Ad

வெள்ளி, 7 மே, 2021

மதுரை அரசு மருத்துவமனையில் திருடுபோன ரெம்டெசிவிர் மருந்துகள்... என்ன நடந்தது?

மதுரை அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் இருப்பு வைக்கப்பட்ட ரெம்டெசிவிர் மருந்துகள் திருடு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவிட் இரண்டாம் அலை தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மருத்துவமனைகளில் இடமின்மை, படுக்கை மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை என நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் உயிர்காக்கும் மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கோவிட்டால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது அரசு மருத்துவமனைகளில் இலவசமாக கிடைக்கிறது. தனியார் மருத்துவமனைகள் அரசிடம் பெற்று அதிக விலைக்கு நோயாளிகளுக்கு பயன்படுத்தி வருகிறார்கள்.

ரெம்டெசிவிர்

தற்போது கோவிட் இரண்டாம் அலையின் காரணத்தால் நோயாளிகள் அதிகரித்து வருவதால் ரெம்டெசிவிர் மருந்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கோவிட்டை குணப்படுத்த ரெம்டெசிவர் முக்கிய மருந்து இல்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தாலும், இன்னொரு பக்கம் சென்னை அரசு மருத்துவமனைகளில் இம்மருந்தை அத்துறையினரே விற்பனை செய்து வருகிறார்கள்.

ரெம்டெசிவிர் மருந்துக்கு டிமாண்ட் ஏற்பட்டுள்ளதால், இம்மருந்தை ரூ.20,000 முதல் ரூ.40,000 வரை கள்ளத்தனமாகப் பெற்று விற்பனை செய்யும் கும்பல்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளன. அரசும் இப்படிப்பட்ட கும்பல்களை பிடித்தும் வருகிறது.

இந்நிலையில் கடந்த 3-ம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் கீழ் செயல்படும் கொரோனா சிறப்பு மருத்துவமனை மருந்துகள் வைப்பறையில் வைக்கப்பட்டிருந்த 8 பெட்டிகளில் இருந்த ரெம்டெசிவிர் மருந்துகள் காணாமல் போனது தெரியவந்தது.

மதுரை உட்பட தென்மாவட்டங்களில் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில், அவர்கள் அதிகமாக பயன்பெற்று வரும் ராஜாஜி மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்துகள் திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவமனை நிர்வாகம் புகார் தெரிவித்த நிலையில் மதிச்சியம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Remdesivir

மருந்து வைக்கப்பட்டிருந்த அறையின் ஊழியர்கள், அங்கு சென்று வந்த மருத்துவர், செவிலியர் ஆகியோரிடம் விசாரணை நடந்து வருகிறது. அங்குள்ள சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்படுகின்றன.

மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள அரசு மருந்துக் கிடங்கிலிருந்து இம்மருந்துகள் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து கொரோனா சிறப்பு மருத்துவமனையிலுள்ள மருந்து சேமிப்பு அறைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த இடைப்பட்ட இடங்களில் திருடப்பட்டுள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

ஆனால், இத்திருட்டில் ஈடுபட்டவர்கள் யார் என்பது இன்னும் உறுதி செய்யப்படாமல் விசாரணை சென்று கொண்டிருக்கிறது. இச்சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/healthy/remdesivir-drugs-stolen-from-madurai-government-hospital

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக