Ad

வெள்ளி, 7 மே, 2021

'பேருந்து நடத்துநர் முதல் பொதுப்பணித்துறை அமைச்சர் வரை..!' - எ.வ வேலுவின் அரசியல் பயணம்...

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டத்தில் உள்ள குடலூர் கிராமத்தில், 1951 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி பிறந்த எ.வ. வேலு, தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்றவர். ஆர்மப காலங்களில் பேருந்து நடத்துநராகவும் பணியாற்றியுள்ளார். அதிமுக தொடக்க காலம் முதல் அக்கட்சியில் இருந்த எ.வ. வேலு, 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், தண்டராம்பட்டு சட்டமன்ற தொகுதியில்  அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று வெற்றிக் கணக்கைத் தொடங்கினார். எம்ஜிஆர் மறைவுக்குப் பின் ஜானகி அணியில் சேர்ந்தார். நடிகர் பாக்யராஜ் கட்சி ஆரம்பித்தபோது, அதன் கொள்கை பரப்புச் செயலாளராக பதவி வகித்தார். பின்னர் அந்தக் கட்சி காணாமல் போன நிலையில், ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் இணைய முயன்றார். ஆனால், ஜானகி அணியில் இருந்தவர் என்ற முத்திரையால் ஓரம் கட்டப்பட்டார். இதனையடுத்து திமுகவில் இணைந்தார். தண்டராம்பட்டு தொகுதியில் 2001 மற்றும் 2006 ல் நடைபெற்ற தேர்தல்களில் போட்டியிட்டு அதிமுகவை வீழ்த்தினார். பின்னர் திருவண்ணாமலை தொகுதிக்கு மாறி, 2011, 2016 மற்றும் 2021 தேர்தல்களில் தொடர்ந்து போட்டியிட்டு, ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்துள்ளார் வேலு.

எ.வ.வேலு

வளமான பொருளாதாரத்தை  கொண்டவரான வேலு, சொந்தக் கட்சிக்காரர்களுக்கு மட்டுமல்லாமல் மாற்றுக் கட்சிக்காரர்களுக்கும் செலவு செய்வதில் தாராளம்காட்டுபவர் எனச் சொல்லப்படுவதுண்டு. தனது பண பலத்தாலும் சுறுசுறுப்பாலும் திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளர், திமுக உயர் நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் என அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக உயர்ந்தார்.'படி அளக்கும் பரமசிவம்’ என்று இவரை திருவண்ணாமலை தி.மு.க-வினர் புகழ்வது ஒருபுறம் என்றால், "எல்லோரும் ஏவினால்தான் வேலை பார்ப்பார்கள். ஆனால்,  இவர் யாரும் ஏவாமலேயே எனக்காக வேலை பார்ப்பதால்தான் எ.வ.வேலு என்று பொருத்தமான பெயருடன் இருக்கிறார்'' என்று கருணாநிதியால் பாராட்டப்பட்டவர். கருணாநிதியின் கடைசி காலம் வரை அவருக்கு மிக நெருக்கமானவராக வலம் வந்த. வேலு, பின்னர் அவரது மகனும் கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலினுக்கும் நெருக்கமானவரானார்.  பல்வேறு கல்வி நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர், முன்னாள் சினிமா தயாரிப்பாளர்.கருணாநிதி தலைமையிலான 2006-2011 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் உணவுத் துறை அமைச்சராக இருந்த வேலு, தற்போது மீண்டும் அமைச்சராகி உள்ளார். இந்த முறை ஸ்டாலினின் தலைமையிலான அமைச்சரவையில் வேலுவுக்கு மிகவும் பலம் பொருந்திய பொதுப்பணித்துறை வழங்கப்பட்டிருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/political-journey-of-minister-evvelu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக