Ad

வெள்ளி, 7 மே, 2021

8 ஆண்டுகளில் அறுவடையாகும் தேக்கு, புளிய விதையில் பசை... மர விவசாயிகளுக்கான ஆன்லைன் பயிற்சி!

விவசாயத்தில் இன்றைக்குள்ள பிரச்னை வேலையாட்கள் பற்றாக்குறை. இதைச் சமாளிக்க வணிகரீதியான மரம் வளர்ப்பைப் பல விவசாயிகள் முன்னெடுத்து வருகிறார்கள். ஆனால் வணிகரீதியாக மரம் வளர்க்கும் விவசாயிகளில் பெரும்பாலானோர் அதற்கான முறையான தொழில்நுட்பங்களைக் கைக்கொள்வதில்லை. இந்நிலையில், வணிகரீதியில் மரம் வளர்க்கும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு ஆராய்ச்சிகளைச் செய்து வருகிறது கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்.

இரண்டு ஆண்டுகளில் மகசூல் தரும் புளி

தேக்கு, சந்தனம், செம்மரம் உள்ளிட்ட பல்வேறு வகை மரங்களை இங்கு வளர்த்துப் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்ததன் அடிப்படையில் மரங்களின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் வகையில் துல்லிய சாகுபடி முறையை முன்னெடுத்திருக்கிறார்கள் இவர்கள். இந்நிலையில், வணிகரீதியில் மரம் வளர்க்கும் விவசாயிகள் பயன்பெறும் வகையில், மரங்களின் விரைவான வளர்ச்சி தொடர்பான நேரலை நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பசுமை விகடன் மற்றும் `வனத்துக்குள் திருப்பூர்' அமைப்பு இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.

கல்லூரியின் மரச்சாகுபடித் துறையின் தலைவரும் பேராசிரியருமான முனைவர் பாலசுப்பிரமணியன், மரச்சாகுபடி தொடர்பான பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொள்ள இருக்கிறார். ஒரு காலத்தில் 45 ஆண்டுகள் கழித்து அறுவடை செய்து வந்த தேக்கு மரத்தை தற்போது 20 ஆண்டுகளில் அறுவடை செய்கிறோம். தற்போது திசுகல்சர் தேக்கு பிரபலமாகி வருகிறது. திசுகல்சர் தேக்கு நடவு செய்தால் 8 முதல் 10 ஆண்டுகளில் அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கரிலிருந்து குறைந்தபட்சம் ஒருகோடி வருமானம் எடுக்கலாம் என்கிறது ஒரு தரப்பு. அது நடைமுறையில் சாத்தியமா? தேக்கு மரங்களுக்கான பராமரிப்பு முறைகள் குறித்து நேரலை மூலமாக விளக்க இருக்கிறார்.

பாலசுப்பிரமணியன்

தேக்கு மரச் சாகுபடி தொடர்பான அ முதல் ஃ வரை அனைத்து சந்தேகங்களுக்கும் விடையளிக்க இருக்கிறார். அத்துடன் செம்மரம், சந்தனம் சாகுபடி தொடர்பான விளக்கங்களும் இடம்பெறும். புளியமரம் மகசூல் கொடுக்க 5 ஆண்டுகள் ஆகும் என்ற நிலை தற்போது மாறியிருக்கிறது. இரண்டு ஆண்டுகளில் மகசூல் கொடுக்கும் புளி வகை இந்தக் கல்லூரியில் இருக்கிறது. புளி சாகுபடி செய்பவர்களுக்கு கொட்டையைக் கிலோ 5 ரூபாய், 10 ரூபாய் எனக் குறைவான விலைக்குக் கொடுக்கிறோம். அதை வாங்கி சாகுபடி செய்யும் வியாபாரிகள் புளிய விதைகளை பொடியாக்கி ஏற்றுமதி செய்கிறார்கள்.

ஜப்பான், சீனா போன்ற நாடுகளுக்குப் போகும் பொடியிலிருந்து அங்கு ஒருவிதமான பசை எடுக்கப்படுகிறது. உணவுப்பொருள்களில் பயன்படுத்தப்படும் அந்தப் பசை ஒரு கிலோ 2,000 ரூபாய். ஒன்றரை கிலோ விதையிலிருந்து ஒரு கிலோ பசை எடுத்து விட முடியும். இதை இந்தியாவில் யாரும் செய்யாமல் இருந்தார்கள். இந்நிலையில் வனக்கல்லூரி புளிய விதையில் பசை எடுக்கும் தொழில்நுட்பத்திற்கான காப்புரிமை பெற்றுள்ளது. அது தொடர்பாகவும் நேரலை நிகழ்ச்சியில் பகிர்ந்துகொள்ள இருக்கிறார்.

தேக்கு

09.05.2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் 6.30 மணிவரை நடைபெறும் இந்த நேரலை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழேயுள்ள இணைப்பை அழுத்திப் பதி செய்யுங்கள். அனுமதி இலவசம். முன்பதிவு அவசியம்.

https://bit.ly/3ei5RxT



source https://www.vikatan.com/news/agriculture/pasumai-vikatan-online-training-on-new-tree-farming-techniques

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக