Ad

வெள்ளி, 14 மே, 2021

புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு... உச்ச நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவுகள் என்னென்ன?

இந்தியாவின் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாட்டின் மாநிலங்கள் பலவற்றில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. ஊரடங்கு அனைத்து தரப்பு மக்களை பாதித்தாலும், இதனால் மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொள்வது புலம்பெயர் தொழிலாளர்கள்தான்.

தலைநகர் டெல்லியில் ஊரடங்கினால் புலம்பெயர் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை குறிப்பிட்டு சமூக செயற்பாட்டாளர்கள் ஹர்ஷ் மந்தர், அஞ்சலி பரத்வாஜ், ஜக்தீப் சொக்கர் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர். இவர்கள் சார்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜராக, அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.

சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்கள்

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அஷோக் பூஷண், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு, தேசியத் தலைநகர் பகுதியில் புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்னைகள் குறித்து சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.

இந்தியாவிலுள்ள புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை சுமார் 8 கோடி என்று சுட்டிக்காட்டிய பிரசாந்த் பூஷண், அவர்களில் பெரும்பாலானோரிடம் ரேஷன் அட்டை இல்லை என்பதைக் கவனப்படுத்தினார். எனவே, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஆத்மநிர்பார் திட்டத்தின் கீழ் உலர் ரேஷன் பொருள்களை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பூஷண், ஊரடங்கில் பணியில்லாததால், அவர்களுடைய வங்கிக் கணக்குகளுக்குப் பணம் செலுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

உச்ச நீதிமன்றம்

பூஷணின் இந்த விண்ணப்பத்தை சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா மிகக் கடுமையாக எதிர்த்தார். உத்தரவுகளைப் பிறப்பிப்பதற்குப் பதிலாக, மாநில அரசுகளிடமிருந்து விளக்கங்களைப் பெற வேண்டும் என்று அமர்விடம் அவர் கோரினார்.

வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதிகள், “புலம்பெயர்த் தொழிலாளர்கள் பணமில்லாமல், வேலையில்லாமல் எப்படி வாழ்வார்கள்? கடுமையான யதார்த்தத்தைக் கருத்தில் கொண்டு இப்போதைக்கு அவர்களுக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்” என்று கூறினர்.

Also Read: மகாராஷ்டிரா: மீண்டும் லாக்டெளன் அச்சம்... மும்பை, புனேயை காலி செய்யும் புலம்பெயர் தொழிலாளர்கள்

இதனால் தேசியத் தலைநகர் பகுதியில் இருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு, ஆத்மநிர்பார் திட்டம் அல்லது வேறு ஏதாவது ஒரு திட்டத்தின் கீழ் உலர் ரேஷன் பொருள்களை வழங்க உத்தரவிட்டுள்ளனர். மேலும் ரேஷன் பொருட்கள் வழங்க அவர்களிடம் அடையாள அட்டையை அதிகாரிகள் கேட்கக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

தேசியத் தலைநகர் பகுதியில் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினர்களுக்கும் உணவு கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், சமூக சமையலறை (கம்யூனிட்டி கிச்சன்) அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. மேலும், அங்கிருந்து தங்கள் சொந்த கிராமங்களுக்குத் திரும்பும் புலம்பெயர்த் தொழிலாளர்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதியை நியாயமான கட்டணத்தில் செய்து தரும்படியும் சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/judiciary/the-apex-courts-orders-regarding-the-welfare-of-migrant-workers

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக