Ad

வெள்ளி, 14 மே, 2021

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்: ஓயாத போர் மேகம்.. 31 குழந்தைகள் உட்பட 119 பேர் உயிரிழந்த சோகம்!

இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் பாலஸ்தீன போராளி அமைப்புக்கும் இடையே நடைபெற்று வரும் போரில் மொத்தம் 119 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, மோதல் ஆரம்பித்த கடந்த திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையிலும் 31 குழந்தைகள் உட்பட மொத்தம் 119 பேர் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், 830-கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கிறது. இதில், இஸ்ரேல் தரப்பில் ஒரு குழந்தை, ஒரு இந்திய பெண் செவிலியர் உட்பட 7 பேரும், அதிகபட்ச பாதிப்பாக பாலஸ்தீன தரப்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் கொடிதின அணிவகுப்பு

ரம்ஜான் நாளன்றும் போர் தொடர்ந்ததால், இஸ்ரேல் ராணுவத்தின் பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க நூற்றுக்கணக்கான பாலஸ்தீனிய குடும்பங்கள் வடக்கு காசாவில் இருக்கும் ஐ.நா நடத்தும் பள்ளிகளில் தஞ்சம் புகுந்துள்ளன. கடந்த திங்கட்கிழமையன்று, ஜெருசலத்தில் இருக்கும் அல்-அக்சா மசூதில் பாலஸ்தீன இஸ்லாமியர்கள் ரம்ஜான் மாத தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இஸ்ரேல் ராணுவத்தினர் அவர்கள் அனைவரையும் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு 300-கும் மேற்பட்ட பாலஸ்தீன இஸ்லாமியர்கள் காயமடைந்தனர்.

பாலஸ்தீன இஸ்லாமியர்கள் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் மேற்கொண்ட அடக்குமுறையால் காசாவிலிருந்து செயல்பட்டுவரும் பாலஸ்தீனிய போராளிக்குழுவான ஹமாஸ் அமைப்பினர் கடும் ஆத்திரமடைந்தனர். மேலும், அதற்கு பதிலடிகொடுக்கும் விதமாக, இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் மற்றும் பீர்ஷிபா உள்ளிட்ட பகுதிகளை குறிவைத்து, நூற்றுக்கும் மேற்பட்ட ராக்கெட் ஏவுகனைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், 7 இஸ்ரேல் நாட்டவர் பலியாகினர்.

ஹமாஸ் அமைப்பின் இந்த தாக்குதலுக்கு எதிர் தாக்குதலாக, இஸ்ரேல் ராணுவமும் கடந்த செவ்வாய்க்கிழமை, பாலஸ்தீனத்தின் காசா பகுதியை குறிவைத்து தாக்கியது. இதில், 35 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மறுநாள் புதன்கிழமையும் தொடர்ந்த இந்த தாக்குதலில், ஹமாஸ் அமைப்பினரின் தலைமையிடமாக இருந்த 13 மாடிக்கட்டிடத்தை இஸ்ரேல் ராணுவத்தின் குண்டுகள் தரைமட்டமாக்கின.

இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல்

உடனடியாக போர் நிறுத்தப்பட்டு அமைதியான சூழல் திரும்ப வேண்டுமென, உலக நாடுகள் அனைத்தும் இஸ்ரேல் நாட்டை அறிவுறுத்தின. அதற்கு பதிலளித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, “போர் நிறுத்தம் செய்யமாட்டோம். காசா மீதான எங்கள் தாக்குதல் தொடரும். எங்கள் தாக்குதல் பலத்தை அதிகரிப்போம். இஸ்ரேல் மீது ஏவுகனைத் தாக்குதல் நடத்திய ஹமாஸ் மிகப்பெரிய விலை கொடுக்கும்” என்று தெரிவித்தார்.

இதனால் இடைவிடாது, வியாழக்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், 17 குழந்தைகள் உட்பட 83 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். ஹமாஸ் அமைப்பினரும் தொடர்ந்து ஆயிரத்திற்கும் அதிகமான ராக்கெட் ஏவுகனைகளிக்கொண்டு எதிர்தாக்குதல் நடத்தினர். இருப்பினும், ஹமாஸ் அமைப்பினர் ஏவிய 90% சதவீத ராக்கெட்டுகளை இஸ்ரேலின் அயர்ன்-ட்ரோம் (Iron-Drome System) என்கிற தற்காப்பு தொழில்நுட்பத்தால், அவற்றை வானிலேயே இடைமறித்து அழித்துவிட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைப்பினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை ரம்ஜான் நாளன்றும் தொடர்ந்து நடந்து வந்த போரில், தற்போது வரை சுமார் 119 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போர் மட்டுமல்லாது, இஸ்ரேல் நாட்டுக்குள்ளும் பல்வேறு இடங்களில் யூதர்களும் இஸ்லாமியர்களும் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டு கலவரங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

மேலும் தீவிரமடைந்து வரும் இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரம் குறித்து, மே 16 வரும் ஞாயிற்றுக்கிழமை ஐ.நா. சபையின் பாதுகாப்பு மன்றம் ஆலோசனைக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. இதன்மூலம் போர் நிறுத்தம் கொண்டுவரப்படுமா? என்ற உலகநாடுகளின் ஏக்கம் நடந்தேறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

உலக நாடுகள் முழுவம் பரவிய கொரோனா, தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தி கோடிக்கணக்கான உயிர்களை கொன்றுகுவித்து வருகிறது. உலகமே கொரோனா வைரஸ் உடன் போரடிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த பிடிவாத யுத்தம் தேவைதானா? என்ற வகையில் உலகத்தலைவர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/international/israel-palestine-conflict-119-persons-died

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக