால் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த உடலை கூட யாரும் தொடவில்லை. நாங்க வீட்டிலிருந்து சென்று உடலை எடுத்தோம். மருத்துவமனையில் சரியான கவனிப்பு இல்லாததே எங்க தாத்தா மரணத்திற்கு காரணம்'' என்றார் கண்ணீரோடு.
இதுபற்றி சேலம் அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவமனை வட்டாரத்தில் விசாரித்த போது, ''இது பேரிடர் காலம். யாரையும் குறைச் சொல்ல முடியாது. இரவு பகல் பாராமல் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். குறைந்தது 70 நோயாளிகளுக்கு ஒரு செவிலியர் இருக்கிறார். அரசு முதற்கட்டமான தமிழத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆய்வுகள் மேற்கொண்டு உடனே கூடுதலாக மருத்துவ பணியாளர்களை நியமிக்க வேண்டும்'' என்கிறார்கள்.
source https://www.vikatan.com/government-and-politics/death/grandpa-committed-suicide-due-to-lack-of-care-in-the-government-hospitalsays-granddaughter
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக