Ad

வெள்ளி, 14 மே, 2021

வாணியம்பாடி: 120 அடி கிணற்றில் பாய்ந்த டிராக்டர்! மாணவன் உயிரைப் பறித்த செல்ஃபி மோகம்!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள சின்னமோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் மகன் சஞ்சீவி (வயது 19), சென்னையிலுள்ள தனியார் கேட்டரிங் சென்டரில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். தற்போது, விடுமுறை காரணமாக வீட்டிலிருந்த சஞ்சீவி, நேற்று அதே கிராமத்திலுள்ள ராஜேந்திரன் என்பவரின் நிலத்துக்குச் சென்றுள்ளார். அங்கு, சௌந்தர் என்பவர் டிராக்டரில் உழுதுகொண்டிருந்தார். அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சஞ்சீவி, தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். மதிய இடைவெளியில், டிராக்டர் ஓட்டிய நபர் சாப்பிட சென்றுவிட்டார்.

டிராக்டரில் அமர்ந்து சஞ்சீவி எடுத்த செல்ஃபி

சாவியை வண்டியிலேயே விட்டிருந்ததால், சஞ்சீவி டிராக்டரை இயக்க ஆசைப்பட்டிருக்கிறார். டிராக்டரில் ஏறி ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்த சஞ்சீவி, தனது செல்போனில் செல்ஃபி எடுத்து வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸாக வைத்துள்ளார். ஸ்டேட்டஸில், ‘டுடே டிரைவிங்’ என்று தன்னை மாடர்ன் விவசாயியாக காட்டிக்கொண்டு மகிழ்ந்துள்ளார். தொடர்ந்து, சாவியை ஆன் செய்து டிராக்டரை இயக்க முற்பட்டிருக்கிறார். அப்போது, டிராக்டர் தாறுமாறாக ஓடி அருகிலிருந்த 120 அடி ஆழமுள்ள கிணற்றில் பாய்ந்தது. டிராக்டருடன் சஞ்சீவியும் உள்ளே விழுந்தார்.

சத்தம் கேட்டு ஓடிவந்த விவசாய கூலித்தொழிலாளிகள், உடனடியாக வாணியம்பாடி தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மாணவன் சஞ்சீவியை மீட்க துரிதமாக செயல்பட்டனர். சுமார் 5 மணி நேரம் போராடி கிணற்றிலிருந்த தண்ணீரை நான்கு மின் மோட்டார்கள் மூலம் வெளியேற்றிவிட்டு கிரேன் உதவியுடன் டிராக்டரையும் மேலே தூக்கினர். டிராக்டருக்கு அடியில் சிக்கியிருந்த சஞ்சீவியும் சடலமாக மீட்கப்பட்டார்.

கிணற்றிலிருந்து மீட்கப்படும் டிராக்டர்

அப்போது, கிணற்றைச் சுற்றிலும் திரண்டியிருந்த உறவினர்களும், கிராம மக்களும் கதறி அழுதனர். பின்னர், மாணவன் சஞ்சீவியின் உடலை கைப்பற்றிய அம்பலூர் போலீஸார் பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ஆம்புலன்ஸில் ஏற்றினர். மாணவனின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் ஒப்படைக்கக் கோரி உறவினர்கள் ஆம்புலன்ஸ் முன் அமர்ந்து போராட்டம் செய்தனர். போலீஸார் அவர்களை சமாதானம் செய்ததையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து, மாணவன் உடல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தச் சம்பவம், வாணியம்பாடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/tamilnadu/student-died-in-a-tractor-accident-at-tirupattur

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக