Ad

வியாழன், 6 மே, 2021

`முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..!’ - 50 ஆண்டுகால அரசியலின் வெற்றி

2021 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி, திமுக வெற்றி பெற்று அதன் தலைவர் ஸ்டாலின் முதல் முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றுள்ளார். முதல்வர் நாற்காலியில் அமரவிருக்கும் ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கை நீண்ட நெடியது. அரை நூற்றாண்டு கால அரசியல் களம் கண்ட ஸ்டாலின் அரசியல் பயணம் அவ்வளவு இலகுவானதல்ல.1953-ம் ஆண்டு மார்ச் 1-ல் கருணாநிதியின் துணைவியாரான தயாளு அம்மாள் தனது மூன்றாவது குழந்தையை ஈன்றெடுக்கிறார். குழந்தை பிறந்து நான்காவது நாள் ரஷ்யாவின் அதிபர் ஜோசப் ஸ்டாலின் இறக்கவே, அவரது நினைவாக அந்தக் குழந்தைக்கு 'ஸ்டாலின்' எனப்பெயர் வைத்தார் கருணாநிதி. படிப்பு, விளையாட்டு எனத் துள்ளித்திரிய வேண்டிய பருவத்திலேயே, தன் தந்தையைப் போல் அரசியலில் ஆர்வம் கொண்டார் ஸ்டாலின்.

மு.க.ஸ்டாலின்

தனது 14-வது வயதிலேயே நண்பர்களுடன் சேர்ந்து 'இளைஞர் திமுக' என்ற அமைப்பை கோபாலபுரத்திலிருக்கும்  முடிதிருத்தும் கடை ஒன்றில் வைத்துத்  தொடங்கினார். அதுதான் அவர் திமுகவுக்குள்ளும், அரசியலுக்குள்ளுளும் எடுத்து வைத்த முதல் அடி. அதன் பின், 1968-ம் ஆண்டு நடந்த சென்னை மாநகராட்சித் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பிரசாரம்  மேற்கொண்டார்.

பின்,சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியின் 75வது வட்ட திமுகவின் பகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அதுதான் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட முதல் கட்சிப் பதவி. 1972-ம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்ட திமுக சார்பில் தொடர் ஓட்டமாக 'அண்ணா ஜோதி' யை ஏந்தி வந்து கழகத் தலைவர் கருணாநிதியிடம் வழங்கினார். அதற்கு மறு ஆண்டே1973-ல் திமுகவின் பொதுக்குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆரம்பம் முதலே ஸ்டாலின் அரசியலில் கவனம் செலுத்தியிருந்தாலும், கல்வியையும் கலையையும் அவர் விடவில்லை. ஸ்டாலின் என்ற புரட்சிப் பெயருக்காகவே, விண்ணப்பித்த சர்ச் பார்க் கான்வென்ட்டில்இடம் கிடைக்காமல் போகவே, சென்னை சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்தவக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு மேல்நிலைப் படிப்பை நிறைவு செய்த பின், விவேகானந்தா கல்லூரியில் புகுமுக  வகுப்பையும் ( Pre - University Course) , சென்னை மாநிலக்கல்லூரியில் கல்லூரிப் படிப்பையும் முடித்தார்.

மு.க.ஸ்டாலின்

தனது தந்தையின் அரசியல் உணர்வு மற்றும் கலை ஆர்வம் போலவே  அரசியல் மட்டுமல்லாமல் ஸ்டாலினுக்கும்  நாடகக்கலை மீது ஆர்வம் தொற்றிக்கொண்டது. இவர் நடித்த முதல் நாடகமான'முரசே முழங்கு' திருவல்லிக்கேணி என்.கே.டி. கலா மண்டபத்தில்அரங்கேற்றம் செய்யப்பட்டு, வெற்றிவிழாவும் கண்டது. அதனைத் தொடர்ந்து 'திண்டுக்கல் தீர்ப்பு',  'நீதி தேவன் மயங்குகிறான்', 'நாளை நமதே' என திராவிட கொள்கைகளை விளக்கும் பல்வேறு நாடகங்களில் அரசியல், கலை என கலந்து நடித்தார். இதேபோல், திரைத்துறையிலும் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்திய ஸ்டாலின், 'ஒரே இரத்தம்', 'மக்கள் ஆணையிட்டால்' ஆகிய திரைப்படங்களிலும் 'குறிஞ்சி மலர்' என்ற நெடுந்தொடரிலும் நடித்தார். கலை மட்டுமே நமது பாதை இல்லை என்பதை உணர்ந்த ஸ்டாலின் தீவிர அரசியலில் ஈடுபட ஆயத்தமானார். அதற்காகவே, 1975-ம் ஆண்டு மத்திய இந்திராகாந்தி அரசால் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டபோது, 1976ம் ஆண்டு 'மிசா' சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட ஸ்டாலின் 1977 வரை சுமார் ஓராண்டு காலம் சிறைவாசம் அனுபவித்தார்.

Also Read: இளைஞரணி டூ தி.மு.க. தலைமை... மு.க.ஸ்டாலினின் சிறப்பு புகைப்படத் தொகுப்பு! #HBDStalin படங்கள்: சு.குமரேசன்

அந்த சமயத்தில்தான் ஸ்டாலினுக்கு திருமணம் நடந்திருந்தது. துர்காவை கரம்பிடித்து இல்லற வாழ்க்கையை தொடங்க வேண்டிய ஸ்டாலின், சிறைக் கொட்டடியில் கடும் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டார். ஸ்டாலினுக்கு குறிவைத்து விழுந்த அடிகளைத் தடுத்து தாங்கிப் பிடித்த, திமுக வின் உடன்பிறப்பு சிட்டிபாபு உயிரைவிட்டார். சிறையில் படித்த இந்த பாடங்கள்தான் ஸ்டாலினை தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக உருவெடுக்கவைத்தது. இதைத்தான் பின்னாட்களில் கருணாநிதி, "ஸ்டாலினை உருவாக்கியது நானில்லை, இந்திராகாந்தி தான்!” என சூசகமாக தெரிவித்தார்.

1980- ம் ஆண்டு திமுகவின் இளைஞரணி துவங்கப்பட்டு அதன் 7அமைப்பாளர்களில் ஒருவராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் பயணம் செய்தார். இளைஞரணி கட்டமைப்பை வலுப்படுத்தி மும்முரமாக செயல்பட்ட ஸ்டாலின்  1983- ம் ஆண்டின் இறுதியில் திமுகவின் மாநிலஇளைஞரணி செயலாளராக பணியமர்த்தப்பட்டார். அந்த சமயத்தில்  திமுக இளைஞரணிக்கென சொந்த கட்டடம் வாங்குவதற்காக, 11லட்சம் வரை நிதித் திரட்டினார். சென்னை அன்பகக் கட்டடத்தைச்சொந்தமாகப் பெற்று, வெற்றிக்கொடியும் நாட்டினார்.

மு.க.ஸ்டாலின்

1984-ம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்டார் ஸ்டாலின். தனது முதல் சட்டமன்ற தேர்தலில் சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் தோல்வியைச் சந்தித்தார். ஆனால் அதன்பிறகு நடைபெற்ற,1989 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆயிரம்விளக்கு  தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின், பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக ஆட்சி கலைக்கப்பட்டு, 1991-ம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் மூன்றாவது முறையாக, ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின் தோல்வி அடைந்தார். ராஜீவ்காந்தி மரணத்திற்கு பிறகு எழுந்த அனுதாப அலையால் அந்தத் தேர்தலில் அதிமுக பெரும்வெற்றி பெற  திமுக  படுதோல்வியை சந்தித்தது. அதன்பிறகான 1996, 2001 மற்றும்2006-ம் ஆண்டுகள் முறையே அடுத்தடுத்து நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், அதே ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தொடர்ச்சியாக மூன்று முறையும் வெற்றி பெற்றார் ஸ்டாலின்.

1996- ம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநகராட்சித் தேர்தலிலும் ஸ்டாலின் வெற்றி பெற்றிருந்தார். பஞ்சாயத்து ராஜ் சட்ட திருத்தத்திற்குபிறகு நடைபெற்ற தேர்தல் என்பதால், முதன்முறையாக மக்களே நேரடியாக வாக்களித்து மேயரை தேர்வு செய்தனர். அப்படி மக்கள்  வாக்களித்து தேர்ந்தெடுத்த  சென்னையின் முதல் மேயர் என்ற பெருமையைப் பெற்றார் ஸ்டாலின். ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தபோது, அவர் கொண்டு வந்தநலத் திட்டங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. குறிப்பாக 'சிங்கார சென்னை' என்ற முழக்கத்தோடு அவர் முன்னெடுத்துச் சென்ற நகர்ப்புற கட்டமைப்பு பணிகள் மூலம், 9 மேம்பாலங்கள், 49 குறும்பாலங்கள், 18 பூங்காக்கள், நீரூற்றுகள், மெரினா கடற்கரையை அழகுபடுத்தல், சாலை விரிவாக்கம் என ஸ்டாலினின்அனைத்துப் பணிகளும் தமிழக அரசியல் களத்தில் மாபெரும் பேசு பொருளாக அமைந்தன.

மு.க.ஸ்டாலின்

ஆட்சி நிர்வாகம் மற்றும் சமூக மேம்பாட்டு பங்களிப்புக்காக அண்ணாபல்கலைக்கழகம் ஸ்டாலினுக்கு  கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கியது. மேலும் சாதனையாக, பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ், வின்சன்ட் சர்ச்சில்போன்ற உலகத் தலைவர்கள் பெற்ற, 'கென்டக்கி கர்னல்' விருதினை ஸ்டாலினுக்கு வழங்கி கெளரவித்தது அமெரிக்காவின் கெண்டக்கி மாகாண காமன்வெல்த். 2001ம் ஆண்டு, சென்னை மேயராக, இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஸ்டாலின். ஆனால் 2002ல் ஆட்சியில் இருந்த அதிமுக அரசு, 'ஓரே நபர் இரு அரசுப் பதவிகள் வகிக்க முடியாது' என்ற சட்டதிருத்தத்தம் கொண்டு வந்ததால், மேயர் பதவியை ராஜினாமா செய்து, அதே ஆண்டு தான் வெற்றிபெற்ற சட்ட மன்ற உறுப்பினர்பதவியை மட்டும் வைத்துக்கொண்டார் ஸ்டாலின்.

2003-ம் ஆண்டு நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், ஸ்டாலின் திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டார் 2006ம் ஆண்டு மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைத்தபோது, ஸ்டாலினுக்கு முதன்முறையாக உள்ளாட்சித் துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், பெரியார் சமத்துவபுரம், ஊரககட்டமைப்புத் திட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மற்றும் நமக்கு நாமே திட்டம் போன்ற உள்ளாட்சித்துறை சம்மந்தமான ஏராளமானதிட்டங்களை கொண்டுவந்து செயல்படுத்தினார். இதன் மூலம், 2007-2008ஆண்டு காலத்தில் தமிழக ஊராட்சித் துறையானது, மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் வழங்கிய முதல் பரிசினையும் ஒரு கோடி ரூபாய் ரொக்க பணத்தையும் பெற்றது.

மேலும், 2008-ம் ஆண்டு சிறந்த நிர்வாகத்திற்காக தமிழ்நாடு நகராட்சி துறைக்கு ISO-9000 என்ற பன்னாட்டு தரச்சான்றிதழ் வழங்கப்பட்டது. இதுமட்டுமல்லாமல், இந்தியாவின் இரண்டாவது தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வுசெய்யப்பட்டு, 'நிர்மல் கிராம் புரஸ்கார்' விருதும் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 2008ம் ஆண்டு திமுக பொருளாளராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதன்முறையாக, 2009ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல் 'துணை முதலமைச்சராக' பொறுப்பேற்றுக்கொண்டார் ஸ்டாலின்.

கருணாநிதியுடன் ஸ்டாலின்

2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தல்களில் மாறுதலாக கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின் இரண்டு முறையும் வெற்றி பெற்றார். ஆனால் அந்த இரண்டு முறையும் தி.மு.க ஆட்சி அமைக்கவில்லை. குறிப்பாக, 2009-ம்ஆண்டு நடைபெற்ற ஈழப்போரின்போது திமுக எடுத்த அரசியல்நிலைப்பாடு, தமிழ் மக்களின் மனதில் ஆறாத வடுக்களை ஏற்படுத்த, திமுகவை அகற்றி அதிமுகவை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தினார்கள் என்றும் கூட சொல்லலாம்.

இந்தமுறை திமுக, அடுத்தமுறை அதிமுக என்றிருந்த அரசியல் வழமை மாறி, 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக அதிமுக வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. இருப்பினும் அந்தத் தேர்தலில் ஸ்டாலின் மேற்கொண்ட 'நமக்கு நாமே பிரச்சார பயணம்' வெகுவாக, மக்களைக் கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் அவரது உழைப்பையும் கவனிக்க வைத்தது. விளைவு தோற்றாலும், திமுக 89 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்று, வலுவான எதிர்க்கட்சியானது. முதன்முறையாக ஸ்டாலின், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார். 2017ம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதியின் குன்றிவரும் உடநலத்தைக் கருத்தில் கொண்டு, கட்சியின் பொதுக்குழு ஸ்டாலினை 'திமுகவின்  செயல் தலைவராக' நியமித்தது.

மு.க.ஸ்டாலின்

பின், 2018-ம் ஆண்டு வயதுமூப்பின் காரணமாக திமுக தலைவர் கருணநிதி மறைந்த பிறகு, திமுகவின் இரண்டாவது தலைவராக ஸ்டாலின் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல், ஸ்டாலினின் தலைமைப் பண்பை பரிசோதிக்கும் களமாகவே தமிழக அரசியலில் பார்க்கப்பட்டது. காரணம், திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றபின்  நடந்த முதல் தேர்தல் அது. ஸ்டாலின் தலைமையில் அமைந்த திமுக கூட்டணி போட்டியிட்ட 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் கட்சிக்குள் தனது தலைமைத்துவத்தையும், தொடர்ந்து விமர்சித்து வந்த எதிர்க்கட்சிகளுக்கு தனது பலத்தையும் ஒருசேர நிரூபித்தார் ஸ்டாலின்.

கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலின்

இத்தனை சோதனைகளையும், சாதனைகளையும் கடந்துவந்த ஸ்டாலின், தற்போதுநடந்து முடிந்த, 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதன்முறையாக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 14 வயதில் அரசியலில் காலடி எடுத்து வைத்த  ஸ்டாலின் முதல்வராவதற்கு 54 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. வெறுமனவே கருணாநிதியின் மகன் என்ற அடையாளம் மட்டுமே இதைசாத்தியப்படுத்தவில்லை, மாறாக தனது அரைநூற்றாண்டு கால அரசியல் உழைப்பும் இதில் அடங்கியிருக்கிறது என்பதை இந்தவெற்றியின் மூலம் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/tamilnadu-chief-minister-stalins-political-career

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக